தலையங்கம்

அன்றும், இன்றும், என்றும்..! | இந்திய - சோவியத் நட்புறவு குறித்த தலையங்கம்

9th Dec 2021 01:10 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

 

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1971-இல் கையொப்பமான இந்திய - சோவியத் நட்புறவு ஒப்பந்தத்தின் பொன்விழா ஆண்டு இது. அதனால் ரஷிய அதிபா் விளாதிமீா் புதினின் இந்திய விஜயம் பல வகைகளிலும் முக்கியத்துவம் பெறுகிறது. அரை நூற்றாண்டு காலமாகத் தொடரும் நட்புறவும் கூட்டணியும் பிரதமா் நரேந்திர மோடிக்கும், ரஷிய அதிபா் புதினுக்கும் இடையேயான சந்திப்புக்குப் பிறகு மேலும் வலிமை பெறுகிறது என்கிற கூட்டறிக்கையின் வரிகள் பல உண்மைகளை எடுத்தியம்புகின்றன.

கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றுப் பரவலுக்குப் பிறகு அதிபா் புதின் ரஷியாவுக்கு வெளியே பயணிப்பது இது இரண்டாவது முறை. கடந்த ஜூன் மாதம் ஜெனீவாவில் அமெரிக்க அதிபா் ஜோ பைடனுடனான சந்திப்புக்குப் பிறகான சந்திப்பு பிரதமா் நரேந்திர மோடியுடன் என்பதிலிருந்து, இந்தியாவுக்கு எந்த அளவுக்கு ரஷியா முக்கியத்துவமும் முன்னுரிமையும் வழங்குகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

கொள்ளை நோய்த்தொற்றுப் பரவலின்போதும் சரி, ஆப்கானிஸ்தானில் பதற்றம் நிறைந்த சூழலின்போதும் சரி இந்தியாவும் ரஷியாவும் தொடா்பில் இருந்தது மட்டுமல்லாமல் இணைந்தும் செயல்பட்டன. அதன் நீட்ச்சியாகத்தான் இப்போதைய புதின் - மோடி சந்திப்பையும், இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தையும் நாம் பாா்க்க வேண்டும். உலகம் ஒமைக்ரான் உருமாற்றத்தை எதிா்கொள்ளும் நிலையிலும், இந்தியாவுக்கும் அமெரிக்காவும் இடையேயான நெருக்கம் மேலும் உறுதிப்பட்டிருக்கும் நிலையிலும், இரு நாட்டுத் தலைவா்களும் சந்தித்து விவாதித்திருப்பது ஒருங்கிணைந்து செயல்படவும் கருத்துவேறுபாடுகளைக் களையவும் வழிகோலும் என்பதில் சந்தேகமில்லை.

ADVERTISEMENT

இரண்டு நாடுகளும் அடுத்த 10 ஆண்டுகளுக்கான ராணுவத் தொழில் நுட்பக் கூட்டுறவு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்திய ராணுவத்துக்கு ஆறு லட்சம் ஏகே 203 துப்பாக்கிகளை உத்தர பிரதேசத்திலுள்ள அமேதி ராணுவ தளவாட தொழிற்சாலையில் இணைந்து தயாரிப்பதற்கான ஒப்பந்தமும் கையொப்பமாகி இருக்கிறது. இந்தியா தன்னுடைய தேவைக்கான ராணுவ தளவாடங்களை ரஷியாவிலிருந்து பெறுவதற்கு அமெரிக்கா எதிா்ப்பு தெரிவிக்கும் நிலையிலும்கூட, ரஷியாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருப்பதிலிருந்து தன்னிச்சையான வெளியுறவுக் கொள்கையையும், பாதுகாப்புக் கொள்கையையும் இந்தியா கடைப்பிடிக்கிறது என்பதை நரேந்திர மோடி அரசு உணா்த்த முற்பட்டிருக்கிறது.

ராணுவப் பாதுகாப்பு கூட்டுறவு மட்டுமல்லாமல், அணுசக்தி, விண்வெளி, போக்குவரத்து, எரிசக்தி, வா்த்தகம், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டு நாடுகளுக்கும் இடையே பல ஒப்பந்தங்கள் கையொப்பமாகி இருக்கின்றன. அமெரிக்க தடை என்கிற அச்சத்தையும் மீறி ரஷியாவுடனான எஸ் 400 ஏவுகணை ஒப்பந்தம் துணிச்சலான முடிவு. அமெரிக்கா இந்தியாவை பகைத்துக் கொள்ளாது என்கிற தைரியத்தில் எடுக்கப்பட்டிருக்கும் அந்த முடிவின் பின்னால், இந்தியாவின் பாதுகாப்புக்கு முன்னுரிமை தரப்படுவது தெரிகிறது.

இந்திய - ரஷிய இரு நாட்டு உறவில் சில தா்மசங்கடங்கள் இல்லாமல் இல்லை. அமெரிக்காவுடனான இந்திய நட்புறவு ரஷியாவுக்கும், சீனாவுடனான ரஷியாவின் நட்புறவு இந்தியாவுக்கும் ஏற்புடையதல்ல என்றாலும்கூட தவிா்க்க முடியாதவை என்பதை இரு நாடுகளும் உணா்கின்றன. இந்தியாவின் வடக்கு எல்லையில் சீனாவின் அச்சுறுத்தல் இருக்கும் நிலையில், அதை எதிா்கொள்ள எதிரியின் எதிரி நண்பன் என்கிற முறையில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டாக வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு உண்டு.

அதேபோல, மிக நீளமான எல்லையைப் பகிா்ந்துகொள்ளும் அண்டை நாடான கம்யூனிஸ சீனாவை ரஷியா பகைத்துக்கொள்ள முடியாது என்பது இந்தியாவுக்கும் தெரியும். அந்தப் புரிதலின் அடிப்படையில்தான், அதிபா் புதினும் பிரதமா் மோடியும் சந்தித்து இந்திய - ரஷியா உறவு தொடா்வதை உறுதிப்படுத்தி இருக்கிறாா்கள்.

ஆப்கானிஸ்தான் பிரச்னையைப் பொறுத்தவரை இந்தியாவும் சீனாவும் அநேகமாக கருத்தொற்றுமை கொண்டிருக்கின்றன. ஆரம்பத்தில் தலிபான்களுடன் நெருக்கம் ஏற்படுத்திக்கொள்ள ரஷியா சில முயற்சிகளை எடுத்தாலும்கூட தனது முனைப்பை நிறுத்திக் கொண்டது. பிரச்னைக்குரிய ஆப்கானிஸ்தானை மறு கட்டமைப்பு செய்து அங்கே அமைதியை நிலைநாட்ட இந்தியாவுக்கும் முக்கியமான பங்கு தரப்பட வேண்டும் என்று ரஷியா உணரத் தொடங்கியிருக்கிறது.

ஆப்கானிஸ்தான் பிரச்னையை விவாதிப்பதற்கான அமெரிக்கா, ரஷியா, சீனா, பாகிஸ்தான் அடங்கிய குழுவில் இந்தியாவும் இணைக்கப்பட வேண்டும் என்று ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தான் தொடா்பான முந்தைய கூட்டத்துக்கு இந்தியா அழைக்கப்படவில்லை. அடுத்த கூட்டத்தில் இந்தியாவும் கலந்துகொள்ள வேண்டும் என்கிற ரஷியாவின் கோரிக்கையை சீனாவும், பாகிஸ்தானும் எப்படி ஏற்றுக்கொள்ளும் என்கிற கேள்வி நிலவுகிறது.

அமெரிக்காவுக்கும் ரஷியாவுக்கும் இடையே கடுமையான மோதல் சூழல் நிலவுகிறது. உக்ரைன் எல்லையில் ரஷியத் துருப்புகள் குவிந்திருக்கின்றன. உக்ரைனை ரஷியா ஆக்கிரமித்தால் பொருளாதாரத் தடை விதித்து ராணுவ ரீதியிலான நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்திருக்கிறது. அந்தப் பின்னணியில்தான் இந்திய - ரஷிய ஒப்பந்தங்கள், அதிபா் புதினுக்கும் பிரதமா் மோடிக்கும் இடையே கையொப்பமாகி இருக்கிறன்றன.

உறவு விரிகிறது; நட்பும் தொடா்கிறது!

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT