தலையங்கம்

நன்றி டீம் இந்தியா! | பிரிஸ்பேனில் இந்தியா அடைந்திருக்கும் வெற்றி குறித்த தலையங்கம்

21st Jan 2021 03:52 AM | ஆசிரியர்

ADVERTISEMENT


சில வெற்றிகளை வரலாறு வெறும் வெற்றியாக மட்டுமே பதிவு செய்வதில்லை. அதன் பின்னால் காணப்படும் போராட்டமும், உழைப்பும் கூடிய கதைகளையும் சேர்த்துத்தான் வரலாறு பதிவு செய்யும். காலம் நகர நகர, அந்த வெற்றியின் மகத்துவம் அதிகரிக்கும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரிஸ்பேனில் நடந்த நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் பந்தயத்தில் இந்தியா அடைந்திருக்கும் வெற்றி அந்த ரகத்தைச் சார்ந்தது. 

பிரிஸ்பேன் காபா மைதானத்தில் இந்தியாவின் இடது கை ஆட்டக்காரர் ரிஷப் பந்துடைய ஆஃப் டிரைவ், டீப் லாங் ஆஃப் பவுண்டரி கோட்டை கடந்தபோது தொடங்கிய ரசிகர்களின் கரகோஷம், இன்னும்கூடத் தொடர்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் பந்தயத்தில் இந்தியா அடைந்திருக்கும் வரலாற்று வெற்றியை ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் கொண்டாடுகிறது. அதற்குக் காரணம், நட்சத்திர அந்தஸ்தில்லாத வீரர்களை அன்றைய ஆட்டம் நட்சத்திரங்களாக அடையாளம் காட்டியது என்பதுதான். 

பிரிஸ்பேனில் உள்ள காபா கிரிக்கெட் மைதானம் அதிவேகப் பந்து வீச்சுக்கான பிட்சைக் கொண்டது. அதில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு 328 ரன்களை இலக்காக்கி, தொடர்ந்து விளையாடி வெற்றியும் அடைந்தபோது, இந்திய கிரிக்கெட் வீரர்கள் அவர்களுடைய சக்தியையும், முனைப்பையும், திறமையையும் வெளிப்படுத்தினார்கள். அதுமட்டுமல்லாமல், எவ்வளவு பெரிய பின்னடைவிலும், பலவீனத்திலும்கூட சற்றும் மனம் தளராமல் தங்களால் விளையாட முடியும் என்பதை பேட்டிங்கின் மூலமும், பந்து வீச்சின் மூலமும் அவர்கள் தெளிவுபடுத்தினார்கள். 

வரலாற்றில் இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய மண்ணில் இரண்டு தடவை மட்டுமே டெஸ்ட் பந்தயத்தில் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விராட் கோலியின் தலைமையில் வென்றது என்றால், இந்த முறை அஜிங்க்ய ரஹானே கேப்டனாக இருந்து வெற்றி தேடித் தந்திருக்கிறார். 

ADVERTISEMENT

இந்த முறை அடைந்த வெற்றிக்கு மரியாதை அதிகம். சாதாரண விளையாட்டுக்கு இல்லாத அளவிலான பின்னடைவிலிருந்து ஒவ்வொரு ரன்னாக, ஒவ்வொரு விக்கெட்டாக திட்டமிட்டு முன்னேறி அடைந்த வெற்றி இது. அப்படித்தான் இரு டெஸ்ட் பந்தய வெற்றியையும், யாருக்கும் வெற்றியில்லாத ஒரு டிராவையும் இந்திய கிரிக்கெட் அணி பெற முடிந்திருக்கிறது. 

முதலாவது டெஸ்ட் பந்தயத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் பங்கு பெற்றும்கூட, வரலாறு காணாத தோல்வியை அடிலெய்டில் எதிர்கொண்டது இந்திய அணி. தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக முக்கியமான வீரர்கள் காயமடைந்ததால் பெவிலியனுக்கு ஒதுங்கினார்கள். கேப்டன்  விராட் கோலியோ, கர்ப்பவதியான தனது மனைவிக்கு ஆதரவாக இருப்பதற்காக விடைபெற்றுச் சென்றுவிட்டார். 

போதாக்குறைக்கு, சில ஆஸ்திரேலிய இன வெறியர்களின் அவதூறுகளைச் சகித்தபடி விளையாட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இத்தனை சவால்களையும் எதிர்கொண்டு கிடைத்திருக்கும் வெற்றி இது என்பதால், இந்த வெற்றியின் விலை மிக அதிகமானது.

முதலாவது டெஸ்ட் பந்தயத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 36 ரன்களில் ஆட்டமிழந்து கேவலப்பட்ட ஓர் அணி, அதன் பிறகு நடந்த மூன்று டெஸ்ட் பந்தயங்களில் இரண்டு பந்தயங்களை வென்று "பார்டர் காவஸ்கர் கோப்பை'யை தக்க வைத்துக் கொண்டது, உலக கிரிக்கெட் வரலாற்றில் நிரந்தர சாதனையாகப் போற்றப்படும்.

கடந்த நவம்பர் மாதம் 12-ஆம் தேதி தொடங்கிய இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் வெற்றிகரமாக முடிந்ததற்கு, அணியிலுள்ள அனைத்து வீரர்களுமே பாராட்டப்பட வேண்டியவர்கள். 1988-க்குப் பிறகு ஆஸ்திரேலியாவை பிரிஸ்பேனில் தோற்கடித்த பெருமையை இந்திய அணி அடைந்திருக்கிறது. 32 ஆண்டுகளுக்கு முன்பு விவியன் ரிச்சர்ட்ஸ் தலைமையிலான மேற்கு இந்திய அணிக்குப் பிறகு, ஆஸ்திரேலிய அணியை இந்திய அணியால் மட்டுமே பிரிஸ்பேனில் தோற்கடிக்க முடிந்திருக்கிறது. அதுவும் பெரும்பாலும் அறிமுக ஆட்டக்காரர்கள் இடம்பெற்ற அணியின் சாதனை எனும்போது, அந்த வெற்றி விலைமதிக்க முடியாதது.

இந்திய அணியின் இளைஞர் படையின் வலிமை ஆச்சரியப்படுத்துகிறது. ரிஷப் பந்த், புது வரவுகளான ஷுப்மன் கில், முகமது சிராஜ், நவ்தீப் சைனி, வாஷிங்டன் சுந்தர், டி. நடராஜன் ஆகியோரை பின்னணியில் இருந்து முன்வரிசைக்கு கொண்டுவந்து நிறுத்தி அடையாளம் காட்டியிருக்கிறது இந்த டெஸ்ட் பந்தயம். சேதேஷ்வர் புஜாரா, கேப்டன் அஜிங்க்ய ரஹானே ஆகியோரின் பங்களிப்பையும் பதிவு செய்தாக வேண்டும். 

விராட் கோலி உள்ளிட்ட எட்டு முக்கியமான வீரர்கள் இல்லாத நிலையில்தான் இந்திய அணி நான்காவது டெஸ்டை எதிர்கொண்டது. இந்திய அணியில் இருந்த ஐந்து பந்து வீச்சாளர்களும் இதற்கு முன் விளையாடி இருப்பது வெறும் நான்கு டெஸ்ட் பந்தயங்களில் மட்டும்தான். 

சமீப காலத்தில் இந்தியாவின் மிகவும் வலிமையற்ற கிரிக்கெட் அணி என்று விமர்சகர்களால் வர்ணிக்கப்பட்ட நிலையில், இந்த அணி வரலாற்று வெற்றியைப் படைத்திருக்கிறது. அதற்கு காரணம், தங்களுக்கு தற்செயலாகக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களை அடையாளம் காட்டிக்கொண்ட முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், சர்துல் தாக்கூர், டி. நடராஜன், நவ்தீப் சைனி, தனக்கு ஏற்பட்ட பந்து வீச்சுக் காயங்களையும் பொருள்படுத்தாமல் விளையாடிய ரிஷப் பந்த் உள்ளிட்ட வீரர்கள். 

இந்த வெற்றியில் தமிழக வீரர்களான டி. நடராஜன், வாஷிங்டன் சுந்தர், அஸ்வின் ஆகியோரின் பங்களிப்பு முக்கியமானது என்பதால் நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT