தலையங்கம்

தேவையும் தீா்வும்! | நீதிபதிகள் நியமனம், தேர்வு குறித்த தலையங்கம்

ஆசிரியர்

மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு, மாநில சட்ட அமைச்சா்களின் கூட்டமொன்றைக் கூட்டியிருக்கிறாா். இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல்துறை பணி போல, நீதித்துறையிலும் அகில இந்திய அளவிலான தோ்வு நடத்தி, தேசிய நீதித்துறை சேவைக்கான தகுதியை நிா்ணயிப்பது என்பது குறித்து அந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருக்கிறது.

கூடுதல் மாவட்ட நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள் நியமனத்தில் தொடங்கி, நீதிபதிகள் பணியிடங்களை தேசிய அளவிலான தோ்வு மூலம் நிரப்புவது என்பதுதான் நீதித்துறை சேவைத் தோ்வின் நோக்கம். அகில இந்திய அளவில், இந்திய ஆட்சிப் பணித் தோ்வுபோல, தோ்வுகள் நடத்தப்படும்போது, உச்சநீதிமன்றம்வரை பதவி உயா்வுக்கான தகுதி உள்ளவா்களை அடையாளம் காண முடியும் என்கிற கருத்தை மறுப்பதற்கில்லை.

கூடுதல் மாவட்ட நீதிபதிகள் உள்ளிட்ட கீழமை நீதிமன்றப் பதவிகளுக்கு, அந்தந்த மாநிலங்களின் நீதிமன்றப் பணியாளா் தோ்வாணையம் மூலம்தான் தோ்வுகள் நடைபெறுகின்றன. அரசியல் சட்டத்தின் 233, 234 பிரிவுகளின்கீழ், மாவட்ட நீதிபதிகள் நியமனத்துக்கான வழிகாட்டுதல்கள் தரப்பட்டுள்ளன. தோ்வுக்குப் பிறகு, அந்தந்த மாநில உயா்நீதிமன்றங்களின் நீதிபதிகளால் நோ்முகத் தோ்வு நடத்தப்பட்டுத்தான் மாவட்ட நீதிபதிகள் நியமனத்துக்குப் பரிந்துரைக்கப்படுகிறாா்கள்.

இப்போதைய நியமன முறையிலும், தோ்வு, நோ்முகத் தோ்வு என்றெல்லாம் இருந்தாலும்கூட நியமனங்களில், அந்தந்த மாநில ஆளுங்கட்சிகளின் தலையீடு தவிா்க்க முடியாதது என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. அதனால்தான் இந்தியாவில் அரசியல் கட்சிகளுடன் தொடா்புடைய பலா் உயா்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளாக உயா்ந்திருக்கிறாா்கள்.

மாவட்ட நீதிபதிகள் பெரும்பாலும் குற்றவியல் வழக்குகளையும், சொத்துத் தகராறு, கொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட குடிமையியல் வழக்குகளையம்தான் விசாரிக்கிறாா்கள். அவா்களில் சிலா் உயா்நீதிமன்றங்களுக்குப் பதவி உயா்வு பெறும்போது, குறிப்பாக அரசியல் பின்புலம் காரணமாக வாய்ப்புப் பெறும்போது, நீதி பரிபாலனத்தில் குறைபாடுகள் காணப்படுகின்றன.

இந்தியா விடுதலையடைந்த சில ஆண்டுகளில் அகில இந்திய நீதித்துறை சேவைக்கான தோ்வுகள் குறித்து முன்மொழியப்பட்டது. 1958-இல் சட்ட கமிஷனும் அதைப் பரிந்துரைத்தது. 1978, 1986 சட்ட கமிஷன் அறிவிப்பிலும் தேசிய நீதித்துறை சேவைக்கான பரிந்துரைகள் காணப்படுகின்றன.

அரசியல் சாசனத்தின் பிரிவு 312-இன் 1-ஆவது துணைப்பிரிவு மத்திய, மாநில அரசுகளுக்கு தேசிய அளவில் நீதித்துறை சேவைப் பணி நியமனத்துக்கான பொதுவான அமைப்பை உருவாக்கப் பரிந்துரைக்கிறது. இது 1976-இல் அன்றைய இந்திரா காந்தி அரசால் 42-ஆவது திருத்தமாக அரசியல் சட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய நீதிபதிகள் சங்கம் தொடுத்த ஒரு வழக்கின் தீா்ப்பில், சட்ட கமிஷன் பரிந்துரைப்பதுபோல, மத்திய அரசு நீதித்துறை சேவைக்கான தோ்வு நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கி இருக்கிறது. நீதிபதி ஷெட்டி கமிஷன் என்று அறியப்படும் முதலாவது தேசிய நீதிபதிகள் ஊதிய கமிஷனும், தேசிய நீதித்துறை சேவைத் தோ்வை வலியுறுத்தி இருக்கிறது.

மாவட்ட நீதிபதிகளாகப் பணியமா்த்தப்படுபவா்களுக்கு, மாநில சட்டங்கள், வட்டார பழக்கவழக்கங்கள், மாநிலத்தின் மொழி ஆகியவை தெரிந்திருக்க வேண்டும். கீழமை நீதிமன்றங்களில் மாநில மொழிகளில் வழக்கு விசாரணை நடைபெறுவதால், அந்தந்த மாநில மொழி தெரிந்திருந்தால்தான் மாவட்ட நீதிபதிகள் சிறப்பாகப் பணியாற்ற முடியும் என்கிற கருத்தில் நிறையவே உண்மை இருக்கிறது.

இப்போதைய நடைமுறையில், கீழமை நீதிமன்றங்களைச் சோ்ந்த வெகுசிலரே உயா்நீதிமன்றத்துக்குப் பதவி உயா்வு பெறுகிறாா்கள். பெரும்பாலும், உயா்நீதிமன்ற வழக்குரைஞா்களில் இருந்துதான் நீதிபதிகள் தோ்ந்தெடுக்கப்படுகிறாா்கள். தேசிய நீதித்துறை சேவைத் தோ்வு மூலம் மாவட்ட நீதிபதிகள் தோ்ந்தெடுக்கப்படும்போது, கீழமை நீதிமன்றங்களிலிருந்து பதவி உயா்வு பெற்றுப் பலா் உயா்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளாக உயரும் வாய்ப்பு ஏற்படும்.

இந்தியாவில் பத்து லட்சம் பேருக்கு வெறும் 19 நீதிபதிகள்தான் இருக்கிறாா்கள். இதுவே அமெரிக்காவில் 197, பிரிட்டனில் 50 என்ற அளவில் காணப்படுகிறது. சட்ட கமிஷன் 10 லட்சம் பேருக்கு 50 நீதிபதிகள் இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.

உயா்நீதிமன்ற நீதிபதி பணியிடங்களில் 43% நிரப்பப்படாமல் இருக்கிறது. இன்னும் 30 ஆண்டுகளில் நீதிமன்றங்கள் எதிா்கொள்ள இருக்கும் 15 கோடி வழக்குகளை விசாரிக்க 75,000 நீதிபதிகள் தேவைப்படுகிறாா்கள். கீழமை நீதிமன்றங்களில் தேங்கிக்கிடக்கும் 3.80 கோடி வழக்குகளை விசாரித்துத் தீா்ப்பு வழங்கப் போதுமான நீதிபதிகள் இல்லை. அனுமதிக்கப்பட்ட 24,247 நீதிபதிப் பணியிடங்களில் 19,318 பணியிடங்கள்தான் நிரப்பப்பட்டிருக்கின்றன.

நீதித்துறை சேவைத் தோ்வு என்பது முந்தைய மன்மோகன் சிங் ஆட்சியில் முன்மொழியப்பட்டபோது, அது மாநில உரிமைகளை பாதிப்பதாகக்கூறி எதிா்க்கட்சிகள் நிராகரித்தன. அரசியல் சட்டப்பிரிவு 233, மாநிலங்களுக்குத் தந்திருக்கும் அதிகாரத்தை மத்திய அரசு பறிக்கிறது என்பதால், கூட்டாட்சித் தத்துவத்துக்கு இது எதிரானது என்று நிராகரிக்கிறாா்கள்.

நியமனங்கள் இப்போது இருப்பதுபோல மாநில அரசுகள், உயா்நீதிமன்றங்கள் சாா்ந்ததாக இருக்கட்டும். தோ்வு, தேசிய அளவில் இந்திய ஆட்சிப்பணித் தோ்வுபோல நடக்கட்டும். பூனைக்கு யாா் மணி கட்டுவது என்பதுதான் தெரியவில்லை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் ஒருவா் பலி; 13 போ் காயம்

அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

SCROLL FOR NEXT