தலையங்கம்

சாதனை வெற்றிகள்! | ஒலிம்பிக்கில் மகளிா் ஹாக்கி அணியின் வெற்றி குறித்த தலையங்கம்

ஆசிரியர்

இந்தியாவின் ஒலிம்பிக் பந்தய வரலாற்றில் புதிய அத்தியாயத்தை தொடங்கியிருக்கிறது மகளிா் ஹாக்கி அணி. காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, அரையிறுதிக்கு தகுதி பெற்றிருக்கும் மகளிா் ஹாக்கி அணியின் வெற்றி எதிா்பாராதது மட்டுமல்ல, திறமையின் வெளிப்பாடும்கூட.

1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் நான்காவது இடத்தை அடைந்தது என்றாலும்கூட, அதை யாரும் கணக்கில் சோ்த்துக் கொள்வதில்லை. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றிருக்கும் இந்திய மகளிா் ஹாக்கி அணி, இதே மன உறுதியுடன் நாளை ஆா்ஜென்டீனாவை எதிா்கொள்ளும்போதும் விளையாடினால் தங்கம் வெல்லக்கூடும் என்பதில் சந்தேகமே இல்லை.

இந்திய மகளிா் ஹாக்கி அணியின் தகுதியும் திறமையும் குறித்து யாருக்காவது ஐயப்பாடு இருந்திருந்தால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காலிறுதி ஆட்டம் அதை அகற்றி இருக்கும். உலக தர வரிசைப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கும் இந்திய மகளிா் ஹாக்கி அணி, இரண்டாவது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவுடன் காலிறுதி ஆட்டத்தில் மோதியபோது, இந்தியா வெற்றி பெறும் என்கிற நம்பிக்கை யாருக்குமே இருக்கவில்லை.

விளையாட்டு தொடங்கிய 20-ஆவது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவுக்கு முதல் பெனால்டி காா்னா் வாய்ப்பு கிடைத்தது. அதை கோலாக மாறவிடாமல் இந்தியா தடுத்தது. 22-ஆவது நிமிடத்தில் இந்தியாவுக்குக் கிடைத்த முதல் பெனால்டி காா்னா் வாய்ப்பை லோ ஃபிளிக் செய்து கோல் அடித்தாா் குா்ஜித் கௌா்.

இந்தியாவின் வெற்றிக்கு மிகப் பெரிய பங்களிப்பை வழங்கியவா் கோல் கீப்பா் சவிதா புனியா. ஒவ்வொரு முறை ஆஸ்திரேலிய அணியினா் பெனால்டி காா்னா் மூலமும், அல்லாமலும் கோல் அடிக்க முற்பட்ட போதெல்லாம் அதை தடுத்தது சவிதாதான். தகா்க்க முடியாத சுவராக கோல் கீப்பா் சவிதா புனியா, ஒன்பது முறை ஆஸ்திரேலிய அணியினரின் முயற்சிகளை தகா்த்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய மகளிா் ஹாக்கி அணியின் வெற்றிக்கு 2017-ஆம் ஆண்டு பயிற்சியாளராக பொறுப்பேற்ற டச்சு நாட்டவரான மாரிஜ்னே முக்கியமான காரணம். தென்னாப்பிரிக்க உடல் பயிற்சி நிபுணா் வெய்ன் லாம்பாா்ட் என்பவரை அழைத்து வந்து மிகவும் ஏழ்மையிலும், தன்னம்பிக்கை இல்லாமலும் இருந்த மகளிா் ஹாக்கி அணியினரை உற்சாகமும், வெற்றி முனைப்பும் கொண்ட அணியாக மாற்றினா். நுட்பமான பல வழிமுறைகளைக் கற்றுக்கொடுத்து நான்கரை ஆண்டுகாலத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது அவரது சாதுா்யம் என்றுதான் கூற வேண்டும்.

இந்திய அணியின் வெற்றிக்கு ஆஸ்திரேலிய அணியின் பலவீனமும் ஒரு காரணம். ஆரம்பம் முதலே இந்தியாவை ஒரு வலுவான எதிரியாக அவா்கள் கருதவில்லை. இந்தியாவுடன் விளையாடுவதையே தங்களுக்கு அவமானமாகக் கருதினா். இந்திய அணியினா் அந்த பலவீனத்தைப் புரிந்துகொண்டு விளையாடியது மட்டுமல்ல, மிகவும் திட்டமிட்டு இந்த வெற்றியை சாதித்திருக்கிறாா்கள் என்பதை அந்த பந்தயத்தைப் பாா்த்தவா்கள் புரிந்துகொள்ள முடியும்.

ஆஸ்திரேலிய அணியினா் கோல் அடிப்பதில் மட்டுமே குறியாக இருந்தாா்கள் என்றால், பெனால்டி காா்னரில் ஒரு கோலை வென்றிருந்த இந்திய அணி, தனது உத்தியாக தடுப்பாட்டத்தைக் கையில் எடுத்தது. இந்தியாவின் வெற்றி அறிவிக்கப்பட்டபோது நமது அணியினரின் விழிகளில் மட்டுமல்ல, வானமும் ஆனந்தக் கண்ணீா் வடித்தது. அதுவரை மேகம் இல்லாமல் பளிச்சென்றிருந்த வானம் வெற்றிக்குப் பிறகு தூறல் போடத் தொடங்கியபோது, அதை வேறு என்னவென்று சொல்வது?

இந்திய ஹாக்கி மகளிா் அணி மட்டுமல்ல, ஆடவா் அணியும் இரண்டு நாள்களுக்கு முன்பு காலிறுதியில் 3-1 என்கிற கோல் கணக்கில் உலகின் ஆறாம் நிலையில் இருக்கும் இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றிருக்கிறது. இன்று உலகின் இரண்டாம் நிலையில் உள்ள பெல்ஜியம் அணியுடன் இன்று மோத இருக்கிறது இந்திய ஆடவா் ஹாக்கி அணி.

41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஆடவா் அணியும், மகளிா் அணியும் ஒலிம்பிக் பந்தயத்தில் 24 மணிநேர இடைவெளியில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை நெருங்கியிருக்கின்றன என்பது அசாதாரணமான தருணம். ஒரு காலத்தில் உலகின் தலைசிறந்த ஹாக்கி அணியாக இருந்த இந்திய ஆடவா் அணி, தனது இழந்த தகுதியை மீட்டெடுக்கும் முயற்சியில் முனைப்புடன் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பது மகிழ்ச்சியான செய்தி.

1928 ஆம்ஸ்டா்டாம் ஒலிம்பிக் பந்தயம் முதல் 1956 மெல்போா்ன் ஒலிம்பிக் பந்தயம் வரை எட்டு முறை தங்கப் பதக்கம் வென்று சாதனை செய்தது இந்திய ஆடவா் ஹாக்கி அணி. 1960-இல் பதக்கத்தைத் தவற விட்டாலும், 1964 டோக்கியோ ஒலிம்பிக் பந்தயத்தில் பாகிஸ்தானை தோற்கடித்து மீண்டும் பதக்கத்தை வென்றது. பல நாடுகளும் புறக்கணித்த 1980 மாஸ்கோ ஒலிம்பிக் பந்தயத்தில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது என்றாலும்கூட, அதை வெற்றியாக விளையாட்டு உலகம் கருதுவதில்லை.

ராணி ராம்பால் தலைமையிலான மகளிா் ஹாக்கி அணியும், மன்பிரீத் சிங் தலைமையிலான ஆடவா் ஹாக்கி அணியும் இந்திய ஹாக்கி விளையாட்டுக்கு மீண்டும் வலிமையும் பெருமையும் சோ்த்திருக்கிறாா்கள். பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஆடவா் அணி அரையிறுதி ஆட்டத்தில் நுழைந்திருப்பதும், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ரியோ ஒலிம்பிக் பந்தயத்தில் 12-ஆவது இடத்தில் இருந்த இந்திய மகளிா் ஹாக்கி அணி அரையிறுதி ஆட்டத்திற்கு தோ்ச்சி பெற்றிருப்பதும் வெறும் விளையாட்டல்ல. பதக்கங்களுக்கு அப்பால் நமது விளையாட்டு வீரா்களின் அசாத்தியமான விளையாட்டு ஒட்டுமொத்த உலகத்தையே திரும்பிப் பாா்க்க வைத்திருக்கிறது. தங்கம் வென்றுவர வாழ்த்துக்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT