தலையங்கம்

விளையாட்டில் விளையாடாதீர்கள்! | விளையாட்டில் இனவெறி கலப்பு குறித்த தலையங்கம்

ஆசிரியர்


சமுதாயத்தில் இனக் குழுக்களைத் தவிர்க்க முடியாது என்றால் இனவெறியை சகித்துக்கொள்ளவும் முடியாது. அதிலும் குறிப்பாக, மனித உணர்வுகளின் உன்னதத்தின் அடையாளமாகத் திகழும் விளையாட்டில் இனவெறி கலப்பது என்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

சிட்னியில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நடந்த மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் பந்தயம், யாருக்கும் வெற்றி}தோல்வி இல்லாமல் டிராவில் முடிந்தது. கிரிக்கெட் ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாக அமைந்தது மூன்றாவது டெஸ்ட் பந்தய விளையாட்டு. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் அற்புதமாக விளையாடினார்கள். 

இந்திய அணியினரின் மன வலிமையும் விளையாட்டுத் திறனும் தோல்வியைத் தடுத்து நிறுத்தி, டெஸ்ட் டிராவில் முடிவதற்கு வழிகோலின. மிகச் சிறப்பாக நடந்த அந்த கிரிக்கெட் பந்தயத்துக்கு திருஷ்டி விழுந்ததுபோல அமைந்துவிட்டது, பார்வையாளர்கள் பகுதியில் இருந்த சில ஆஸ்திரேலியர்களின் இன வெறியை உமிழும் ஏளனங்களும் வசைபாடல்களும்.

கடந்த வாரம் சனிக்கிழமை நடந்த விளையாட்டில் இந்திய ஆட்டக்காரர்கள் முகமது சிராஜும் ஜஸ்பிரித் பும்ராவும் பார்வையாளர்கள் பகுதியில் இருந்த சிலரால் மிக மோசமான வார்த்தைகளால் வசைபாடப்பட்டனர். அதைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் ஆணையத்திடம் இந்திய அணி அதிகாரபூர்வமாக முறையிட்டது.  

அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை, பவுண்டரி கோட்டுக்கு அருகில் முகமது சிராஜ் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தார். அப்போது மீண்டும் பார்வையாளர்கள் பகுதியில் இருந்த இனவெறி கும்பல் அவரையும் ஜஸ்பிரித் பும்ராவையும் "பழுப்பு (பிரவுன்) நிற நாய்களே, திரும்பிப் போங்கள்' என்று தொடர்ந்து குரல் எழுப்பிக் கொண்டிருந்தது. முகமது சிராஜைப் பார்த்து "கொழுத்த குரங்கே' என்பதிலிருந்து நாகரிகமானவர்கள் சொல்லக்கூடாத வார்த்தைகளை அள்ளிவீசி முகமது சிராஜின் கவனத்தை சிலர் தொடர்ந்து திசை திருப்பிக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் அவர்களது தொந்தரவு பொறுக்கமுடியாமல், சிராஜ் தனது அணியின் கேப்டனிடமும் டெஸ்ட் விளையாட்டு நிர்வாகிகளிடமும் முறையிட்டார். 

இந்திய அணியும், களத்தில் இருந்த அம்பயர்களும், ஏன், ஆஸ்திரேலிய அணியினரும் அந்த இனவெறிக் கூட்டத்துக்கு எதிராகக் கைகோத்தனர். அவர்கள் வெளியேறாமல் விளையாட்டு தொடராது என்று தெரிவித்தனர். காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு அவதூறு வசைபாடலில் ஈடுபட்ட 6 பேர் மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகுதான் டெஸ்ட் பந்தயம் தொடர்ந்தது.

ஆஸ்திரேலிய அணியினரும் பந்தய நடுவரான (மேட்ச் ரெஃப்ரி) டேவிட் பூனும் விஷமிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிரான நடவடிக்கையை எடுத்ததன் மூலம், மைதான வரவேற்பாளர்கள் பகுதியில் ஏற்படும் விளையாட்டு உணர்வுக்குக் குந்தகம் விளைவிக்கும் செயல்களை எப்படிக் கையாள்வது என்பதற்கு முன்னுதாரணம் படைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறார்கள். இனிமேல் உலகின் எந்தவொரு மைதானத்திலும் இதுபோன்ற சம்பவம் ஏற்படும்போது எப்படி அதை எதிர்கொள்வது என்பதற்கு முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, பந்தய நிர்வாகிகள் ஆகியோர் நடைமுறை செயல்பாட்டை உருவாக்கியிருக்கிறார்கள். 

இந்த சம்பவத்தில் ஒரு நகைமுரண் இருக்கிறது. 2008}இல் இதே சிட்னி மைதானத்தில் நடந்த டெஸ்ட் பந்தயத்தில், அப்போதைய இந்திய சுழல் பந்து வீரர் ஹர்பஜன் சிங், ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஆன்ட்ரூ சைமன்ஸýக்கு எதிராக மிக மோசமான தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தினார். அதைத் தொடர்ந்து பிரச்னை ஏற்பட்டபோது, ஆன்ட்ரூ சைமன்ஸ் பெருந்தன்மையுடன் விட்டுவிட்டதால் பிரச்னை முடிந்தது. அதே ஆன்ட்ரூ சைமன்ஸýக்கு எதிராக மும்பையிலுள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இன ரீதியான கேலிகளை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எழுப்பியதும், அவரைத் தரக்குறைவாக விமர்சித்ததும் மறந்துவிடக் கூடியவையல்ல! 

கருப்பர் இனத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் இந்திய ரசிகர்களாலும் பார்வையாளர்களாலும் வசைபாடப்படுவதும் புதிதல்ல. இதற்கு முன்னால் பல பிரச்னைகள் இந்தியாவிலேயே எழுந்திருக்கின்றன.  

ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொள்ள இந்தியாவுக்கு வந்திருந்த மேற்கிந்தியத் தீவு அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சம்மியை அவரது நிறத்தின் பெயரால் விமர்சித்த நிகழ்வு மறக்கக்கூடியதல்ல.

இதற்கு முன்னாலும்கூட ஆஸ்திரேலியாவிலும் தென்னாப்பிரிக்காவிலும் இந்திய, பாகிஸ்தானிய, மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் நிறவெறி - இனவெறியாளர்களால் தரக்குறைவாக அழைக்கப்பட்டதும் விமர்சிக்கப்பட்டதும் உண்டு.

கிரிக்கெட் என்றல்ல, எல்லா விளையாட்டுப் பந்தயங்களிலும் பார்வையாளர்களாக இருக்கும் ரசிகர்கள் விளையாட்டில் ஒன்றிப்போய் உணர்ச்சிவசப்படுவது வழக்கமான நிகழ்வு. ஏதாவது ஒரு அணியையோ, குறிப்பிட்ட விளையாட்டு வீரரையோ ஆதரித்தும் எதிர்த்தும் கோஷம் எழுப்புவதும் புதிதல்ல. ஆனால் அதுபோன்ற வசவுகளும் தூற்றுதல்களும் எல்லை மீறி இனவெறி அடிப்படையில் மாறும்போதுதான் அதை ஏற்றுக்கொள்ளவோ சகித்துக் கொள்ளவோ முடிவதில்லை. 

இதுபோன்ற நிகழ்வுகள் விளையாட்டு உணர்வுக்கு எதிரானவை. நாவை அடக்க முடியாதவர்கள் வீட்டிலிருந்து தொலைக்காட்சியில் பார்த்தபடி அவர்களது இனவெறியை வெளிப்படுத்திக் கொள்ளலாம். மைதானத்தில் விளையாட்டு வீரர்களை வசைபாடுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு

SCROLL FOR NEXT