தலையங்கம்

நெகிழிக்கு விடை கொடுப்போம்! | மீண்டெழுந்த ருவாண்டா குறித்த தலையங்கம்

15th Apr 2021 06:12 AM | ஆசிரியர்

ADVERTISEMENT


ஆப்பிரிக்காவில் ருவாண்டா என்பது மிகப் பின்தங்கிய ஒரு நாடு. 1994-இல் ருவாண்டாவில் நடந்த உள்நாட்டுப் போரில்  எட்டு லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அங்கே குவிந்து கிடந்தது உயிரிழந்த உடல்கள் மட்டுமல்ல, குன்றுகளாகக் குவிக்கப்பட்டிருந்த நெகிழிகளும் (பிளாஸ்டிக்) தான். பின்தங்கிய நாடான ருவாண்டா உள்நாட்டுப் போரிலிருந்து மீண்டெழுந்தபோது, எடுத்த மிக முக்கியமான முடிவுகளில் ஒன்று நெகிழிகளுக்கு முடிவுகட்டியே தீரவேண்டும் என்பது.

பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் தகர்ந்து போயிருந்த நாட்டை மீட்டெடுக்கும் முயற்சியில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்பதையும் ருவாண்டா அரசு இணைத்துக் கொண்டதை உலகமே வியந்து பாராட்டியது. அதன் முதல் கட்டமாக ருவாண்டா அரசு, நெகிழியிலிருந்து முற்றிலுமாக தேசத்தை விடுவிப்பது என்று வைராக்கியத்துடன் களமிறங்கியது.

2008-இல் நெகிழிப் பைகளின் இறக்குமதியையும் ஏற்றுமதியையும் முற்றிலுமாகத் தடை செய்தது. தடையை மீறுபவர்களுக்கு மிகவும் கடுமையான அபராதமும் தண்டனையும் விதிக்கப்பட்டன. அத்துடன் நின்றுவிடவில்லை. அதுவரை நெகிழி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த தயாரிப்பாளர்களை, தொழிற்சாலைகளை இழுத்து மூடச் சொல்லவில்லை. அதற்குப் பதிலாக, அவர்களுக்கு வரிச் சலுகைகள் வழங்கி நெகிழி மறுசுழற்சி செய்ய அவர்களை ஊக்கப்படுத்தியது. அடுத்த சில ஆண்டுகளில் நெகிழிப் பைகள் தயாரிப்பு என்பது மறுசுழற்றி தயாரிப்புகளாக மட்டுமே ருவாண்டாவில் இருந்தது.

அதைத் தொடர்ந்து சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வகையிலான பொருள்களைத் தயாரிப்பதற்கு அவர்களை ஊக்கப்படுத்தி, நெகிழிப் பைகள் தயாரிப்பதிலிருந்து முற்றிலுமாக அவர்கள் விலகுவதற்கு வழிகோலியது. வழிகோலியது என்பதைவிட, உதவியது என்றுதான் கூற வேண்டும். நெகிழித் தயாரிப்பை நிறுத்திவிட்டதால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை ஈடுகட்டும் விதமாக சுற்றுலாவுக்கு முன்னுரிமை அளிக்க முற்பட்டது ருவாண்டா.

ADVERTISEMENT

ருவாண்டாவைவிட 100 மடங்கு பெரிய நாடு இந்தியா. 100 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை உள்ள நாடும்கூட. அதனால், ருவாண்டாவைப் போல 15 ஆண்டு போராட்டத்தில் நெகிழியின் பிடியில் இருந்து இந்தியாவை விடுவிப்பது என்பது எளிதல்ல. ஆனால்,  அதை நோக்கி ஒவ்வொரு அடியாக நாம் நகர்ந்தாக வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.

அடுத்த ஆண்டு முதல் இரண்டு கட்டமாக இந்தியாவில் ஒரு முறை மட்டுமே உபயோகிக்கக்கூடிய அளவிலான நெகிழி தயாரிப்பை முற்றிலுமாகத் தடை செய்யும் முடிவை மந்திய அரசு எடுத்திருக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி - ஜூலை  ஆறு மாத இடைவெளியில் இந்த நெகிழிக்கான தடை அறிவிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்துவது என்பதுதான் இலக்கு. 

120 மைக்ரோனுக்குக் கீழே உள்ள நெகிழிப் பைகளுக்கு இந்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி முதல் தடை வரப்போகிறது. ஒரு தடவை மட்டுமே உபயோகிக்க முடியும் என்கிற அளவிலான நெகிழிப் பொருள்கள் 2030-க்குள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்பது ஐக்கிய நாடுகள் சபை உலக நாடுகளுக்கு விடுத்திருக்கும் வேண்டுகோள். அந்த இலக்கை நோக்கி இந்தியாவின் முதல்கட்ட நடவடிக்கைதான் இது. 

உலகில் தயாரிக்கப்படும் நெகிழியில் 79% குப்பையுடன் இணைந்து பூமியில் கலக்கிறது என்று கூறப்படுகிறது. மறுசுழற்சிக்கு உள்ளாவது வெறும் 9% நெகிழிப் பைகள் மட்டுமே. 

இந்தியாவிலுள்ள ஒவ்வொருவரும், ஒவ்வொரு நாளும் எட்டு  கிராம் அளவில் நெகிழிக் குப்பையை உருவாக்குகிறோம். இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 33 லட்சம் மெட்ரிக் டன் நெகிழிக் குப்பை உருவாகிறது என்று "மத்திய நெகிழி கட்டுப்பாட்டு வாரியம்' தெரிவித்திருக்கிறது.

நெகிழி, மண்ணில் முழுமையாகக் கலந்து அழிவதற்கு 500 முதல் 1,000 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று கூறப்படுகிறது. அதையே கடலில் வீசி எறிந்தால் அந்த நெகிழி முற்றிலுமாக  அழிந்து கடலில் கரைவதற்கு அதைவிட அதிகமான ஆண்டுகள் ஆகக்கூடும். ஆண்டுதோறும் சுமார் 80 லட்சம் டன் நெகிழி கடலில் கலக்கிறது. நெகிழியை எரித்தால் அதிலிருந்து வரும் கரியமில வாயு சுற்றுச்சூழலை பாதிக்கிறது. இப்படி எல்லா விதத்திலும் ரசாயனக் கலவைகளால் உருவாக்கப்படும் நெகிழி அழிக்க முடியாததாக, மக்காததாகத் தொடர்கிறது என்பதுதான்  மிகப்பெரிய அவலம். 

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் ஒரு தடவை மட்டும் உபயோகிக்கக்கூடிய நெகிழயைத் தடை செய்திருக்கின்றன. ஆனால், பெரும் விளம்பரத்துடன் செய்யப்பட்ட இந்தத் தடை அரசு உத்தரவாகத் தொடர்கிறதே தவிர,  நடைமுறையில் பின்பற்றப்படுவதில்லை என்பது நம்மைச் சுற்றியுள்ள குப்பைத் தொட்டிகளைப் பார்த்தாலே புரியும்.

இதற்கான மாற்றம்  தொடங்க வேண்டிய இடம் வீடுகள்தான். வீடுகளில் இருந்து தெருக்களுக்கும், தெருக்களிலிருந்து பகுதிகளுக்கும், பகுதிகளிலிருந்து நகரங்களுக்கும் நெகிழிப் பயன்பாடு தடுக்கப்பட வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட வேண்டும். 

உத்தரவுகளாலும், தீர்மானங்களாலும், சட்டத்தாலும் நெகிழிப் பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டுவர முடியாது. 

அரசு சட்டம் இயற்றுவதும், தடையைக் கொண்டு வருவதும் ஒருபுறம் இருக்கட்டும். மக்கள் மனதில் நெகிழிப் பயன்பாட்டுக்கு முற்றுப்புள்ளி விழ வேண்டும் என்கிற முனைப்பு ஏற்பட வேண்டும். அந்த விழிப்புணர்வை ஊடகங்களும், சமூக ஆர்வலர்களும் ஏற்படுத்துவதில்தான் மனித இனத்தில் வெற்றி அடங்கியிருக்கிறது.

Tags : நெகிழிக்கு விடை கொடுப்போம்!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT