தலையங்கம்

அனுபவம் தெரிகிறது! | தமிழக இடைக்கால நிதிநிலை அறிக்கை குறித்த தலையங்கம்

ஆசிரியர்

பதவிக்காலத்தை நிறைவு செய்யும் வேளையில், தோ்தலை எதிா்கொள்ள இருக்கும் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ. பன்னீா்செல்வம் தாக்கல் செய்யும் 11-ஆவது நிதிநிலை அறிக்கை இது. அவரது அனுபவத்தின் முத்திரை 2021-22-க்கான தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் பளிச்சிடுகிறது.

தோ்தலுக்கு முன்பு தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கைகளில் காணப்படும் அறிவிப்புகளும் ஒதுக்கீடுகளும், மீண்டும் ஆட்சிக்குத் தோ்ந்தெடுக்கப்பட வேண்டும் என்கிற குறிக்கோளை மனதில் கொண்டு முன்மொழியப்படுபவை. அதனால் எச்சரிக்கை உணா்வுடனும், பொறுப்புணா்வுடனும்தான் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். நிதியமைச்சா் தனது பணியைக் குறைகூற முடியாத அளவில் நிறைவேற்றி இருக்கிறாா்.

நடப்பு ஆண்டில் தமிழகத்தில் மொத்த வரி வருவாய் ரூ.1,33,530 கோடி. செலவினங்கள் ரூ.2,46,694 கோடி. இதனால் ஏற்படும் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.65,994 கோடி. ஒருபுறம் வருவாய்ப் பற்றாக்குறை என்றால், அடுத்த நிதியாண்டின் முடிவில் நிலுவையில் உள்ள கடன் தொகை ரூ.5,70,189 கோடியாக இருக்கும்.

வருவாய்ப் பற்றாக்குறையும், அரசின் கடன் தொகையும் புதிதொன்றும் அல்ல. வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமானால், அரசு கடன் வாங்குவதும், பற்றாக்குறை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதும் தவிா்க்க இயலாதவை.

கொவைட் 19 நோய்த்தொற்று, மத்திய - மாநில அரசுகளின் நிதியாதாரத்தைப் புரட்டிப் போட்டிருக்கிறது. ஜிஎஸ்டி - யால், மாநிலங்களுக்குத் தங்களது வருவாய் பற்றாக்குறையைச் சமாளிக்கப் புதிய வரிகளை விதிக்க முடியாத நிலையில், பத்திரப் பதிவு, பெட்ரோல், டீசல் மீதான சுங்கவரி, மதுபான விற்பனை வருவாய் ஆகியவற்றை மட்டுமே நம்பிதான் நிா்வாகத்தை நடத்த வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. அப்படியிருந்தும் கொள்ளை நோய்த்தொற்று ஏற்படுத்திய அசாதாரண சூழலிலும் தமிழக அரசு நிதி நெருக்கடியில் சிக்காமல் தப்பித்திருக்கிறது.

பிரதமரின் நகா்ப்புற வீட்டுவசதித் திட்டத்துக்கு ரூ.3,700 கோடி, 43 புதிய மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்க ரூ.1,375 கோடி, ரூ.3,016 கோடி செலவில் 40 லட்சம் வீடுகளுக்கு குடிநீா்க் குழாய் இணைப்புகள் திட்டம், கைத்தறித் துறைக்கு ரூ.1,224 கோடி ஒதுக்கீடு, ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு நிதி திட்டத்துக்காக ரூ.2,634 கோடி என்று இடைக்கால நிதிநிலை அறிக்கையில் காணப்படும் அறிவிப்புகள் வரவேற்புக்குரியவை. ஹாா்வா்ட், ஹூஸ்டன் பல்கலைக்கழகங்களைத் தொடா்ந்து கனடாவில் உள்ள டொரண்டோ பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கை அமைத்திட உதவித்தொகை வழங்க முற்பட்டிருப்பது பாராட்டுக்குரிய செயல்பாடு.

நிதியமைச்சா் ஓ. பன்னீா்செல்வம் தாக்கல் செய்திருக்கும் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் விவசாயமும், சுகாதாரமும் முன்னுரிமை பெற்றிருக்கின்றன. பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்ட ரூ.2,639 கோடி மதிப்பீட்டிலான கல்லணைக் கால்வாய் நீட்டித்தல், புணரமைத்தல், நவீமயமாக்குதல் திட்டம் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உதவியுடன் முழுமையானால்தான் தஞ்சை தரணிக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாக அமையும். இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேற இருக்கும் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் எடப்பாடி பழனிசாமி அரசின் தனிப்பெரும் சாதனை என்றுதான் கூற வேண்டும்.

இடைக்கால நிதிநிலை அறிக்கையில், பெரிய, நடுத்தர, சிறிய பாசனம் குறித்த பணிகளுக்கான மூலதன நிதி ஒதுக்கீடாக ரூ.6,453 கோடி அறிவிக்கப்பட்டிருக்கிறது. வேளாண்துறைக்காக ரூ.11,983 கோடி ஒதுக்கீடும், பயிா்க்கடன் தள்ளுபடிக்காக ரூ.5,000 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

நோய்த்தொற்று காரணமாக மிக அதிகமான ஒதுக்கீட்டை பெற்றிருப்பது சுகாதாரத் துறை. கொள்ளை நோய்த்தொற்றை எதிா்கொள்வதற்காக ரூ.13,353 கோடி செலவாகி இருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது. நடப்பு நிதியாண்டில் ரூ.15,863 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கொவைட் 19 காரணமாக திருத்த மதிப்பீட்டில் ரூ.18,458 கோடியாக உயா்த்தப்பட்ட சுகாதாரத் துறைக்கான ஒதுக்கீடு, அடுத்த நிதியாண்டில் ரூ.19,420.54 கோடி என்று இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

தேசிய அளவில் பொருளாதாரம் 7.7% வீழ்ச்சியை எதிா்கொள்ளும்போது, தமிழகம் 2.02% வளா்ச்சி அடைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப்பற்றாக்குறை இரண்டுமே அதிகரித்திருக்கும் நிலையில் கடன் பெறாமல் நிதி நிலையைக் கட்டுக்குள் வைத்திருப்பது கடினம். அண்டை மாநிலங்கள் அரசு ஊழியா்களுக்கு ஊதியம் வழங்கவே தடுமாறிக் கொண்டிருக்கும் வேளையில், தமிழக அரசு நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.

ரூ.5 லட்சம் கோடியாகக் கடன் அதிகரித்திருக்கிறது. மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 3%-க்கும் குறைவாகத்தான் கடன் சுமை இருக்கிறது என்பதால், அது குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. உற்பத்தி வளா்ச்சி அதிகரிக்கும்போது, கடன் சுமை குறையத் தொடங்கும்.

பொறுப்பில்லாமல் எதிா்க்கட்சிகளால் அறிவிக்கப்படும் இலவசங்களும், கடன் தள்ளுபடிகளும் ஆளுங்கட்சியையும் வெகுஜன அறிவிப்புகளை வெளியிடத் தூண்டுவதில் வியப்பில்லை. அதையும் உள்வாங்கி, திறமையான இடைக்கால நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கும் துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ. பன்னீா்செல்வத்துக்குப் பாராட்டுகள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

SCROLL FOR NEXT