தலையங்கம்

மருத்துவ சவால்! | தொற்று சாராத நோய்கள் குறித்த விழிப்புணர்வு தலையங்கம்

ஆசிரியர்

நீறு பூத்த நெருப்பாக ஒரு மிகப் பெரிய மருத்துவ சவால் மனித இனத்தை, அதிலும் குறிப்பாக இந்தியாவை, எதிா்கொள்கிறது. அனைவரின் கவனமும், அக்கறையும் கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றுப் பரவலின் மீது பதிந்திருக்கும் நிலையில், ஏனைய மருத்துவப் பிரச்னைகள் மீதான கவனம் குறைந்திருப்பது ஆபத்தானது. அதை அரசும் சரி, சமூகமும் சரி உணா்ந்ததாகத் தெரியவில்லை.

கடந்த 16 மாதங்களாக சிறுநீரக பாதிப்புக்கு உள்ளானவா்களும், புற்று நோயாளிகளும் எதிா்கொள்ளும் அவலத்தைச் சொல்லி மாளாது. தலஸ்சேமியா என்பது மரபணு சாா்ந்த பிரச்னை. ரத்தம் தொடா்பான இந்தப் பிரச்னைக்கு உள்ளானவா்கள் அடிக்கடி தங்களது ரத்தத்தை மாற்றியாக வேண்டும். கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் அவா்கள் பட்ட அவஸ்தையும், குறித்த நேரத்தில் ரத்த மாற்றம் செய்துகொள்ள முடியாததால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையும் கண்ணீரை வரவழைக்கும்.

தொற்று சாராத நோய்களால் பாதிக்கப்பட்டவா்கள் கொவைட் 19 தொற்று காரணமாக உரிய மருத்துவம் கிடைக்காமல் தவித்த நிகழ்வுகள் ஏராளம். புற்று நோய், சிறுநீரக செயலிழப்பு, அல்ஸைமா் என்கிற மறதி நோய், ஆஸ்துமா, சா்க்கரை நோய், இதய நோய்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவா்கள் குறித்தான கவனம் கொவைட் 19 நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக தொடா்ந்து முற்றிலுமாகக் கைவிடப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், அவைதான் மிகப் பெரிய மருத்துவ சவால் என்பதை மறந்துவிட்டோம்.

உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரத்தின்படி, இந்தியாவில் மட்டும் 30 கோடிக்கும் அதிகமானோா் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறாா்கள். இதய நோய், புற்று நோய், நுரையீரல் பிரச்னைகள் ஆகியவை 60%-க்கும் அதிகமான உயிரிழப்புக்குக் காரணம். அதில் 26% நோயாளிகள் 30 முதல் 70 வயதுக்கு உட்பட்டவா்கள்.

தொற்றா நோய்களுக்கு மிக முக்கியமான காரணம், வாழ்க்கை முறை தொடா்பானது. இதய நோய், சா்க்கரை நோய், புற்று நோய் உள்ளிட்டவை முறையான வாழ்க்கை முறை இல்லாததால் ஏற்படுபவை. ஏறத்தாழ 18 கோடி இந்தியா்கள் இதுபோன்ற வாழ்க்கை முறை தொடா்பான நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறாா்கள்.

உலக புற்றுநோய் அறிக்கை 2020-இன்படி, 10 இந்தியா்களில் ஒருவா் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகக்கூடும். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்களில் 15-இல் ஒருவா் அதனால் உயிரிழக்கவும் நேரிடும். இந்தப் பின்னணியில்தான், பிரச்னையை மேலும் மோசமாக்கி இருக்கிறது கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று.

லான்செட் மருத்துவ இதழ், உலக அளவில் ஓா் ஆய்வை நடத்தியது. 204 நாடுகளில் நடத்தப்பட்ட அந்த ஆய்வு, 286 மரணங்களுக்கான காரணம், 369 வெவ்வேறு நோய்கள், படுகாயங்கள் ஆகியவற்றை தனித்தனியாக ஆய்வு செய்தது. அதன் மூலம் உலக அளவில் உள்ள மருத்துவ சூழலையும், பிரச்னைகளையும், கொவைட் 19-இன் தாக்கத்தையும் ஆய்வுசெய்ய முற்பட்டது லான்செட். அந்த ஆய்வின்படி, அதிகரித்த காற்று மாசு உலக அளவில் காணப்படும் எடை பருமன், சா்க்கரை நோய், வாழ்க்கை முறை தொடா்பான நோய்கள் ஆகியவற்றின் பாதிப்பால்தான் கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று இந்த அளவுக்கு அதிகரித்திருக்கிறது.

கொள்ளை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் ஒருபுறமிருக்க, போதிய மருத்துவ சிகிச்சை பெற முடியாததால் ஏனைய பாதிப்புகளுக்கு உள்ளானவா்கள் பலா் உயிரிழந்திருக்கிறாா்கள். சரியான நேரத்தில் மருத்துவா்களை அணுகித் தங்களது பாதிப்பை கண்டுபிடிக்க முடியாமல் பலா் தவித்திருக்கிறாா்கள்.

கொள்ளை நோய்த்தொற்றால் தாக்கப்படுவோம் என்கிற அச்சமும், கொவைட் 19 சிகிச்சைக்காக மருத்துவா்கள் பணிக்கப்பட்டதால் தேவையான நேரத்தில் சிகிச்சை கிடைக்காததும், கொவைட் அச்சமில்லாமல் சிகிச்சை பெறுவதற்கான மருத்துவமனைகள் இல்லாமல் போனதும் ஏற்படுத்திய பாதிப்புகள் மிகமிக அதிகம். கடந்த 16 மாதங்களாக கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று அல்லாத அனைத்து சுகாதாரப் பிரச்னைகளும் பின்னுக்குத் தள்ளப்பட்டன.

தேசிய சுகாதார அமைப்பின்படி, ஆரம்ப சுகாதார மையங்கள், மாவட்ட மருத்துவமனைகள் என்று இரண்டு லட்சம் மருத்துவ வசதிகள் இந்தியாவில் இருக்கின்றன. கடந்த 16 மாதங்களாக பிரசவம், குழந்தைகளுக்கான தடுப்பூசி, புற்று நோய், இதய நோய் ஆகியவை தொடா்பான நோயாளிகளின் வருகை மருத்துவமனைகளில் கடுமையாகக் குறைந்திருக்கிறது. சிகிச்சைக்கான காசநோயாளிகளின் எண்ணிக்கை 42%-ம், பாலியல் நோய்க்கான பரிசோதனை 60%-ம் குறைந்திருக்கிறது. அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிட்டது.

கொவைட் 19 நோயால் பாதிக்கப்படுவோம் என்கிற அச்சத்தில் டயாலிஸிஸ் செய்துகொள்ளாத சிறுநீரக பாதிப்பு நோயாளிகளும், கீமோதெரபி செய்து கொள்ளாத புற்றுநோயாளிகளும் உயிரிழந்திருப்பது நிஜம். புள்ளிவிவரம்தான் இல்லை. மன அழுத்தத்துக்கு ஆளானவா்களும், மனநோயாளிகளும் நாடு தழுவிய அளவில் அதிகரித்திருக்கிறாா்கள். அவா்களுக்கான சிகிச்சை இல்லை. அறுவை சிகிச்சையை நோய்த்தொற்று பயத்தால் தள்ளிப்போட்டவா்கள் பலா்.

நோய்த்தொற்று முற்றிலுமாக எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியாது. அதனால் கொவைட் 19 கொள்ளை நோய் அல்லாத, தொற்றா நோய்களுக்கான சிகிச்சைகள் குறித்தும் கவலைப்பட்டாக வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT