தலையங்கம்

மோசடியாளர்களும் சட்டமும்! | பொருளாதாரக் குற்றவாளிகள் தப்புவது குறித்த தலையங்கம்

ஆசிரியர்

 இந்தியாவில் எந்தவொரு பிரச்னையோ முறைகேடோ சுட்டிக்காட்டப்பட்டால் உடனே "சட்டம் தனது கடமையைச் செய்யும்' என்று கூறி ஆட்சியாளர்களும் உயரதிகாரிகளும் தப்பித்துக் கொள்கிறார்கள். சட்டம் தனது கடமையை முறையாக செய்யுமேயானால், இந்தியச் சிறைச்சாலைகளில் விசாரணைக் கைதிகளாக இத்தனை பேர் இருக்கமாட்டார்கள். ஆயிரக்கணக்கானோர் பிணையில் வெளியே வந்து ஆண்டுக்கணக்கில் வழக்கை நீட்டித்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
 இந்தியாவிற்குள்தான் இப்படி என்றால், அரசையும், அரசுத் துறை வங்கிகளையும்கூட ஏமாற்றிவிட்டு வெளிநாடுகளில் தாங்கள் கொள்ளை அடித்த பல கோடி ரூபாய் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள் ஏராளம். அதேபோல, பல அரசியல்வாதிகளும் தங்களது ஊழல் பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பி அந்நிய முதலீடு என்கிற பெயரில் இந்தியாவுக்குத் திருப்பிக் கொண்டுவருவதற்கு அரசின் சட்ட திட்டங்களையே பயன்படுத்தும் விசித்திரமும் இந்தியாவுக்கே உரித்தான மரபு.
 இந்தப் பின்னணியில்தான் பிரிட்டனில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றம் வைர வியாபாரி நீரவ் மோடியை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பலாம் என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அரசுத் துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் இரண்டு பில்லியன் டாலர் (சுமார் ரூ.14,660 கோடி) மோசடி செய்து அந்த வங்கியையே நிலைகுலைய வைத்திருப்பவர் நீரவ் மோடி. இப்போது கிடைத்த விலைக்கு அந்த வங்கியை தனியாருக்கு விற்றுவிடலாமா என்று அரசை யோசிக்க வைத்திருக்கும் அளவுக்கு நீரவ் மோடியின் கைங்கரியம் பங்களித்திருக்கிறது.
 அரசுத் துறை வங்கியில் மோசடி நடத்தியது மட்டுமல்லாமல், கள்ளப் பணச் சலவையில் ஈடுபட்டது, சாட்சிகளை கலைக்க முற்பட்டது, தடயங்களை அழிக்க முயற்சித்தது என்று நீரவ் மோடி மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள். 2018 ஜனவரி மாதம் பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வெளிப்பட்டதிலிருந்து இந்திய காவல் துறை அவரை கைது செய்வதற்கு என்னவெல்லாமோ முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறது.
 இந்தியாவின் பொருளாதார குற்றச் சட்டங்களை வைர வியாபாரி நீரவ் மோடி எதிர்கொள்ள வேண்டிய கட்டம் நெருங்கி வருகிறது. வெஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியுமேயானால், நீரவ் மோடியைக் கைது செய்து இந்தியாவுக்கு அழைத்து வந்து விசாரணைக் கூண்டில் ஏற்றி விடலாம். ஆனால் அது அவ்வளவு சுலபமல்ல என்பதையும் கூறியாக வேண்டும்.
 2019 மார்ச் மாதம் நீரவ் மோடி, பிரிட்டிஷ் காவல் துறையால் கைது செய்யப்பட்டு அது முதல் அந்த நாட்டு சிறையில் இருந்து வருகிறார். அவர் தப்பி ஓடிவிடக் கூடாது என்பதால், அவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஏழு பிணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. இந்திய காவல்துறையிடம் சிக்காமல் தலைமறைவாக பிரிட்டிஷ் சிறைச்சாலையில் இருக்கும் நீரவ் மோடி, அவர்களிடம் சிக்காமலும் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பும் முயற்சி வெற்றி பெறாமலும் இருப்பதற்கான எல்லா வழிமுறைகளையும் கையாளக்கூடும். பிரிட்டனின் உச்சநீதிமன்றம் வரை வாதாடுவதற்கான வசதி அவரிடம் இருக்கிறது. அவர் பிரிட்டிஷ் அரசிடம் அடைக்கலம் கோரினாலும்கூட, ஆச்சரியப்படுவதற்கில்லை.
 நீரவ் மோடி மட்டுமல்ல, மதுபான தயாரிப்பு சக்கரவர்த்தி விஜய் மல்லையாவும் தேடப்படும் குற்றவாளியாக பிரிட்டனில்தான் இருக்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக பிரிட்டனில் இருக்கும் விஜய் மல்லையாவுக்கு எதிராகவும் நீதிமன்றத் தீர்ப்புகள் வந்திருக்கின்றன. கீழமை நீதிமன்றம் ஒன்று அவரை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புவதற்கு ஒப்புதல் வழங்கி மூன்று ஆண்டுகளாகிவிட்டன.
 அந்த உத்தரவுக்கு எதிராக அவர் பிரிட்டனிலுள்ள உயர்நீதிமன்றம், பிரிட்டிஷ் உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் செய்த முறையீடுகள் நிராகரிக்கப்பட்டன. அப்படியிருந்தும்கூட, அவர் இந்தியாவின் சிபிஐ-யாலோ, பொருளாதார குற்றப் பிரிவாலோ கைது செய்யப்படவும், இந்தியாவுக்குக் கொண்டுவரப்படவும் இல்லை.
 கடந்த மாதம் நடந்த விஜய் மல்லையாவின் திவால் மனு மீதான விசாரணையில் அவர் இங்கிலாந்தில் தொடர்ந்து தங்குவதற்கு பிரிட்டனின் உள்துறை செயலர் பிரீத்தி படேலை அணுகியிருப்பதாக கூறப்படுகிறது. விஜய் மல்லையா ரகசியமாக பிரிட்டனில் அகதியாக அடைக்கலம் கோரி மனு செய்திருக்கிறார் என்கிற செய்தி கசிந்திருக்கிறது. அவரது கிங் பிஷர் விமான நிறுவனம் இந்தியாவிலுள்ள வங்கிகளில் சுமார் 9,000 கோடி ரூபாய் வரை கடன் வாங்கி திரும்பச் செலுத்தவில்லை என்பதால் அவரது நிறுவனம் முடக்கப்பட்டது. அரசால் அவரை கைது செய்து கொண்டுவர முடியவில்லை.
 இந்தியாவின் பிரச்னை சட்ட விதிமுறைகள் இல்லாமல் இருப்பதல்ல. அதை நடைமுறைப்படுத்துபவர்கள் ஊழல்வாதிகளாக இருக்கிறார்கள் என்பதுதான். அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் மோசடியாளர்களுக்கும் இடையேயான ரகசிய உறவு விசாரணையை மெத்தனப்படுத்துகிறது. வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருப்பதால் கையூட்டு பெற்றுக்கொண்டு மோசடியாளர்களை, ஆட்சியாளர்களின் அனுமதியுடன் அதிகாரிகள் தப்பவிடுகிறார்கள்.
 பல கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடுபவர்களைப் பிடிப்பதிலும், அழைத்து வந்து சட்டத்தின் முன் நிறுத்துவதிலும் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா மிகவும் பின்தங்கியிருக்கிறது. அதனால்தான் கடந்த ஆறு ஆண்டுகளில் இந்தியாவில் மோசடி செய்துவிட்டுத் தப்பியோடிய 72 பொருளாதாரக் குற்றவாளிகளில், இரண்டே இரண்டு பேரை மட்டுமே நம்மால் திருப்பிக் கொண்டுவர முடிந்திருக்கிறது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

SCROLL FOR NEXT