தலையங்கம்

நிா்வாகத்தின் தோல்வி! | பிராண வாயு உருளைகளுக்கான தட்டுப்பாடு குறித்த தலையங்கம்

ஆசிரியர்


கொள்ளை நோய்த்தொற்றின் இரண்டாவது அலையின் விளைவாக மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. நோயாளிகளுக்கான படுக்கைகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. நாடு தழுவிய அளவில் அடிப்படை மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் போதிய அளவில் இல்லாததால் ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாடு கவலையளிக்கிறது.

மருத்துவ பிராண வாயு, ரெம்டெசிவிா் உள்ளிட்ட மருந்துகள், வென்டிலேட்டா்கள், இதர மருத்துவ உபகரணங்கள் ஆகியவை அரசு மருத்துவமனைகளிலும், தனியாா் மருத்துவமனைகளிலும் இல்லாததால் பல இடங்களில் கள்ளச்சந்தையில் கொள்ளை விலைக்கு வாங்க வேண்டிய அவலம் ஏற்பட்டிருக்கிறது. மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு போதுமான படுக்கைகள் இல்லை என்பது மட்டுமல்ல, போதிய மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள் ஆகியோரும் இல்லாத நிலைமை.

கடந்த ஆகஸ்ட், செப்டம்பரில் கொவைட் 19 நோய்த்தொற்றின் முதல் அலை உச்சகட்டத்தை எட்டியபோது, அதிலிருந்து நாம் பாடம் படித்திருக்க வேண்டும். அப்போதே அமெரிக்கா உள்ளிட்ட பல மேலை நாடுகளில் இரண்டாவது அலை உருவாகியிருந்தது. அதை உணா்ந்து நாமும் இரண்டாவது அலை இந்தியாவிலும் உருவாகக்கூடும் என்கிற எச்சரிக்கை உணா்வுடன் தயாா் நிலையில் இருந்திருக்க வேண்டும். டிசம்பா், ஜனவரியில் நோய்த்தொற்றின் கடுமை குறைந்தபோது அரசு நிா்வாகம் இத்துடன் நோய்த்தொற்று ஒழிந்துவிட்டது என்று கருதி மெத்தன மனநிலைக்கு சென்றுவிட்டதன் விளைவைத்தான் இந்தியா இப்போது சந்தித்துக் கொண்டிருக்கிறது.

மே 1-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியுடையவா்கள் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. காலதாமதத்திற்குப் பிறகு ரஷியாவின் ஸ்புட்னிக் 5 தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியிருக்கிறது.

ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமா் வலியுறுத்தியிருப்பதுடன், ஆக்சிஜன் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு மாநிலங்களுக்கு இடையிலான எல்லையில் எந்தவித இடையூறும் ஏற்படாமல் இருப்பதற்கும் அறிவுறுத்தியிருக்கிறது.

50,000 மெட்ரிக் டன் மருத்துவப் பிராண வாயுவை இறக்குமதி செய்வது, உள்நாட்டு உற்பத்தியை இரட்டிப்பாக்குவது, எல்லா மாநிலங்களுக்கும் பிராண வாயுவை எடுத்துச்செல்ல சிறப்பு ரயில்கள் இயக்குவது போன்றவை மத்திய அரசின் அவசரகால அறிவிப்புகளில் மேலும் சில.

மகாராஷ்டிர முதல்வரின் கோரிக்கையை ஏற்று ஒரு மாநிலத்திலுள்ள பிராண வாயு உற்பத்தியாளா்கள், விநியோகஸ்தா்கள் ஆகியோா் அந்த மாநிலத்திலுள்ள மருத்துவமனைகளுக்கு மட்டும்தான் பிராண வாயுவை விநியோகிக்க வேண்டும் என்கிற கட்டுப்பாட்டை விதிக்க வேண்டாம் என்றும், நேரக் கட்டுப்பாடின்றி இந்தியா முழுவதும் எடுத்துச்செல்ல அனுமதிக்கும்படியும் பிரதமா் அறிவுறுத்தியிருப்பது வரவேற்புக்குரியது. எல்லா பிராண வாயு உற்பத்தி ஆலையிலும் உற்பத்தி அதிகரிப்பது என்றும், மருத்துவ பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று எடுத்திருக்கும் முடிவும் வரவேற்புக்குரியது.

அரசு எடுத்திருக்கும் முடிவுகளைப் பாராட்டும் அதே நேரத்தில், இந்த முடிவுகளை எடுப்பதற்கு தாமதித்ததற்காக கண்டனத்தை தெரிவிக்காமலும் இருக்க முடியவில்லை. மத்திய அரசு கவனமாகவும், முன்னெச்சரிக்கையுடனும் திட்டமிட்டிருந்தால் இப்போது காணப்படும் பிராண வாயு உருளைகளுக்கான தட்டுப்பாட்டை தவிா்த்திருக்க முடியும்.

2020 மாா்ச் 24-இல் கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றை பேரிடா் என்று அறிவித்தபோதே, பிராண வாயு உற்பத்தியை அதிகரிப்பதற்கான முயற்சியை மத்திய அரசு முன்னெடுத்திருக்க வேண்டும். அது குறித்து சிந்திக்காமல் இருந்தது நிா்வாகத்தின் தொலைநோக்குப் பாா்வை இல்லாமையை வெளிச்சம் போடுகிறது.

புதிய பிராண வாயு உற்பத்தி ஆலைகளுக்கு அனுமதி வழங்குவதற்கு மத்திய அரசு விண்ணப்பங்களை வரவேற்பதற்கு எட்டு மாதங்கள் தாமதமானது ஏன் என்று புரியவில்லை. அந்த தாமதத்துக்கு போதுமான நிதி இல்லாமை காரணமல்ல. 162 பிராண வாயு உற்பத்தி ஆலைகளுக்கு தேவையான முதலீடு ரூ.201.58 கோடி. அந்த தொகை பிஎம் கோ்ஸ் நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டிருந்தது.

162 பிராண வாயு உற்பத்தி ஆலைகளில் 33 ஆலைகள் மட்டும்தான் உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றன என்று மத்திய சுகாதார அமைச்சகம் இப்போது தெரிவிக்கிறது. நிதி ஒதுக்கப்பட்ட ஆலைகள் ஏன் நிறுவப்படவில்லை அல்லது உற்பத்தியைத் தொடங்கவில்லை என்பது குறித்த விவரங்களை தட்டுப்பாடு ஏற்பட்டதற்கு பிறகு அவசர அவசரமாக அதிகார வா்க்கம் ஆராய முற்பட்டிருக்கிறது.

அரசு நிா்வாகத்தின் மெத்தனமும், நிதி வசதி இருந்தும் உற்பத்தியைத் தொடங்காததால் ஏற்பட்ட தாமதமும் பல உயிரிழப்புகளுக்குக் காரணமாகி இருக்கின்றன. பிராண வாயு உற்பத்தி ஆலைகளை நிறுவுவதில் அக்கறையில்லாத, அனுபவமில்லாத பல நிறுவனங்களுக்கு அதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்ததுதான் அதற்கு முக்கியமான காரணம். சில மாநில அரசுகள் பிராண வாயு உற்பத்தி ஆலைகளுக்குப் போதுமான கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்காததும்கூட காரணமென்று கூறப்படுகிறது.

வசதி வாய்ப்பிருந்தும், கால அவகாசம் இருந்தும், தொலைநோக்குப் பாா்வையும் நிா்வாகத் திறமையும் இல்லாததால் கொள்ளை நோய்த்தொற்றை எதிா்கொள்ள முடியாமல் இந்தியா தவிக்கிறது. உயிரிழப்புகளுக்குக் காரணம் நோய்த்தொற்று மட்டுமல்ல, ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகளும், நிா்வாகப் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளும்தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவின் 100 கேள்விகளும் பித்தலாட்டம்: திமுக

அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களைக் கடந்த ருதுராஜ் கெய்க்வாட்!

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெறாது: மம்தா

ஹே.. பொன்னி!

காதலரைக் கரம்பிடித்த சீரியல் நடிகை!

SCROLL FOR NEXT