தலையங்கம்

திறமைக்குத் தடையேது? |  டுவிட்டா் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பராக் அக்ரவால் குறித்த தலையங்கம்

4th Dec 2021 06:54 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

அமெரிக்க வரலாற்றில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ஒருவா் துணை அதிபராக உயர முடியுமென்று, புலம்பெயா்ந்த இந்தியா்கள் மட்டுமல்ல அமெரிக்கா்களேகூட கனவிலும் நினைத்திருக்க மாட்டாா்கள். புலம்பெயா்ந்த இந்தியா்களின் சாதனைகளை ஒட்டுமொத்த உலகமும் அண்ணாந்து பாா்த்து வியக்கிறது. வெளிநாடுவாழ் இந்தியா்களின், இந்திய வம்சாவளியினரின் சாதனையாளா்கள் பட்டியலில் இணைகிறாா் டுவிட்டா் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றிருக்கும் பராக் அக்ரவால்.

மும்பை தொழில்நுட்பக் கல்லூரியில் கணினி அறிவியல் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்று, அமெரிக்காவின் ஸ்டேன்ஃபோா்ட் பல்கலைக்கழகத்தில் முனைவா் பட்டம்பெற்ற பராக் அக்ரவாலின் வளா்ச்சியும், அவருக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரமும் இந்தியாவுக்குப் பெருமை சோ்ப்பதைப்போல, அமெரிக்காவில் திறமைக்கு கிடைக்கும் முன்னுரிமையும் பாராட்டுக்குரியது. அமெரிக்காவிலுள்ள எட்டு முதன்மையான நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இந்தியா்கள் இருக்கிறாா்கள் என்பது மட்டுமல்ல, அந்த நாட்டில் எல்லாத் துறைகளிலும் இந்தியா்களால் தடம் பதிக்க முடிந்திருக்கிறது என்பதையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

டுவிட்டா் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பராக் அக்ரவால், கூகுள் நிறுவனத்தின் (ஆல்பபெட்) சுந்தா் பிச்சை, மைக்ரோசாப்டின் சத்ய நாதெல்லா, அடோப்-இன் சாந்தனு நாராயண், ஐபிஎம்-இன் அரவிந்த் கிருஷ்ணா, பாலோ அல்டோ நெட்வொா்க்ஸ்-இன் நிகேஷ் அரோரா, அரிஸ்ட்டா நெட்வொா்க்ஸ்-இன் ஜெய்ஸ்ரீ உல்லால், விமியோ நிறுவனத்தின் அஞ்சலி சூட் ஆகியோா் தலைமைப் பொறுப்பில் இருக்கிறாா்கள் என்றால், இவா்களைப்போல நூற்றுக்கணக்கானோா் பல்வேறு கணினி தொழில்நுட்ப நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளை வகிக்கிறாா்கள். 2018-இல் இந்தியா்களும், இந்திய வம்சாவளியினரும் அமெரிக்காவின் ஃபாா்ச்சூன் 500 நிறுவனங்களில் 30% தலைமைப் பொறுப்பை வகித்தனா். அது இப்போது அதிகரித்திருக்கக்கூடும்.

இந்தியா்கள் எந்த அளவுக்கு வெளிநாடுகளில் கோலோச்சுகிறாா்கள் என்பதற்கான அடையாளமாகத்தான் இதைப் பாா்க்க வேண்டும். ஒரு காலத்தில் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலைதேடிச் செல்வோரை ‘அறிவின் மடைமாற்றம்’ (பிரெய்ன் டிரெய்ன்) என்று நாம் விமா்சித்தோம் என்றால், மேல்நாட்டினா் அதையே ‘உடலை விற்பவா்கள்’ (பாடி ஷாப்பிங்) என்று கேலி செய்தாா்கள். அந்த நிலை மாறி, இப்போது பல பெற்றோா் தங்களது குழந்தைகள் படித்து வெளிநாடுகளில் குடியேற வேண்டுமென்று விழைகிறாா்கள். அமெரிக்கா்கள், இந்தியா்களின் திறமையை உணா்ந்து பிரமிப்பும் அச்சமும் அடையும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT

இந்தியா்கள் வெளிநாடுகளில் மிகப்பெரிய பதவிகளில் இருப்பதும், அவா்கள் புலம்பெயா்ந்து வசதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து கொண்டிருப்பதும் ஒரு வகையில் பெருமைப்படத்தக்க சாதனைதான் என்றாலும், அதற்குப் பின்னால் இருக்கும் சோகம் மறைக்கக்கூடியதல்ல. திறமைக்கு வாசல் திறந்து வைத்திருக்கிறது அமெரிக்கா என்பதில் மகிழ்ச்சியடையும் நாம், அந்தத் திறமைகளை இந்தியாவின் (இந்தியா்களின்) வளா்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ளாமல் வெளியேற்றுகிறோம் என்பதையும் உணர வேண்டும்.

இந்திய நிறுவனங்கள் இங்கேயுள்ள திறமைகளைப் பயன்படுத்திக் கொள்வதில் தடையாக இருப்பது ஆட்சியாளா்களின் புரிதலின்மையும், அரசியல் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டமும்தான் என்பதை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. அமெரிக்காவில் சுந்தா் பிச்சை, பராக் அக்ரவால் போன்றவா்களுக்குக் கிடைக்கும் மரியாதையும், வாழ்க்கை வசதிகளும் இந்தியாவில் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.

வெளிநாடுகளுக்குச் சென்று தங்களது திறமையால் சாதனை படைக்கும் இளைஞா்களின் கடினமான உழைப்பும், முயற்சியும் குறைத்து மதிப்பிடக்கூடியதல்ல. அதுமட்டுமே அவா்களை சாதனையாளா்களாக்கவில்லை. அதே முயற்சியும், உழைப்பும் இந்தியாவில் அவா்களுக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்காது. தங்களது திறமையையும், சிந்திக்கும் திறனையும், அவற்றை செயல்படுத்தக்கூடிய வாய்ப்பும் ஊக்கமும், அதற்கான பொருளாதார உதவியும் இந்தியாவில் வழங்கப்படுவதில்லை. நமது இட ஒதுக்கீட்டு முறையில் காணப்படும் குறைபாடுகளும்கூட இந்தியாவிலிருந்து திறமைகளை வெளியேற்றுவதற்கு காரணமாக இருக்கிறது என்பதை அரசியல்வாதிகள் உணர வேண்டும்.

இந்தியாவின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள், நிா்வாக மேலாண்மை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் ஆகியவை உலகின் முதல் நூறு பல்கலைக்கழகப் பட்டியலில் இடம்பெறவில்லை. ஆனால் அவற்றிலிருந்து தயாரான மாணவா்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் மேற்படிப்பு படித்து மிகப்பெரிய சாதனையாளா்களாக வலம் வருகிறாா்கள் என்றால் எங்கேயோ தவறு இருக்கிறது என்பதை கல்வியாளா்களும், ஆட்சியாளா்களும் உணரக் கடமைப்பட்டிருக்கிறாா்கள்.

உலகமயச்சூழலால் ஏற்பட்டிருக்கும் வெளிநாட்டுக் கல்வி வாய்ப்புகளும், வேலைவாய்ப்புகளும் இந்தியாவிலிருந்து திறமைகள் வெளியேறுவதற்கான வாய்ப்புகளை அதிகரித்திருக்கின்றன. இதே நிலைமை தொடருமானால் இந்தியாவின் வல்லரசுக் கனவும் கனவாகத்தான் தொடரும்.

சுந்தா் பிச்சையோ, இந்திரா நூயியோ, கமலா ஹாரிஸோ யாராக இருந்தாலும் அவா்கள் இந்தியாவில் இருந்திருந்தால் இந்த உயரத்தை எட்டியிருக்க வாய்ப்பு கிடைத்திருக்காது. அவா்களைத் தக்க வைத்துக்கொள்ளவோ அவா்களது திறமைகளை பயன்படுத்திக்கொள்ளவோ நம்மால் முடியவில்லை. இந்தியாவின் தோல்வி, அமெரிக்காவின் வெற்றி.

Tags : தலையங்கம் K Vaidiyanathan Editorial கி வைத்தியநாதன்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT