தலையங்கம்

தளர்வும் தீர்வும்! | பொருளாதார நடவடிக்கைகள் குறித்த தலையங்கம்

8th Jul 2021 03:34 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

 

பொது முடக்கத் தளர்வுகளைத் தொடர்ந்து, தடைபட்டிருந்த பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் செயல்படத் தொடங்கியிருக்கின்றன. பொதுமக்கள் மத்தியில் வாங்கும் சக்தி அதிகரித்து சில்லறை விற்பனை தொடங்கி, முன்புபோல வர்த்தகச் செயல்பாடுகள் அதிகரித்தால் மட்டுமே உற்பத்திப் பெருக்கமும், பொருளாதார மேம்பாடும் சாத்தியப்படும். 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மாதம் அறிவித்திருக்கும் ரூ.2.67 லட்சம் கோடிக்கான நிதி நிவாரணத் திட்டத்தின் நோக்கம் உற்பத்தியை அதிகரிப்பதும், அதன் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்துவதும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மத்திய நிதியமைச்சகம் வழங்கியிருக்கும் உத்தரவாதத்தின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட தொழில் துறையினரை, எந்த அளவுக்கு கூடுதல் கடன் வழங்கி வங்கிகள் ஆதரிக்கும் என்பதைப் பொருத்து அறிவிப்பின் வெற்றி - தோல்வி அமையும். 

வங்கிகளின் எச்சரிக்கைப் போக்கை அரசு உத்தரவாதம் சற்றுத் தளர்த்தி கூடுதல் கடனுதவி வழங்குவதை ஊக்குவிக்கும் என்பது எதிர்பார்ப்பு. ஆனால், இதுவரை இந்த அணுகுமுறை எதிர்பார்த்த வெற்றியை வழங்கியதில்லை என்பது அனுபவ நடைமுறை. 

ADVERTISEMENT

கடந்த ஆண்டு வங்கிகளில் போடப்பட்ட வைப்பு நிதி 9.7% அதிகரித்தது. அதே நேரத்தில் வங்கிகள் வழங்கிய கடனுதவியின் அளவு 5.7%தான் அதிகரித்தது. நோய்த்தொற்றின் இரண்டாவது அலைக்கு முன்பிருந்த நிலைமையும் இதுதான். தங்களிடம் பணம் இருந்தாலும்கூட, வாராக்கடன் ஆகிவிடுமோ என்கிற அச்சத்தில் வங்கிகள் சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கு கடனுதவி வழங்குவதில் தயக்கம் காட்டுகின்றன என்கிற உண்மையின் வெளிப்பாடுதான் இந்தப் புள்ளிவிவரம்.

பொருளாதார இயக்கத்தை மேம்படுத்த உற்பத்தியை அதிகரிப்பது என்பது மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பையும் அதிகரிப்பது என்கிற கண்ணோட்டத்துடன் செயல்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. வேலைவாய்ப்பு அதிகரிக்கும்போதுதான் மக்கள் மத்தியில் வாங்கும் சக்தி அதிகரித்து, பொருளாதார நடவடிக்கைகள் சுறுசுறுப்படையும் என்பது பொருளாதாரத்தின் அடிப்படை இலக்கணம்.

இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் என்கிற அமைப்பு கடந்த மாதம் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, அதற்கு முந்தைய மாதமான மே மாதத்தில் மட்டும் 1.53  கோடி இந்தியர்கள் வேலையிழந்திருக்கிறார்கள். ஏப்ரல் மாதம் 39.07 கோடி பேர் இருந்தது போய், மே மாதம் மரபுசார்ந்த பணிகளில் நிரந்தர அல்லது ஒப்பந்தப் பணியாளர்களாக இருப்பவர்களின் எண்ணிக்கை 37.54 கோடியாகக் குறைந்திருக்கிறது. 

வேலைவாய்ப்பை இழப்பவர்களுடைய எண்ணிக்கையும், வேலைவாய்ப்புக்கான வாய்ப்பும் குறைந்து வருவதும் பொதுமக்களின் செலவழிக்கும் தன்மையில் பின்னடைவை ஏற்படுத்தி, பொருளாதாரச் சுணக்கத்தை ஏற்படுத்தும். 

இந்தியப் பொருளாதார கண்காணிப்பு அமைப்பின் அந்த அறிக்கை இன்னொரு புள்ளிவிவரத்தையும் வழங்குகிறது. இந்தியாவில் வேலை இழந்து மாற்று வேலைவாய்ப்புக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 1.7 கோடியிலிருந்து 5.07 கோடியாக அதிகரித்திருக்கிறது. இவர்கள் எந்த வேலையையும் செய்வதற்குத் தயாராக இருந்தாலும், அதற்கான வாய்ப்பு இல்லாதவர்களாக இருக்கிறார்கள். 

வேலைவாய்ப்பு இல்லை என்பது மட்டுமல்லாமல், கொள்ளை நோய்த்தொற்று காரணமாக வர்த்தகம் குறைந்து காணப்படுவதால், புதிதாக வேலைக்கு ஆட்களை அமர்த்துவதிலும் தயக்கம் காணப்படுகிறது. நேரடியாக வேலைக்குப் போவதைவிட நோய்த்தொற்றுக்கு பயந்து வீட்டிலிருந்து வேலை செய்ய விழைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும், வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு ஒரு காரணமாக இருக்கக் கூடும்.

சில்லறை விற்பனையானாலும், மோட்டார் வாகனம், சுற்றுலா, கேளிக்கை விடுதிகள், வணிக வளாகங்கள் என்று எல்லா துறைகளிலுமே வேலைவாய்ப்புக்கான வாய்ப்பு குறைந்து காணப்படுகிறது. 2022-க்குள் தகவல் தொழில் நுட்பத் துறையில் 30 லட்சம் பேருக்கான ஆட்குறைப்பு நடவடிக்கை இந்தியாவில் மேற்கொள்ளப்படும் என்று பேங்க் ஆஃப் அமெரிக்காவின் அறிக்கை ஒன்று பயமுறுத்துகிறது. ஊழியர்களின் ஊதியத்தில் அதன் மூலம் ஆண்டொன்றுக்கு 100 பில்லியன் டாலர் (சுமார் ரூ.7.47 லட்சம் கோடி) சேமிக்க முடியும் என்று முக்கிய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் கருதுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. 

நோய்த்தொற்று காலத்தில் முன்பைப் போலல்லாமல் பெரும்பாலான மாணவர்கள் இணைய வழிக் கல்வியில் ஈடுபட்டிருக்கிறார்கள். பலரும் முறையான தேர்வுகள் இல்லாமல் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இவர்கள் எந்த அளவுக்கு வேலைவாய்ப்புக்கு உகந்தவர்கள் என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. 

தனியார் நிறுவனங்களில் கடுமையான தகுதித் தேர்வுகளுக்குப் பிறகுதான், காணப்படும் குறைந்த வேலைவாய்ப்பு இடங்கள் நிரப்பப்படும். அதனால், வேலைவாய்ப்பின்மை நடப்பு நிதியாண்டிலும் அடுத்த நிதியாண்டிலும் கடுமையாக அதிகரிப்பதற்கான வாய்ப்பு காணப்படுகிறது என்று எச்சரிக்காமலும் இருக்க முடியவில்லை. 

ஏற்கெனவே மத்திய - மாநில அரசுகள் கொள்ளை நோய்த்தொற்றை எதிர்கொள்ளவும், புதிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும்கூட முடியாமல் நிதிப்பற்றாக்குறையால் தத்தளிக்கின்றன. அரசு அலுவலர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கு திணறும் நிலைமை பல மாநிலங்களில் காணப்படுகிறது. அதனால், அரசு வேலைக்கான வாய்ப்பும் குறைவாகவே இருக்கிறது. 

வங்கிக் கடன் மூலம் சுய வேலைவாய்ப்பை ஊக்குவிப்பதும், சிறு, குறு, நடுத்தர தொழில்களை ஊக்குவித்து அதிகரிக்கச் செய்வதும்தான் இந்தியா எதிர்கொள்ளும் வேலையின்மை  பிரச்னைக்கான தீர்வாக இருக்கும்!

Tags : தலையங்கம் K Vaidiyanathan Editorial கி வைத்தியநாதன்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT