தலையங்கம்

துணியத்தான் வேண்டும்! | பள்ளிகள் திறக்கப்பட்டது குறித்த தலையங்கம்

ஆசிரியர்

 கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளின் கடைசி கட்டத்தை நெருங்கிவிட்டோம் என்றுதான் தோன்றுகிறது. ஒருபுறம் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, முதல் கட்டமாக முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இப்போது, பள்ளிக்கூடங்களும் திறக்கப்பட்டு விட்டன.
 தமிழகத்தில் அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என்று ஏறத்தாழ 55,000 பள்ளிகள் இருக்கின்றன. கடந்த பத்து மாதங்களாக இந்தப் பள்ளிகள் திறக்கப்படாமல் முடங்கிக் கிடந்தன. இணைய வழி வகுப்புகள் நடைபெற்றன என்றாலும்கூட, வகுப்பறைகளில் பாடம் நடத்தப்படாமல் இருந்தது, மாணவர்களின் வருங்காலத்தைக் கடுமையாக பாதிக்கத்தான் செய்யும். கடந்த ஆண்டு மார்ச் மாதம் 24-ஆம் தேதி மூடப்பட்ட பள்ளிகள், இப்போது படிப்படியாக வகுப்புகள் நடத்தத் திறக்கப்படுகின்றன. இதற்குத் துணியத்தான் வேண்டும்.
 கொள்ளை நோய்த்தொற்றால் அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக ஒன்பதாம் வகுப்பு வரை எல்லா மாணவர்களும் தேர்வில்லாமல் தேர்ச்சி அடைய வழிகோலப்பட்டிருக்கிறது. அவர்களுக்கும்கூட நடப்புக் கல்வியாண்டில் பல தனியார் பள்ளிகளில் இணைய வழி வகுப்புகள் நடத்தப்பட்டு, இணைய வழியிலேயே தேர்வும் நடத்தப்பட்டிருக்கிறது.
 கடந்த நவம்பர் மாதம் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் பள்ளிகளைத் திறப்பது என்று அரசு முடிவெடுத்தபோது, கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. குழந்தைகள் பள்ளிக்குச் சென்று நோய்த்தொற்று பாதிப்புக்கு ஆளாவது மட்டுமல்லாமல், குடும்பத்தினரையும் பாதித்துவிடுவார்கள் என்கிற பெற்றோரின் அச்சம்தான் அதற்குக் காரணம். அதனால், கடைசி நிமிடத்தில் அரசு அந்த முடிவைத் தள்ளி வைத்தது.
 பொதுத்தேர்வை எதிர்கொள்ள வேண்டிய பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கூடங்களில் நேரடியாக வகுப்புகளில் பங்கேற்று, பாடங்களை ஆசிரியர்களிடமிருந்து தெரிந்துகொண்டால்தான் தேர்வுகளில் அவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற முடியும் என்கிற எதார்த்தம் பெற்றோரையும், அரசையும் பள்ளிகளைத் திறந்தாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளியிருக்கிறது.
 அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகள் என்று அனைத்துப் பள்ளிகளிலும் நேற்று முதல் பத்து, பன்னிரண்டாம் வகுப்புகள் இயங்கத் தொடங்கிவிட்டன. 13,100 பள்ளிகளில் 85% மாணவ, மாணவிகள் வகுப்புக்கு வந்திருக்கிறார்கள். அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டுதல்படி, அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
 ஒரு வகுப்பறையில் 25 மாணவர்களுக்கு மேல் இருக்கக் கூடாது; மாணவர்களின் வருகையைக் கட்டாயப்படுத்தக் கூடாது; இணையம் மூலம் கற்றுக்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்று அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்திருக்கிறது. பெற்றோரின் ஒப்புதலுடன் வரும் மாணவர்கள் மட்டுமே வகுப்பறையில் அனுமதிக்கப்படுகின்றனர்.
 பத்து மாதங்களுக்கு மேல் வகுப்பறைக் கல்வி இல்லாத நிலையில், கடைசி நிமிட முயற்சி பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடாது என்கிற சிலரின் விமர்சனங்களை பொருள்படுத்தத் தேவையில்லை. பாடத் திட்டங்கள் 30% முதல் 40% வரை குறைக்கப்பட்டிருப்பதால், மாணவர்கள் முழுமையாகத் தயார்படுத்தப்படவில்லை என்கிற குறைபாட்டை சிலர் சுட்டிக்காட்டுகிறார்கள். வரலாற்றில் இல்லாத அளவில் மிகப் பெரிய கொள்ளை நோய்த்தொற்றுக் காலத்தை கடக்கும்போது சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும். அவற்றைப் பெரிதுபடுத்துவது ஆக்கபூர்வமான அணுகுமுறையாக இருக்காது.
 கடந்த பத்து மாதங்களாகக் கல்விச் சூழலில் இருந்து விலகி நின்றுவிட்ட மாணவர்களை, அடுத்த மூன்று மாதங்களில் பொதுத்தேர்வுக்கு தயார்படுத்துவது ஆசிரியர்கள் எதிர்கொள்ளப்போகும் கடுமையான சவால். தேர்வுகளை ஜூன் மாதத்துக்குத் தள்ளி வைக்க வேண்டும் என்கிற சிலரின் கோரிக்கை ஏற்புடையதாக இல்லை. ஏற்கெனவே கல்விச்சூழலில் இருந்து அகன்று நின்றுவிட்ட மாணவர்களை, மீண்டும் அதேபோன்ற ஒரு சூழ்நிலைக்குத் தள்ளும் முயற்சியாகத்தான் அது இருக்கும்.
 மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் வர இருக்கிறது. பெரும்பாலான பள்ளிக்கூடங்கள் வாக்குச்சாவடிகளாக மாற்றப்பட்டுவிடும். அதற்காக பள்ளிகள் பல நாள் மூடப்பட வேண்டும். பத்து மாதங்களுக்குப் பிறகு சுத்தம் செய்து, கிருமிநாசினி தெளித்து, பாதுகாப்பாக பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. அதனால் தேர்தலுக்கு முன்பாகவே தேர்வுகளை நடத்தி முடிப்பதுதான் விவேகம். எந்தக் காரணத்தைக் கொண்டும் மாணவர்கள் தேர்வுக்கு முன்பு மீண்டும் ஒருமுறை கல்விச்சூழலில் இருந்து அகற்றப்பட்டுவிடக் கூடாது.
 தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலுமே ஒவ்வொரு மாநிலமாகப் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. இரண்டு நாள்களுக்கு முன்பு தமிழகத்தைப் போலவே தில்லியில் பத்து, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கிவிட்டன. ஜனவரி முதல் வாரத்திலிருந்து மகாராஷ்டிர மாநிலத்தில் படிப்படியாக வகுப்புகள் தொடங்கப்பட்டு நடத்தப்படுகின்றன. திரையரங்குகள் திறக்கப்படலாம் என்றால் பள்ளிகள் திறக்கப்படுவதில் தவறேயில்லை.
 பள்ளிகளுக்கு வரும் ஆசிரியர்களையும், மாணவர்களையும், ஊழியர்களையும் முறையாக பரிசோதித்து அனுமதிப்பது சற்று சிரமம்தான். அதற்காக பள்ளிக்கூடங்களைத் திறக்காமல் மாணவர்களின் வருங்காலத்தைப் பாழாக்க முடியாது. ஆங்காங்கே சில பிரச்னைகள் எழத்தான் செய்யும். சமுதாயம் நிரந்தரமாக முடக்கத்தில் தொடர முடியாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT