தலையங்கம்

தீயல்ல, அநீதி! | பண்டாரா மாவட்ட பொது மருத்துவமனையில் நிகழ்ந்த தீவிபத்து குறித்த தலையங்கம்

13th Jan 2021 03:52 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

 உலகில் பிறந்த உயிர்கள் அனைத்துமே மரணித்தாக வேண்டும். அந்த மரணம் இயற்கையாக இல்லாமல் விபத்தாக இருந்தால் அது மிகப் பெரிய சோகம். அந்த விபத்து மருத்துவமனையிலேயே நிகழ்கிறது என்றால், அதைவிடப் பெரிய வேதனை இருந்துவிட முடியாது.
 மருத்துவமனைகளில் தீ விபத்து என்பது எதிர்கொள்ள முடியாத அவலம். உடல்நலம் இல்லாமல் தீவிர சிகிச்சைப் பிரிவில் படுக்கையில் இருக்கும் நோயாளிகளால் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ஓடி வெளியேற முடியாது. அதிலும், தீ விபத்தில் சிக்கிக் கொள்வது பச்சிளம் குழந்தைகள் என்று சொன்னால், அதைவிட இதயத்தை உலுக்கும் அவலம் வேறு எதுவுமே இருக்க முடியாது.
 மகாராஷ்டிர மாநிலம் பண்டாரா மாவட்ட பொது மருத்துவமனையில் நடந்தேறியிருக்கும் தீ விபத்து, ஒட்டுமொத்த மனித இனத்தையே உலுக்கியிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் பலியாகி இருப்பவை பிஞ்சுக் குழந்தைகள்.
 ஜனவரி 9-ஆம் தேதி அதிகாலை வேளையில் நடந்த விபத்தில் உயிரிழந்திருப்பது பத்து சிசுக்கள். பண்டாரா மாவட்ட மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கான சிறப்புப் பிரிவில் இருந்த அந்தக் குழந்தைகளின் மரணத்தால் ஏற்பட்ட அதிர்ச்சி அலை, மாநிலத்தைக் கடந்து, இந்தியாவைக் கடந்து உலகெங்கிலும் பரவியதில் வியப்பொன்றுமில்லை. அரசு வழங்கும் பொருளாதார ரீதியான இழப்பீடுகளோ, அரசியல்வாதிகளின் ஆறுதல் வார்த்தைகளோ அந்தக் குழந்தைகளின் பெற்றோர்கள் அடைந்திருக்கும் வேதனையையும் துக்கத்தையும் அகற்றி விடாது.
 பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாகக் கவனிக்காததால் கட்டடங்களில் ஏற்படும் தீ விபத்துகள் தொடர்ந்து உயிரிழப்பை ஏற்படுத்துகின்றன. இந்தியாவில் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து நடைபெறும் நான்காவது தீ விபத்து பண்டாரா விபத்து.
 கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆமதாபாத் மருத்துவமனையில் கொவைட் 19 நோயாளிகள் எட்டு பேர் தீ விபத்தில் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து விஜயவாடாவில், கொவைட்-19-க்கான தற்காலிக சிறப்பு மருத்துவமனையில் பத்து நோயாளிகள் தீக்கிரையானார்கள். நவம்பர் மாதம் குஜராத் மாநிலம் ராஜ்கோட் கொவைட்-19 மருத்துவமனை தீவிபத்து ஐந்து நோயாளிகளின் உயிரைக் குடித்தது. இப்போது நான்காவதாக, மகாராஷ்டிர மாநிலம் பண்டாரா பொது மருத்துவமனையில் பத்து பிஞ்சுக் குழந்தைகள் தீ விபத்தில் உயிரிழந்திருக்கின்றன.
 இதுபோல கடந்த பல ஆண்டுகளில் நடந்த தீ விபத்துகள் குறித்தும், மருத்துவமனை தீ விபத்துகள் குறித்தும் புள்ளிவிவரங்கள் இருக்கின்றன. அதில் வேதனைக்கும், வெட்கத்துக்கும் உரியது என்னவென்றால், இத்தனை தீ விபத்துக்குப் பிறகும்கூட, பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், முறைப்படுத்தவும் நிர்வாகத்தால் முடியவில்லை என்பதுதான்.
 பண்டாரா பொது மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுக்கான சிறப்புப் பிரிவில் அண்டை மாவட்டங்களிலிருந்தும் பிரசவத்தில் பிரச்னை ஏற்படும் குழந்தைகள் கொண்டுவரப்படுகின்றன. அன்றைய விபத்தில் இறந்த குழந்தைகள் சிலமணி நேரங்களுக்கு முன்னர்தான் ஆரம்ப சுகாதார நிலையங்களிலிருந்தும், தனியார் மருத்துவமனைகளிலிருந்தும் பொது மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. ஏழு குழந்தைகள் அதிருஷ்டவசமாக உயிர் பிழைத்தன என்றாலும்கூட, முறையான பயிற்சி இல்லாத ஊழியர்கள் உடனடியாகத் தீயை அணைக்காததால்தான் விபத்து நேர்ந்தது என்கிற குற்றச்சாட்டு உண்மையாக இருக்குமானால், அது கண்டனத்துக்கு உரியது.
 மருத்துவமனை தீ விபத்துகள் ஏனைய தீ விபத்துகளில் இருந்து வித்தியாசப்படுபவை. மருத்துவமனைகளில் நேரும் தீ விபத்துகளுக்கு சில குறிப்பிட்ட காரணங்கள் இருக்கின்றன. பொதுவாகவே அவசர சிகிச்சைப் பிரிவு, பிரசவத்துக்கானஅவசர சிகிச்சைப் பிரிவு, அறுவை சிகிச்சை அறைகள் ஆகியவற்றில் மின் கசிவால் தீப்பிடித்து ஏனைய பகுதிகளுக்குப் பரவுகின்றன என்பதை முந்தைய பல நிகழ்வுகள் தெரிவிக்கின்றன.
 அறுவை சிகிச்சை அறைகள், தீவிர சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றில் மிக அதிக அளவிலான பிராண வாயு (ஆக்சிஜன்) பயன்பாடு காணப்படுவதுதான் தீ விபத்து ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணம். பல்வேறு மருத்துவ இதழ்களில் வெளியான இந்திய மருத்துவமனை தீ விபத்துகள் குறித்த கட்டுரைகளும், ஆய்வுகளும் இதை உறுதிப்படுத்துகின்றன.
 மோட்டார்களும், மின்சார உபகரணங்களும் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்துக்குத் தொடக்கம் குறிப்பதும், பிளாஸ்டிக் உபகரணங்கள் தீ பரவுவதற்கு உதவுவதும் நிரூபிக்கப்பட்ட உண்மைகள். மருத்துவமனையின் சிறப்புப் பிரிவுகளில் பிராணவாயு எச்சரிக்கைக் கருவி (மானிட்டர்) பொருத்தப்பட வேண்டும். பிராணவாயு வைக்கப்பட்டிருக்கும் இடங்களுக்கு அருகில் மின்சார உபகரணங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
 இவையெல்லாம் தீ விபத்துகள் நேராமலிருக்க மருத்துவமனை நிர்வாகம் கவனித்திருக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள். முறையான கணக்கெடுப்பும், கண்காணிப்பும் இல்லாததால்தான் உலகில் ஏற்படும் மிகப்பெரிய தீ விபத்துகளில் ஐந்தில் ஒன்று இந்தியாவில் காணப்படுகிறது.
 பண்டாரா அரசு மருத்துவமனை கட்டப்பட்டு ஐந்து ஆண்டுகள்தான் ஆகியிருக்கின்றன. அதனால், மின்சாரக் கம்பிகளும் உபகரணங்களும் புதிதாகத்தான் இருந்திருக்க வேண்டும். அப்படியானால், அவை தரமற்றவையாக இருந்தனவா? அந்தக் கட்டடத்துக்குத் தடையில்லாச் சான்று வழங்கப்பட்டபோது முறையாக சோதனை நடத்தப்படவில்லையா?
 அரசு மருத்துவமனைகளிலேயே முறையான பாதுகாப்பு இல்லாமலும், தீ அணைப்பு உபகரணங்கள் வேலை செய்யாமலும், தரமற்ற கட்டுமானமும் இருந்தால் தனியார் மருத்துவமனைகளில் விபத்துகள் ஏற்படும்போது அவர்களைத் தண்டிப்பது எங்ஙனம்?
 தீ விபத்துகள் இந்தியாவில் தொடர்கதைதானா?

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT