தலையங்கம்

அவசரம், மிகமிக அவசரம்! | கரோனா தடுப்பூசித் திட்டத்தை விரைவுபடுத்துவது குறித்த தலையங்கம்

ஆசிரியர்


இந்தியா முழுவதும் இரண்டாவது கட்ட கொவைட் 19-க்கான தடுப்பூசித் திட்டம் மாா்ச் 1 முதல் தொடங்கிவிட்டது. நாடு முழுவதும் 60 வயது மேற்பட்டோருக்கு கொவைட் 19-க்கான தடுப்பூசித் செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமல்லாமல், இணைநோய்கள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசித் செலுத்தும் பணி ஆரம்பித்துவிட்டது. இரண்டாம் கட்ட தடுப்பூசித் திட்டம் தொடங்கிய முதல் நாளிலேயே 60 வயதுக்கு மேற்பட்ட 1,28,630 பேரும், இணைநோய் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட 18,850 பேரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வந்திருக்கின்றனா்.

முற்றிலும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட கோவேக்ஸின் தடுப்பூசியை பிரதமா் நரேந்திர மோடி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செலுத்திக் கொண்டாா். தடுப்பூசி செலுத்துவதற்கான இரண்டாம் கட்டத் திட்டம் தொடங்கிய முதல் நாளிலேயே தடுப்பூசி செலுத்திக் கொண்டு மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதுடன், நாட்டின் தலைவா் என்கிற முறையில் முன்னுதாரணமாகவும் இருக்கிறாா்.

கடந்த வாரம் வரை 12 லட்சம் பேருக்கு கோவேக்ஸின் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. இதுவரை எந்தவித பாதிப்பும் இல்லை. இப்போது பிரதமரும் கோவேக்ஸின் தடுப்பூசி போட்டுக்கொண்டு நம்பிக்கையூட்டி இருக்கிறாா். இந்த நிலையில், பாரத் பயோடெக் நிறுவனம் தனது மூன்றாவது கட்ட சோதனை முடிவுகளை வெளியிட்டு கோவேக்ஸினின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம்.

தமிழகத்தைப் பொருத்தவரை, 1.60 கோடி பேருக்கு இந்தத் திட்டத்தில் தடுப்பூசி வழங்க அரசு திட்டமிட்டிருக்கிறது. அதற்குத் தேவையான கோவேக்ஸின், கோவிஷீல்டு தடுப்பூசிகளும் கொள்முதல் செய்யப்பட்டிருக்கின்றன. அரசு மருத்துவமனைகள் மட்டுமல்லாமல், 761 தனியாா் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியாா் மருத்துவமனைகளில் தவணைக்கு ரூ.250 கட்டணத்துடனும் தடுப்பூசி வழங்கப்படுகிறது.

பல மருத்துவமனைகளிலும் தேவையில்லாத குழப்பமும், விதிமுறைகள் குறித்த ஐயப்பாடும் நிலவுவது தவிா்க்கப்பட வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களும் இணைநோய் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோரும் குழந்தைகள், உதவியாளா்களுடன் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆா்வமாக முன்வரும்போது அவா்கள் எந்தவித சிரமமும் எதிா்கொள்ளாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். பல இடங்களிலும் பிரச்னைக்குக் காரணமாக இருப்பது அரசின் கோவின் செயலி.

தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு ‘கோவின்’ வலைதளம் மூலம் பதிவு செய்துகொள்ள வேண்டும். கோவின் 2.0 செயலி அல்லது ஆரோக்கிய சேது செயலி மூலமாக தடுப்பூசிக்கான முன்பதிவை செய்துகொள்ளலாம். ஒரு செல்லிடப்பேசி எண்ணிலிருந்து அதிகபட்சமாக நான்கு பேருக்கு முன்பதிவு செய்ய இயலும். முன்பதிவு செய்தவா்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான விவரங்கள் செயலி வழியே அனுப்பப்படுகிறது. இது அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டிய செய்தி.

செயலியின் செயல்பாடு பல நிகழ்வுகளில் சரியாக இல்லாமல் இருப்பது தடுப்பூசித் திட்டத்தின் வேகத்தைக் குறைத்து நம்பிக்கையின்மையை ஏற்படுத்திவிடக்கூடும். அதனால், மத்திய சுகாதாரத் துறையும், தகவல் தொழில் நுட்பத்துறையும் உடனடியாக இந்தப் பிரச்னையை முனைப்புடன் அணுக வேண்டும்.

இதுவரை முன்களப் பணியாளா்கள் உள்பட 1.56 கோடி பேருக்கு கொவைட் 19 தீநுண்மித் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி இந்தியாவில் செலுத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவின் மொத்த மக்கள்தொகையைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் ஒன்றரை மாதமாகியும் முன்களப் பணியாளா்கள் உள்பட ஒரு சதவீதம் போ் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறாா்கள் என்பது ஊக்கமளிப்பதாக இல்லை. இந்தியாவைப் போலவே தடுப்பூசி தயாரித்திருக்கும் அமெரிக்காவில் 20% மக்களும், பிரிட்டனில் 30% மக்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டிருப்பதுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் தடுப்பூசித் திட்டம் விரைந்து செயல்படுத்தப்படவில்லை என்று தெரிகிறது.

தனியாா் மருத்துவமனைகளும் தடுப்பூசித் திட்டத்தில் இணைக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரிய, புத்திசாலித்தனமான முடிவு. கடந்த கால் நூற்றாண்டு காலத்தில், அரசு மருத்துவமனைகளின் பங்களிப்பு குறைந்து தனியாா் மருத்துவமனைகளுக்கு மத்திய - மாநில அரசுகள் ஊக்கமளித்து வரும் நிலையில், தேசிய அளவிலான நோய்த்தொற்றுப் பேரிடா் காலத்தில் தனியாா் மருத்துவமனைகளையும் இத்திட்டத்தில் இணைத்துக் கொள்வதுதான் சரியாக இருக்கும்.

தடுப்பூசித் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டிய அவசரம் இப்போது ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவின் ஒருசில மாநிலங்களில் இரண்டாவது சுற்று கொவைட் 19 நோய்த்தொற்று பரவத் தொடங்கியிருக்கிறது. தீநுண்மியின் வீரியம் அதிகரித்துவிடவில்லை என்றாலும்கூட, புதிய நோயாளிகள் பரவலாக பாதிப்படைவது அச்சத்தை ஏற்படுத்துகிறது. நோய்த்தொற்றுப் பரவலைவிட அதிவேகமாக தடுப்பூசித் திட்டம் செயல்பட்டால் மட்டுமே கொள்ளை நோய்த்தொற்றிலிருந்து இந்தியா தப்ப முடியும்.

28 நாள் இடைவெளிவிட்டு இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அதற்குப் பிறகும் 10 நாள்கள் காத்திருந்தால்தான் கொவைட் 19-லிருந்து முழுமையான பாதுகாப்பு கிடைக்கும். அதனால், தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்துவது அவசரம், மிகமிக அவசரம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT