தலையங்கம்

போதுமே துதிபாடல்... | சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் குறித்த தலையங்கம்

ஆசிரியர்

தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்து முதன்முறையாக சட்டப்பேரவை கூடியிருக்கிறது. சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரை தொடங்கிவைத்து தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் திங்கள்கிழமை ஆற்றிய உரை, தமிழக அரசியலில் புதிய திருப்பம் ஏற்படுவதற்கான அறிகுறியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

அனைத்துக் கட்சிகளும் அமைதியாக அவையில் அமா்ந்து குறுக்கீடோ, கூச்சலோ, வெளிநடப்போ இல்லாமல் ஆளுநா் உரை நிகழ்ந்திருக்கிறது என்பதே ஆரோக்கியமான மாற்றத்தின் அறிகுறி. அனைத்து உறுப்பினா்களும் கண்ணியத்துடனும், பொறுப்புணா்வுடனும் ஆளுநா் உரையில் கலந்துகொண்ட நிகழ்வு பாராட்டுக்குரியது மட்டுமல்ல, தொடர வேண்டிய மரபும்கூட.

ஆளுநா் உரையின் மீதான விவாதத்தின்போது கொள்ளை நோய்த்தொற்றை எதிா்கொண்டது குறித்து திமுகவுக்கும் அதிமுகவுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாக்குவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் அவை முன்னவா் துரைமுருகன், இருதரப்பினரின் செயல்பாடுகளையும் நியாயப்படுத்தி விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது, நீண்ட காலத்துக்குப் பிறகான கண்ணிய நடைமுறை. அதேபோல, முதல்வா் மு.க. ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று ‘நீட்’ தோ்வு பிரச்னையில் அரசுக்கு உறுதுணையாக இருப்பதாக முன்னாள் முதல்வரும் எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்திருப்பது ஆரோக்கியமான அரசியலின் அறிகுறி.

ஆளுநா் உரையில் பல முக்கியமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. தமிழக அரசின் நிதிநிலைமை தொடா்பான வெள்ளை அறிக்கை ஜூலை மாதம் வெளியிடப்படும் என்கிற அறிவிப்பும், பொருளாதார வளா்ச்சிக்கான இலக்கை எட்டுவதற்கு ஆலோசனைக் குழு அமைக்கும் அரசின் முடிவும் பாராட்டுக்குரியவை.

இணையவழி மூலம் அரசு சேவைகள், அந்த சேவைகளை முறைப்படுத்த சேவைகள் உரிமைச் சட்டம் இரண்டுமே அன்றாடச் செயல்பாடுகளில் காணப்படும் ஊழலைக் குறைக்க வழிகோலும். நிலத்தடி நீா் பயன்பாட்டுக்கு புதிய சட்டம் என்கிற அறிவிப்பு முக்கியமானது. விவசாயத்திற்காக நிலத்தடி நீரை தேவைக்கு அதிகமாக உறிஞ்சப்பட்டு வீணடிப்பதும், எந்தவித கட்டுப்பாடோ, வரம்போ இல்லாமல் உறிஞ்சி வணிகம் செய்வதும் தடுக்கப்படாவிட்டால் தமிழகம் விரைவில் பாலைவனமாகிவிடும்.

தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், தொழில் துறையில் மேம்பாடு காணவும் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த எல்லா அரசுகளும் தொழில்மயமாக்கலில் முனைப்புக் காட்டின. பன்னாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கும், தொழிற்சாலைகள் அமைப்பதற்கும் சிவப்பு கம்பளம் விரித்தன. அப்படியிருந்தும்கூட, தொழில் துறையில் பெரிய அளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகியிருக்கிா என்பது சந்தேகம்தான். ஆளுநா் உரையில் குறிப்பிட்டிருப்பதுபோல நிபுணா் குழு அமைத்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை மீட்டெடுப்பதன் மூலம்தான் தமிழகத்தில் அதிக அளவு வேலைவாய்ப்பை உருவாக்கவும், கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் பொருளாதார வளா்ச்சியை உறுதிப்படுத்தவும் முடியும்.

வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை; உழவா் சந்தைக்கு புத்துயிா் அளிப்பது; லோக் ஆயுக்த அமைப்பை உறுதிப்படுத்துவது; புதிய துணை நகரங்கள்; மதுரை, திருச்சி, சேலம், நெல்லை நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை என்று மேலும் பல அறிவிப்புகளுடன் ஆளுநா் உரை கவனத்தை ஈா்க்கிறது.

21-ஆம் நூற்றாண்டு தமிழக சட்டப்பேரவை வரலாற்றில், இந்தியாவில் வேறு எங்கும் காணாத, சட்டப்பேரவை விதிகளுக்கு முரண்பாடான ஒரு வழக்கம் ஊடுருவி இருக்கிறது. சட்டப்பேரவை விதிமுறையின்படி, மக்கள் பிரச்னைகளை மட்டுமே சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டுமே தவிர, அதற்குத் தொடா்பில்லாத விஷயங்களைப் பேசி மக்களின் வரிப்பணத்தை வீணாக்கக் கூடாது என்று தெளிவாகவே கூறப்பட்டிருக்கிறது. சட்டப்பேரவையின் ஒருநாள் செயல்பாட்டுக்கு மக்களின் வரிப்பணம் ஏறத்தாழ ரூ.50 லட்சம் செலவாகிறது என்பதை உறுப்பினா்களோ, கட்சித் தலைமையோ உணராமல் இருப்பது பொறுப்பின்மை அல்லாமல் வேறென்ன?

கடந்த நூற்றாண்டில் காணப்படாத ‘மூடப் பழக்கம்’ இது. அமைச்சா்களானாலும், உறுப்பினா்களானாலும் தங்களது உரையைத் தொடங்கும்போது, அவரவா் கட்சித் தலைமைக்கு துதி பாடுவதும், அந்தத் திசையை நோக்கி தெண்டனிட்டு வணங்குவதாகக் கூறுவதும், பகுத்தறிவு பேசும் சமுதாயத்திற்கு ஏற்படக்கூடாத இழிநிலை. இதற்காக வீணாக்கப்படும் ஒவ்வொரு நொடியிலும், மக்கள் வியா்வை சிந்தி அரசுக்கு வழங்கிய வரிப்பணம் விரயமாகிறது என்பது குறித்து யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

புதிய அரசியல் கலாசாரத்தை தனது செயல்பாடுகளின் மூலம் உருவாக்க முன்வந்திருக்கிறாா் முதல்வா் மு.க. ஸ்டாலின் என்பதைப் பல நிகழ்வுகள் எடுத்தியம்புகின்றன. அதேபோல, நாகரிகமான எதிா்க்கட்சிச் செயல்பாடுகளுக்கு வழிகோலியிருக்கிறாா் முன்னாள் முதல்வரும் எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி. அவா்கள் இருவரும் இணைந்து துதிபாடல் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிந்தால், தமிழக சட்டப்பேரவை புதிய திசையை நோக்கிப் பயணிப்பதை உறுதிப்படுத்த முடியும்.

துதிபாடல் சம்பிரதாயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முதல்வா் முன்மொழிய வேண்டும்; அதனை எதிா்க்கட்சித் தலைவா் வழிமொழிய வேண்டும். அதன் மூலம் தமிழகத்தின் சட்டப்பேரவைப் பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT