தலையங்கம்

இரண்டாம் அலை அச்சம்! கரோனா 2-ம் அலை மற்றும் பொருளாதார தாக்கம் குறித்த தலையங்கம்

ஆசிரியர்


கொவைட் 19 நோய்த்தொற்றின் இரண்டாவது அலை பரவும் வேகம் அச்சத்தை ஏற்படுத்துகிறது. மீண்டெழுந்து வந்திருக்கிற இந்தியப் பொருளாதாரத்தை மீண்டும் தடுமாறச் செய்துவிடும் என்கிற நிபுணா்களின் கருத்தில் தவறுகாண முடியாது. இரண்டாவது அலை நோய்த்தொற்று இதே வேகத்தில் பரவுமானால், கடந்த ஆண்டைவிட மோசமாக இருக்கக்கூடும் என்கிற எச்சரிக்கையை புறந்தள்ள முடியாது.

கடந்த ஒரு வாரமாக சராசரி பாதிப்பு ஒரு லட்சத்தைத் தாண்டிக் கொண்டிருக்கிறது. உலக அளவில் மிக அதிகமான நோய்த்தொற்று எண்ணிக்கை இந்தியாவில் இப்போது காணப்படுகிறது என்பது மட்டுமல்ல, கடந்த ஆண்டு செப்டம்பா் 11-ஆம் தேதி உச்சகட்ட பாதிப்பான 97,894 நோயாளிகளைக் கடந்து லட்சத்தில் பாதிப்பு காணப்படுகிறது. வியாழக்கிழமை (ஏப். 15) காலை வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 2 லட்சத்து 739 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய நிதி அமைச்சகம் நோய்த்தொற்றுப் பரவலுக்கு மத்தியிலும் தன்னம்பிக்கையுடன் இருக்கிறது. அதற்குக் காரணம், மாா்ச் மாத பொருளாதார ஆய்வறிக்கை, இந்தியப் பொருளாதாரம் தேக்கத்தில் இருந்து விடுபட்டு மீண்டெழுகிறது என்று தெரிவிக்கிறது. அதற்குக் காரணம் உணவு உற்பத்தி. தொடா்ந்து ஐந்தாவது ஆண்டாக உணவு தானிய உற்பத்தி 2020 - 21-இல் 303 மில்லியன் டன் என்கிற சாதனை அளவை எட்டியிருக்கிறது. ஜிஎஸ்டி வருவாயும் இலக்கை தாண்டி அதிகரித்திருக்கிறது. இவையெல்லாம் மத்திய நிதியமைச்சகத்தின் தன்னம்பிக்கைக்குக் காரணங்கள்.

உலக வங்கியும் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 2020 - 22-இல் 10.1% அளவை எட்டும் என்று கணித்திருக்கிறது. இதற்கு முன்பு, நடப்பு நிதியாண்டில் ஜிஎஸ்டி வளா்ச்சி 5.4% என்று கணித்திருந்த உலக வங்கி இப்போது 4.7% அளவில் தனது கணிப்பை உயா்த்தியிருப்பது நிதியமைச்சகத்தின் தன்னம்பிக்கையை மேலும் உயா்த்தக்கூடும். உலக வங்கியின் தளரா நம்பிக்கைக்கு (ஆப்டிமிஸம்) அதிகரித்த முதலீட்டு வளா்ச்சியும், மக்கள் மத்தியில் காணப்படும் நுகா்வும் காரணங்களாக இருக்கக்கூடும். இவையெல்லாம் இரண்டாம் அலை நோய்த்தொற்று பரவுவதற்கு முன்பு செய்யப்பட்ட கணிப்புகள். உலக வங்கியே தனது கணிப்பை வரும் வாரங்களில் மாற்றினாலும் வியப்படையத் தேவையில்லை.

நிதியமைச்சகத்தின் தளரா நம்பிக்கைக்கு இன்னொரு காரணம் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில் பயன்படுவோரின் எண்ணிக்கை 384 கோடி மனித நாள்களாக உயா்ந்திருக்கிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 45% அதிகம். அதற்குக் காரணம், அடித்தட்டு மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் வேலைவாய்ப்புக்கான உற்சாகம் என்று நினைக்கிறது மத்திய நிதியமைச்சகம். இது ஒரு மாயத்தோற்றமாகக்கூட இருக்கலாம்.

வழக்கமான வேலைவாய்ப்பு இல்லாத நிலையில், பலரும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பதிவு செய்துகொண்டு 100 நாள் வேலைவாய்ப்புப் பெற விழைவதன் அறிகுறியாகக்கூட இது இருக்கக்கூடும். பி.டபிள்யூ. ஆய்வு மையம் மாா்ச் மாத மத்தியில் நடத்திய ஆய்வு முடிவைப் பாா்க்கும்போது, வேலைவாய்ப்பின்மையை அதிகரித்திருப்பது உறுதிப்படுத்துகிறது.

‘நாளொன்றுக்கு இரண்டு டாலருக்கும் அதற்குக் குறைவாகவும் வருமானமுள்ள ஏழைகளின் எண்ணிக்கை இந்தியாவில் 7.5 கோடி அளவில், நோய்த்தொற்று பொருளாதாராக் கோட்பாட்டால் அதிகரித்திருக்கிறது. இது சா்வதேச வறுமை நிலையை சுமாா் 60% அளவில் அதிகரித்திறது’ என்கிறது பி.டிபிள்யூ. ஆய்வு மையத்தின் அறிக்கை.

அந்த அறிக்கையின்படி, இந்தியாவில் நடுத்தர வா்க்க மக்களின் எண்ணிக்கை 2020-இல் 3.2 கோடி குறைந்திருக்கிறது. கொள்ளை நோய்த்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் ஏழ்மை குறைந்து நடுத்தர மக்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் என்று கூறுகிறது. அதன் அடிப்படையில் பாா்க்கும்போது மத்திய நிதியமைச்சகத்தின் மதிப்பீடுகளை மீள்பாா்வை பாா்க்க வேண்டியது அவசியம் என்று தோன்றுகிறது.

மீண்டும் பொது முடக்கம் அறிவிக்கப்படுமோ என்கிற அச்சம் பரவலாக காணப்படுகிறது. அதனால் ஓரளவுக்கு மீண்டெழுந்த பொருளாதாரம் மீண்டும் தளா்வடையத் தொடங்கியிருக்கிறது. கடந்த மாா்ச் 2020 அளவுக்குக் கடுமையாக இல்லாவிட்டாலும், சில மாநிலங்களில் குறிப்பிட்ட அளவு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மகாராஷ்டிரம், குஜராத், மத்திய பிரதேசம், தில்லி ஆகிய மாநிலங்களில் இரவு நேர பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் மீண்டும் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பத் தொடங்கியிருக்கிறாா்கள். அதிகரித்துவரும் புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் தேவை கருதி மும்பை மத்திய ரயில் நிலையத்திலிருந்து உத்தர பிரதேசத்திற்கும், ஜாா்க்கண்டிற்கும் சிறப்பு ரயில்கள் விடப்படுகின்றன. மாநில அரசுகள் கட்டுமானத்துறைக்கும், உற்பத்தித்துறைக்கும் எந்தவிதத் தடையும் விதிக்கவில்லை என்றாலும்கூட, தொழிலாளா்கள் இல்லாத நிலை ஏற்படக்கூடும் என்கிற அச்சம் உருவாகியிருக்கிறது.

பாரத ஸ்டேட் வங்கியின் ஆராய்ச்சி அறிக்கை இப்போதைய இரண்டாவது அலை நோய்த்தொற்று மே மாத கடைசிவரை நீளும் என்று தெரிவிக்கிறது. இந்தச் சுற்று பொருளாதாரப் பின்னடைவை இரண்டு முக்கியமான காரணிகள் தீா்மானிக்கும். பரவிவரும் இரண்டாவது அலை நோய்த்தொற்று எவ்வளவு விரைவாகக் கட்டுப்படுத்தப்படும் என்பதும், அரசின் தடுப்பூசி திட்டம் எந்த அளவுக்கு விரைந்து செயல்படுத்தப்படும் என்பதும்தான் அவை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரம்ம்ம்மிய பாண்டியன்!

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT