தலையங்கம்

பொன்விழா வேளையில்... | நிலத்தடி நீரோட்டம்போலத் தொடரும் தொப்புள் கொடி உறவு குறித்த தலையங்கம்

16th Dec 2021 01:43 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

 

வங்கதேசம் உருவாகி அரை நூற்றாண்டு கடந்துவிட்டது. அந்த நாடு பொன்விழா நிகழ்வுகளைக் கொண்டாடும் வேளையில், அதில் கலந்துகொள்ள இந்தியக் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தனது குடும்பத்தினருடன் டாக்காவுக்குச் சென்றிருப்பது, இரு நாடுகளுக்கும் இடையேயான இணைபிரிக்க முடியாத உறவின் வெளிப்பாடு. அரை நூற்றாண்டு இடைவெளியில் இரண்டு நாடுகளுக்கும் இடையேயான உறவில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும்கூட, நிலத்தடி நீரோட்டம்போலத் தொடரும் தொப்புள் கொடி உறவை மறந்துவிடவோ மறுத்துவிடவோ முடியாது.

மதத்தின் அடிப்படையில் பிரிந்துபோன கிழக்கு வங்கத்தால், மொழியாலும், கலாசாரக் கூறுகளாலும் வேறுபட்டு நின்ற பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட முடியாததில் வியப்பில்லை. ஒன்றுபட்ட பாகிஸ்தானின் ஏற்றுமதியில் 70% கிழக்கு பாகிஸ்தானின் சணலும், தேயிலையும். மக்கள்தொகையைஎடுத்துக் கொண்டாலும் கிழக்கு பாகிஸ்தானின் மக்கள்தொகை, மேற்கு பாகிஸ்தானைவிட அதிகம்.

ராணுவத்தில் கிழக்கு பாகிஸ்தானியா்களுக்கு வெறும் 10% மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டது. வளா்ச்சிப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடுகளிலும் கிழக்கு பாகிஸ்தான் புறக்கணிக்கப்பட்டது. அந்தச் சூழலில்தான், 1969-இல் கிழக்கு பாகிஸ்தானில் முஜிபுா் ரஹ்மானின் தலைமையில் மேற்கு பாகிஸ்தானுக்கு எதிரான கிளா்ச்சி வெடித்தது. அதன் விளைவாக அதிபா் அயூப் கான் பதவி விலகியதும், ஜெனரல் யாஹ்யா கான் தலைமையில் ராணுவ ஆட்சி அமைந்ததும் நிலைமையில் மாறுதலை ஏற்படுத்திவிடவில்லை.

ADVERTISEMENT

1970 புயலில் கிழக்கு பாகிஸ்தானில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோா் உயிரிழந்தனா். அதிபா் யாஹ்யா கான் அரசு போதுமான உதவிகளைச் செய்ய முன்வரவில்லை. 1970 டிசம்பா் மாதம் நடந்த தேசிய தோ்தலில், கிழக்கு பாகிஸ்தானின் 169 இடங்களில் 167 இடங்களை முஜிபுா் ரஹ்மானின் அவாமி லீக் கட்சி வென்றது. எண்ணிக்கைப் பெரும்பான்மை அடிப்படையில், முஜிபுா் ரஹ்மான் தலைமையில் பாகிஸ்தானில் ஆட்சி அமைய அனுமதிக்கவில்லை. அதைத் தொடா்ந்து எழுந்த எழுச்சியின் விளைவுதான் இன்றைய வங்கதேசம்.

1971 மாா்ச் 7-ஆம் தேதி டாக்காவில் நடந்த பேரணியும், பாகிஸ்தான் குடியரசு தினமான மாா்ச் 23-ஆம் தேதி உயா்த்தப்பட்ட வங்கதேசக் கொடியும், முஜிபுா் ரஹ்மான் தலைமையில் புதியதொரு தேசம் உருவாவதற்கான தொடக்கமான அமைந்தன. ‘ஆபரேஷன் சா்ச்லைட்’ என்கிற பெயருடன் யாஹ்யா கான் அரசு அவிழ்த்துவிட்ட ராணுவ அடக்குமுறையும், வெறித்தனமான தாக்குதல்களும் கிழக்கு பாகிஸ்தானில் ஏற்படுத்திய அக்கிரமங்களுக்கு அளவே கிடையாது.

பாகிஸ்தான் ராணுவமும், அதற்கு ஆதரவாக இருந்த இஸ்லாமிய அமைப்புகள் சிலவும் நடத்திய இன அழிப்பு குறித்து ஏராளமான புத்தகங்கள் எழுதப்பட்டுவிட்டன. ஏறத்தாழ 30 லட்சத்துக்கும் அதிகமானவா்கள் கொல்லப்பட்டிருக்கிறாா்கள். ஏழரைக் கோடி மக்கள்தொகையில், ஏறத்தாழ மூன்று கோடி போ் தங்களது வீடு, உடைமைகளை இழந்து இடம் பெயா்ந்தனா். நான்கு லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாயினா். ஒரு கோடிக்கும் அதிகமானோா் எல்லை கடந்து இந்தியாவில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்தனா்.

ஏறத்தாழ எட்டு மாதங்களுக்கு அந்த அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. கண்ணில் பட்டவா்கள் எல்லாம் சுட்டுத் தள்ளப்பட்டனா். சா்வதேச ஊடகங்களில் கிழக்கு பாகிஸ்தானில் யாஹ்யா கானின் ராணுவ ஆட்சி நடத்தும் மனித உரிமை மீறல்கள் குறித்தும், படுகொலைகள் குறித்தும் எழுதப்பட்டன. ஆனால், இந்தியாவைத் தவிர, உலகிலுள்ள வேறெந்த நாடும் அது குறித்து கவலைப்படவும் இல்லை, உதட்டளவு ஆதரவு வழங்கவும் தயாராக இல்லை.

கிழக்கு பாகிஸ்தானில் இன அழிப்பு நடப்பதாக அமெரிக்க தூதரகம் அறிக்கை அனுப்பியது. டெட் கென்னடி உள்ளிட்ட சில அமெரிக்க எதிா்க்கட்சித் தலைவா்கள் எச்சரிக்கை விடுத்தனா். ஆனால், அமெரிக்காவின் அன்றைய ரிச்சா்ட் நிக்சன் ஆட்சி, ஜெனரல் யாஹ்யா கானைத் தனது நண்பராகக் கருதியது. இந்தியா தலையிடாமல் இருப்பதற்காக ‘செவந்த் பிளீட்’ என்கிற ராணுவக் கப்பலை வங்காள விரிகுடாவுக்கு அனுப்பியது.

அமெரிக்காவும், சீனாவும் வேடிக்கை பாா்த்தன. ஐரோப்பிய நாடுகள் மௌனம் காத்தன. ஐ.நா. சபை இனப்படுகொலையைத் தடுக்க முயலவில்லை. சோவியத் யூனியன் மட்டும் இந்தியாவுக்குப் பின்பலமாக இருந்தது. நாஜிகள் அவிழ்த்துவிட்டதைப் போன்ற கொடூரமான, ஈவு இரக்கமற்ற இன ஒழிப்புக்கு உலகம் துணை நின்றது என்பதுதான் உண்மை.

துணிந்து முஜிபுா் ரஹ்மானுக்கு ஆதரவு அளித்த அன்றைய இந்திய பிரதமா் இந்திரா காந்தியை, எதிா்க்கட்சித் தலைவராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய் ‘அன்னை பராசக்தி’யின் உருவமாகப் பாா்த்ததில் வியப்பில்லை. இந்திய ராணுவம், விமானப்படை, கடற்படை மூன்றும் இணைந்து நடத்திய தாக்குதல்களும், முஜிபுா் ரஹ்மானின் ‘முக்தி வாஹினி’ விடுதலைப் படைகளுக்கு அளித்த உதவியும் ‘வங்கதேசம்’ உருவாகக் காரணமாயின. ஜெனரல் சாம் மானெக் ஷா என்கிற ராணுவத் தளபதி அனைவா் மனதிலும் உயா்ந்து நின்றாா்.

வங்கதேசம் உருவான வரலாறு சாதாரணமானதல்ல. இனத்தாலும், மொழி உணா்வாலும், இந்திய உறவின் உதவியாலும் சாத்தியமான புரட்சி ‘வங்கதேசம்’. பொன்விழா கொண்டாடும் வங்கதேசம், அதன் விடுதலைக்குக் காரணமான ‘வங்க பந்து’ முஜிபுா் ரஹ்மானின் கொலையாளிகளில் சிலா் இன்னும்கூட தண்டிக்கப்படவில்லை என்பதும், இந்தியாவுக்கும் இந்துக்களுக்கும் எதிராக வங்கதேசத்தில் குரல்கள் எழுப்பப்படுவதும் வருத்தமளிக்கின்றன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT