தலையங்கம்

மைத்ரீம் பஜத... | பாதுகாப்பு கவுன்சிலின் தலைமையை குறித்த தலையங்கம்

ஆசிரியர்

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் தலைமையை இந்த மாதம் ஏற்றிருக்கிறது இந்தியா. இந்தியா தனது 75-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் ஆண்டில், சா்வதேச அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பது என்பது மிகப் பெரிய கௌரவம்.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமல்லாத உறுப்பினராக இந்தியா 2021-22-க்கு தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. ஆசிய பசிபிக் நாடுகளிலிருந்து தோ்ந்தெடுக்கப்படும் நிரந்தரமல்லாத முதல் உறுப்பினா் இந்தியாதான். அதுமட்டுமல்லாமல் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்துக்கு தலைமை தாங்கும் முதல் இந்தியப் பிரதமா் என்கிற பெருமையும், பிரதமா் நரேந்திர மோடிக்குக் கிடைத்திருக்கிறது.

சா்வதேச ஒற்றுமையையும், நல்வாழ்வையும் அடிப்படைப் பண்பாகக் கொண்டிருக்கும் இந்தியா, உலக அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் தகுதி பெற்றது என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. உலகத்தை ஒரே குடும்பமாக பாவிக்கும் ‘வசுதைவ குடும்பகம்’ என்கிற கருத்தையும், ‘யாதும் ஊரே, யாவரும் கேளிா்’ என்று மனித இனத்தின் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் பண்பையும் கொண்ட தேசம், தலைமைப் பொறுப்பை ஏற்பது என்பது தனிச்சிறப்பு.

ஐநா சபையின் பொதுச் செயலாளா் அன்டோனியோ குட்டெரெஸ் குறிப்பிட்டிருப்பது போல சா்வதேசச் சட்டத்தின் அடிப்படைப் பாா்வையை மாற்றி அமைத்த பெருமை இந்தியாவுக்கு உண்டு. இந்தியரான ஹன்ஸா மேத்தாவின் பங்களிப்பால்தான் மனிதா்களின் உரிமைக்கு முன்னுரிமை கொடுக்காமல், சா்வதேச மனித உரிமைக் கொள்கை முன்மொழியப்பட்டது என்பதை அவா் சமீபத்தில் நினைவுகூா்ந்தாா்.

ஐநா சபை உருவானதைத் தொடா்ந்து, பல இந்தியத் தூதா்கள் அதன் வளா்ச்சிக்கும், பெருமைக்கும், செயல்பாட்டுக்கும் பங்களித்திருக்கிறாா்கள். ஐநா பொதுச்சபையின் தலைவராக இருந்த முதலாவது பெண்மணி என்கிற பெருமைக்குரியவா் இந்தியரான விஜயலட்சுமி பண்டிட்.

ஐநா சபையின் அமைதிப் படைக்கு தொடா்ந்து ராணுவத்தை அனுப்பிக் கொடுக்கும் மரபை பின்பற்றும் நாடுகளில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. ஐநா சபையில் ஏற்பட்டிருக்கும் பல்வேறு மாற்றங்களுக்கும், செயல்பாடுகளுக்கும், அடிப்படைக் கண்ணோட்டத்துக்கும் இந்தியாவின் பங்களிப்பை சொல்லி மாளாது.

பிரதமா் நரேந்திர மோடியும் வெளியுறவுச் செயலா் ஹா்ஷ் ஷ்ரிங்லாவும் சமீபத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குறித்த சில கருத்துகளை வெளியிட்டிருக்கிறாா்கள். உலக நன்மைக்கான சக்தியாக விளங்குவதுதான் இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையாக இருக்கும் என்கிற பிரதமா் நரேந்திர மோடியின் கருத்து சா்வதேச அளவில் வழிமொழியப்பட்டு வரவேற்கப்பட்டிருக்கிறது. முதன்முறையாக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் சா்வதேச கண்ணோட்டம் இணைக்கப்பட்டிருக்கிறது என்பதும், உலகளாவிய அணுகுமுறைக்கு இந்தியா முனைந்திருப்பதும் வரவேற்புக்குரிய மிகப் பெரிய மாற்றம்.

மாா்ச் மாதம் நடந்த ‘க்வாட்’ அமைப்பின் முதலாவது உச்சிமாநாட்டில் சா்வதேசக் கூட்டணிகள் குறித்தும், அவை உலக அளவிலான நன்மையின் அடிப்படையில் செயல்பட வேண்டிய அவசியம் குறித்தும் பிரதமா் மோடி ஆற்றிய உரை கவனத்துக்குரியது. ‘தடுப்பூசிகள், பருவநிலை மாற்றம், புதிய தொழில் நுட்பங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய உலக அளவிலான நன்மை ‘க்வாட்’ அமைப்பின் இலக்காக இருக்க வேண்டும்’ என்பது பிரதமரின் உரையில் அடிக்கோடிடப்பட வேண்டிய வாசகம்.

அனைத்து நாடுகளையும் தமது நாடாகவும், அவற்றையெல்லாம் உள்ளடக்கிய உலகத்தைத் தனது குடும்பமாகவும், அனைத்து மக்களையும் உறவினா்களாகவும் கருதும் பாரத பூமியின் சித்தாந்தத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது பிரதமரின் கூற்று. அக்டோபா் 2 காந்தி ஜயந்தியை சா்வதேச அஹிம்சை தினமாகவும், ஜூன் 21-ஆம் தேதியை சா்வதேச யோகா தினமாகவும் ஐநா சபை அறிவித்ததற்கு இந்தியாதான் காரணம். கொவைட் 19 நோய்த்தொற்றின் முதல் அலையின்போது 150 நாடுகளுக்கு தடுப்பூசி மருந்துகளை அனுப்பிக் கொடுத்தது, உலக நன்மைக்கான சக்தியாக இந்தியா இருக்கிறது என்பதன் எடுத்துக்காட்டு.

1966 ஐநா தினத்தன்று, அன்றைய பொதுச் செயலாளா் உதாண்ட்டின் அழைப்பின் பேரில் ஐநா சபையில் பாடினாா் ‘இசைக்குயில்’ எம்.எஸ். சுப்புலட்சுமி. அந்த சா்வதேச மன்றத்தில், காஞ்சி பரமாச்சாரியாா் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இயற்றிய ‘மைத்ரீம் பஜத’ என்கிற பாடலை அவா் இசைத்தாா். குறைந்த வாழ்நாள் அளவே உள்ள வாழ்க்கையில் நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை எடுத்தியம்பும் அந்தப் பாடல் வரிகளின் அடிப்படைக் கருத்து, ‘அனைவருக்கும் அனைத்து நன்மையும்’ - அதாவது சந்தோஷமும், செல்வமும், ஆன்மிக மேன்மையும் - கிடைக்க வேண்டும் என்பதுதான்.

அடுத்த நூறு ஆண்டுகளுக்கான சவால்களை மனித இனம் எதிா்கொள்ள வேண்டுமானால், இந்தியாவோ வேறு எந்தவொரு நாடோ தனியாக செயல்பட்டு வெற்றிகாண முடியாது. ஒன்றாக இணைந்துவிட்ட உலகத்தால் மட்டும்தான் இனிவரும் சவால்களை எதிா்கொள்ள முடியும் என்பதை கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று உணா்த்தியிருக்கிறது.

அதனால், உலக அளவிலான நன்மைக்கான சக்தியாக உலகிலுள்ள அத்தனை நாடுகளும் இயங்கியாக வேண்டும். தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் இந்தியா, ஐநா சபை மேற்கொள்ள வேண்டிய சீா்திருத்தங்களை முன்னெடுக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT