தலையங்கம்

தர்மசங்கடத்தில் இந்தியா! | ஐ.நா. சபையின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்த தலையங்கம்

ஆசிரியர்


ஸ்விட்சர்லாந்திலுள்ள ஜெனீவாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஐ.நா. சபையின் மனித உரிமைக் குழுவின் அடுத்த தலைவர் யார் என்பது பிரச்னையாகி இருக்கிறது. தற்போதைய தலைவரான எலிசபெத் டிக்கி ஃபிசில்பர்கரின் பதவிக்காலம் கடந்த ஆண்டு டிசம்பர் 31 அன்று முடிந்துவிட்டது. அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் பிரச்னையைக் கிளப்பியிருக்கின்றன சீனாவும், ரஷியாவும். மனித உரிமைக் குழுவின் கடந்த 15 ஆண்டுகால வரலாற்றில் இதுதான் முதன் முறையாக தலைமைப் பொறுப்பில் யாரும் இல்லாமல் அந்தக் குழு செயல்படுகிறது. 

பிரபல மனித உரிமை ஆர்வலரான பிஜி நாட்டைச் சேர்ந்த நஸôத் ஷமீம்கான் என்கிற பெண்மணிதான் அடுத்தத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருந்தவர். மனித உரிமை வழக்குரைஞரான அவர், பாரபட்சமில்லாமல் உலகின் எந்தப் பகுதியில் மனித உரிமை மீறல் நிகழ்ந்தாலும் அது குறித்துக் குரல் எழுப்புபவர். அடுத்த தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்படுவது அநேகமாக உறுதியாகிவிட்ட நிலையில், கடைசி நிமிடத்தில் சீனாவும் ரஷியாவும் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றன. நஸôத் ஷமீம்கானுக்குப் பதிலாக வளைகுடா நாடுகளில் ஒன்றான பஹ்ரைனைச் சேர்ந்த பிரதிநிதியை தலைமைப் பொறுப்புக்குப் பரிந்துரை செய்கின்றன. 

ஐ.நா. சபையின் மனித உரிமைக் குழு என்பது உலகெங்கிலும் மனித உரிமையை நிலைநாட்டுவதற்கும், உரிமை மீறல்களைத் தட்டிக் கேட்பதற்குமான அமைப்பு. 2006}ஆம் ஆண்டு மார்ச் 16}ஆம் தேதி உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, ஐ.நா. சபையின் உறுப்பு நாடுகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்தும், கருத்து சுதந்திரம் குறித்தும், மகளிர் உரிமைகள் குறித்தும் விசாரணை நடத்தும் அதிகாரம் பெற்றது. இதற்கு முன்னால் இருந்த ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையம் முறையாகச் செயல்படவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, இந்தக் குழு உருவாக்கப்பட்டது.

ஐ.நா. சபைவின் பொதுக் குழு உறுப்பினர்கள், மனித உரிமை குழுவின் 47 இடங்களுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். மூன்று ஆண்டு பதவிக்காலம் உள்ள இந்தப் பதவியில் இரண்டு முறைக்கு மேல் யாரும் தொடர முடியாது. இந்தக் குழுவின் 47 இடங்களும் ஐ.நா. சபையின் பிராந்தியக் குழுக்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்கும் விதத்தில் பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஆப்பிரிக்க நாடுகள் 13, ஆசிய பசிபிக் நாடுகள் 13, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் 6, மேற்கு ஐரோப்பிய நாடுகள் 7, லத்தீன் அமெரிக்க, கரிபீயன் நாடுகள் 8 என்று 47 இடங்களுக்கான உறுப்பினர்கள் அந்தந்தப் பிராந்தியங்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 

ஐ.நா. சபையின் மனித உரிமைக் குழு மார்ச், ஜூன், செப்டம்பர் என்று ஆண்டுதோறும் மூன்று முறை ஜெனீவாவில் கூடி விசாரணைகளை நடத்தும். முக்கியமான நிகழ்வுகளிலும், அவசரமான பிரச்னைகளிலும் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தால் சிறப்புக் கூட்டங்கள் நடத்தப்படும். இப்போதைய குழுவில் ஆசிய பசிபிக் நாடுகளின் பிரதிநிதிகளாக பஹ்ரைன், வங்கதேசம், பிஜி தீவுகள், இந்தியா, பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த முறை தலைமைப் பதவி இந்தக் குழுவிலிருந்து ஒரு நாட்டுக்குத்தான் தரப்பட வேண்டும்.

ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் பிரதிநிதிகளான பிஜி தீவு, பஹ்ரைன் இரண்டுமே இந்தியாவுடன் மிக நெருக்கமான உறவு வைத்துக் கொண்டிருப்பவை. இரண்டில் ஒன்று என்று இந்தியாவால் தேர்ந்தெடுத்துவிட முடியாத தர்மசங்கடம் ஏற்பட்டிருக்கிறது. 

பிஜி தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையே காணப்படும் தொப்புள் கொடி உறவு முக்கியமானது. அந்தத் தீவின் மூன்றில் ஒரு பங்கு மக்கள் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். பிஜி தீவின் வேட்பாளரான நஸôத் ஷமீம்கான், ஏற்கெனவே இந்தியாவின் ஆதரவைப் பெற்றிருப்பவர். 

இப்போது சீனாவாலும் ரஷியாவாலும் முன்மொழியப்படும் பஹ்ரைனும் இந்தியாவால் தவிர்க்க முடியாத நேச நாடு. ஏறத்தாழ மூன்றரை லட்சம் இந்தியர்கள் பஹ்ரைனில் பணியாற்றுகிறார்கள். அதுமட்டுமல்லாமல், இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைக்கு பஹ்ரைனையும் சார்ந்திருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கடந்த டிசம்பர் மாதம் 16}ஆம் தேதி மனித உரிமைக் குழுவின் 47 உறுப்பினர்கள் மூன்று துணைத் தலைவர்கள் பதவிக்கு பஹாமாஸ், சூடான், நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களை தேர்ந்தெடுத்தனர். ஆனால், ஆசிய பசிபிக் பிராந்தியத்திலிருந்து தலைவர் பதவிக்கான நாட்டைத் தேர்ந்தெடுக்க முடியவில்லை. 

ஜோ பைடன் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிலையில், 2018}இல் மனித உரிமைக் குழுவிலிருந்து விலகிக் கொண்ட அமெரிக்கா மீண்டும் இணையக்கூடும் என்று சீனா அச்சப்படுகிறது. அதனால், தனக்கு சாதகமான நட்பு நாட்டுப் பிரதிநிதி தலைவராக வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறது. மேலும், வளைகுடா நாடுகளின் பிரதிநிதி என்பதால், மனித உரிமை மீறல் பிரச்னைகளில் இந்தியாவுக்கு எதிராகச் செயல்பட பஹ்ரைன் உதவியாக இருக்கும் என்றும் கருதுகிறது. 

ஐ.நா. சபையின் எல்லா துணை அமைப்புகளையும் தன்னுடைய கைப்பாவையாக மாற்றும் சீனாவின் அடுத்தகட்ட முயற்சிதான் மனித உரிமை குழுவின் தலைமைப் பதவியில் தனக்குச் சாதகமான ஒருவரை நியமிப்பது. இதன் மூலம் சீனாவில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பதும் அதன் நோக்கம். இந்தியா என்ன செய்யப்போகிறது என்பதை உலக நாடுகள் உற்று நோக்கிக் காத்திருக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT