தலையங்கம்

இந்திய - அமெரிக்க உறவு!| அமெரிக்காவுக்கு இந்திய உறவு இன்றியமையாதது குறித்த தலையங்கம்

ஆசிரியர்



எல்லாத் தடைகளையும் கடந்து அமெரிக்காவின் 46-ஆவது அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸூம் நாளை பதவி ஏற்க இருக்கிறார்கள். முதன்முறையாக பெண்மணி ஒருவர் துணை அதிபராகப் பதவி ஏற்கிறார் என்பது மட்டுமல்லாமல், அவர் தாய்வழி இந்திய வம்சாவளியினர் என்பதும் நமக்குப் பெருமை சேர்க்கிறது.

அதிபர் பைடனின் நிர்வாகத்தில் இந்திய - அமெரிக்க உறவு எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்து இப்போதே வாஷிங்டனிலும், புது தில்லியிலும் விவாதங்கள் தொடங்கிவிட்டன. பிரதமர் நரேந்திர மோடியும், அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப்பும் நெருக்கமாக இருந்ததால் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு புதிதாகப் பதவி ஏற்கும் ஜனநாயகக் கட்சியினரின் அணுகுமுறையில் மாற்றம் இருக்குமா என்கிற ஐயப்பாடு பரவலாகவே எழுப்பப்படுகிறது.

ஜோ பைடன் அதிபராகப் பதவி ஏற்பதற்கு முன்னரே அவரது நிர்வாகத்தில் பணியாற்றுவதற்காக நியமனம் செய்திருப்பவர்களில் இந்திய - அமெரிக்கர்கள் பலர் இடம் பெறுகிறார்கள். வெள்ளை மாளிகை அலுவலகத்தின் நிர்வாகம் மற்றும் நிதிநிலை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டிருக்கும் நீரா தாண்டன், மிக முக்கியமான பொறுப்பில் அமர்த்தப்பட்டிருக்கிறார். அதேபோல, அமெரிக்காவின் சர்ஜன் ஜெனரலாக டாக்டர் விவேக் மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதித்துறை உதவி அட்டர்னி ஜெனரலாக வனிதா குப்தா, குடிமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம், மனித உரிமைகளுக்கான துணைச் செயலராக உஸ்ரா ஷெயா, முதல் பெண்மணியான ஜில் பைடனின் கொள்கை இயக்குநராக மாலா அடிகா, வெள்ளை மாளிகை துணை ஊடகச் செயலராக சப்ரினா சிங், வெள்ளை மாளிகை அலுவலக டிஜிட்டல் பிரிவு மேலாளராக ஆயிஷா ஷா, தேசியப் பொருளாதார கவுன்சில் துணை இயக்குநராக சமீரா ஃபாஸிலி ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். 

அதேபோல, வெள்ளை மாளிகையின் தேசிய பொருளாதார கவுன்சிலின் துணை இயக்குநர் பரத் ராமமூர்த்தி, அதிபரின் தனி அலுவலக துணை இயக்குநர் கெüதம் ராகவன், பைடனின் நம்பிக்கைக்கு உரியவரான வினய் ரெட்டி, உதவி ஊடகச் செயலாளர் வேதாந்த் படேல், தேசிய பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப துறை முதுநிலை இயக்குநர் தருண் சாப்ரா, தெற்காசியப் பிரிவு முதுநிலை இயக்குநர் சுமோனா குஹா, மனித உரிமைகள் ஒருங்கிணைப்பாளர் சாந்தி கலாதில் ஆகியோர் மட்டுமல்லாமல் சோனியா அகர்வால், விதுர் சர்மா, நேகா குப்தா, ரீமா ஷா என்று அதிபர் பைடனின் நிர்வாகத்தில் இதுவரை இல்லாத அளவில் 20 இந்திய - அமெரிக்கர்கள் இடம் பெறுகிறார்கள். 

இந்திய - அமெரிக்கர்கள் நிர்வாகத்தில் இடம் பெறுவதாலும், துணை அதிபர் தாய்வழி இந்திய வம்சாவளியினர் என்பதாலும் பைடன் நிர்வாகம் இந்தியாவுக்கு சாதகமான நிர்வாகமாக இருக்கும் என்று கூறிவிட முடியாது. அமெரிக்காவைப் பொருத்தவரை, அதிபர் மாறினாலும்கூட வெளியுறவுக் கொள்கையில் பெரிய அளவிலான மாற்றங்களைக் காண முடியாது என்பது வரலாறு. அதே நேரத்தில் அதிபருடனும், முதல் பெண்மணியான அதிபரின் மனைவியுடனும் நெருக்கமாகப் பணியாற்றும் வாய்ப்பு இந்திய - அமெரிக்கர்களுக்குக் கிடைத்திருப்பது இந்திய - அமெரிக்க உறவில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும். 

இந்திய - அமெரிக்கர்கள் அனைவருமே தாய்மண்ணுக்குச் சாதகமானவர்கள் என்று நாம் கருதிவிடக் கூடாது. இந்தியாவில் தங்களது வளர்ச்சிக்கு வாய்ப்பில்லாததாலும், வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாலும் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தவர்கள்தான் அவர்களில் பெரும்பாலோர். 

இந்தியக் குடியுரிமையைத் துறந்து, அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்களின் இரண்டாவது, மூன்றாவது தலைமுறையினர் அவர்கள். அதனால், இந்தியா குறித்த அவர்களது பார்வை பெரும்பாலும் ஏளனமும் கண்டனமும் நிறைந்ததாகவே இருந்து வருகிறது. அவர்களது பெற்றோருக்கு இருந்த அளவுக்கு இந்தியப் பண்பாடு, கலாசாரம், வாழ்க்கை முறை ஆகியவற்றில் இவர்களுக்கு ஈடுபாடோ, பெருமிதமோ இருக்க வாய்ப்பில்லை.

துணை அதிபர் கமலா ஹாரிஸில் தொடங்கி, இந்திய வம்சாவளியினர் பலர் இந்தியாவில் காணப்படும் மனித உரிமை மீறல்களையும்,  மதச் சுதந்திர பாதிப்புகளையும் தொடர்ந்து விமர்சித்து வருபவர்கள். பிரமீளா ஜெயபால், ரோ கன்னா உள்ளிட்ட சில இந்திய - அமெரிக்கர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொண்டது மட்டுமல்லாமல், பல பிரச்னைகளையும் தொடர்ந்து எழுப்பி வந்திருக்கின்றனர் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். 

முந்தைய டிரம்ப் நிர்வாகம் இந்தியாவின் உள்நாட்டு அரசியலில் எந்தவிதத்திலும் தலையிடாததுபோல, ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சி நிர்வாகம் தொடரும் என்று எதிர்பார்க்கக் கூடாது. இதற்கு முன்பு ஜோ பைடன், பெர்னி சான்ட்ரஸ், ராபர்ட் மெனன்டஸ் ஆகியோர் இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்னைகள் குறித்து கருத்துத் தெரிவித்தவர்கள் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

பைடன் - ஹாரிஸ் நிர்வாகம், இந்திய உறவு குறித்தும், இந்திய உள்நாட்டுப் பிரச்னைகள் குறித்தும் முழுமையான புரிதலுடையது. அதிபர் பைடன் நிர்வாகத்தின் உள்துறை அமைச்சரான அந்தோணி பிளிங்கன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லீவன், மத்திய புலனாய்வுத் துறை இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ் ஆகியோர் கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவுடன் தொடர்பில் இருப்பவர்கள். 

நமது மிகப் பெரிய பலம் சீனாவுடனான மோதல். "எதிரியின் எதிரி நண்பன்' என்கிற அரசியல் அரிச்சுவடிப்படி, அமெரிக்காவுக்கு இந்திய உறவு இன்றியமையாதது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே மாத பலன்கள்: கன்னி

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும்: யோகி ஆதித்யநாத்

ஹைதராபாத்தில் 4 லட்சம் தெரு நாய்கள்: மாதம் இருவர் ரேபிஸுக்கு பலி!

மே மாத பலன்கள்: சிம்மம்

மே மாத பலன்கள்: கடகம்

SCROLL FOR NEXT