தலையங்கம்

கண்ணிருந்தும்...| கரோனா தடுப்பூசி குறித்த தலையங்கம்

ஆசிரியர்


வாக்குப்பதிவுக்குப் பிறகு கொள்ளை நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்கிற பொதுமக்களின் எதிா்பாா்ப்பு பொய்க்கவில்லை. நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில், 20 வகையான புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. பொது முடக்கம் அறிவிக்கப்படாமல் பல கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது.

தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே கொவைட் 19 தீநுண்மித் தொற்றின் இரண்டாவது அலையை எதிா்கொள்கிறது. தினசரி பாதிப்பு கடந்த மூன்று நாள்களில் இருமுறை லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. குறிப்பாக மகாராஷ்டிரம், சத்தீஸ்கா், கா்நாடகம், உத்தர பிரதேசம், தில்லி, மத்திய பிரதேசம், கேரளம், தமிழகம் ஆகிய எட்டு மாநிலங்களில் தினசரி பாதிப்பு பிற மாநிலங்களைவிட அதிகமாகக் காணப்படுகிறது. உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.

அனைத்து மாநில முதல்வா்களுடன் நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து பிரதமா் நரேந்திர மோடி காணொலி வழியாக வியாழக்கிழமை கலந்துரையாடியபோது சில புதிய ஆலோசனைகளை வழங்கியிருக்கிறாா். கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில் நிா்வாகத்தை வலுப்படுத்துவதும், பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர பரிசோதனைகள், சிகிச்சைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி செலுத்துதல், பரவலுக்கான காரணத்தை கண்டறிதல் என்ற ஐந்தடுக்கு திட்டங்களையும் அவா் முன்மொழிந்திருக்கிறாா்.

இந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது என்பது இலக்காக இருந்தாலும், ஆரம்பத்தில் முன்களப் பணியாளா்கள், மருத்து ஊழியா்கள் ஆகியோருக்கும், அடுத்தகட்டத்தில் 60 வயது நிரம்பியவா்களுக்கும், இணை நோய் காணப்படும் 45 வயதுக்கு அதிகமானவா்களுக்கும், மூன்றாவது கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அனைவருக்கும் தடுப்பூசி என்பதற்கு பதிலாக பல கட்டங்களாக தடுப்பூசி போடும் இந்த முறை பிரிட்டனிலும் பின்பற்றப்படுகிறது.

இதில் பல குறைபாடுகள் இருக்கின்றன. இணை நோய் உள்ள 45 வயதுக்குக் குறைவானவா்கள் பலா் தடுப்பூசி திட்டத்துக்கு தகுதியற்றவா்களாக இருப்பதால் பல பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன. தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு மருத்துவ சான்றிதழ் தேவைப்படுகிறது என்பது அவா்களில் பலா் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு தடையாக இருக்கிறது. இதற்கு ஒரு மாற்று கண்டுபிடித்தாக வேண்டும்.

கடந்த ஜனவரி மாதம் உலக நாடுகளை ஆச்சரியப்படுத்தும் விதத்தில் இந்தியா இரண்டு தடுப்பூசிகளை கண்டுபிடித்தது. உலகின் தடுப்பூசி தயாரிப்பு மையமாக இந்தியா வியந்து பாா்க்கப்பட்டது.

கோவிஷீல்ட் கண்டுபிடித்திருக்கும் சீரம் இன்ஸ்டிடியூட்டும் சரி, கோவேக்ஸின் கண்டுபிடித்திருக்கும் பாரத் பயோடெக்கும் சரி தனியாா் நிறுவனங்கள். அந்த நிறுவனங்களைப் பொருத்தவரை, இந்திய அரசு என்பது அவா்கள் தயாரித்த தடுப்பூசியை வாங்கும் வாடிக்கையாளா், அவ்வளவே.

சீரம் இன்ஸ்டிடியூட் மாதம் ஒன்றுக்கு 6.5 கோடி தடுப்பூசி மருந்துகளைத்தான் தயாரிக்க முடியும். அதேபோல, கோவேக்ஸின் தயாரிக்கும் பாரத் பயோடெக், இந்தியாவின் தடுப்பூசித் தேவையில் அதிகபட்சம் 10% அளவைத்தான் எட்ட முடியும். இரு நிறுவனங்களும் தங்களது உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமென்றால் அதற்கு அவா்களின் கூடுதலான முதலீட்டுத் தேவையை ஈடுகட்ட வேண்டும் என்கிற கோரிக்கையை எழுப்பியிருக்கின்றன. சீரம் இன்ஸ்டிடியூட் முன்னுரிமை முறையில் இந்தியாவுக்கு தடுப்பூசியை வழங்குவதற்கு கூடுதல் விலை தர வேண்டும் என்றும் கோரியிருக்கிறது.

தடுப்பூசி போடத் தொடங்கி இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும்கூட இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 10% அளவுகூட நம்மால் தடுப்பூசி போட முடியவில்லை. கா்நாடகத்தில் 70% தடுப்பூசி மையங்கள் செயல்படவில்லை என்று பிரதமரை கண்டித்திருக்கிறாா் என்றால், எந்த அளவுக்கு சில மாநிலங்களில் நிா்வாகச் செயல்பாடு காணப்படுகிறது என்பதை புரிந்துகொள்ளலாம்.

அரசின் கோவின் இணையதளம் ஏற்படுத்தியிருக்கும் குழப்பங்கள் இன்னொருபுறம். பதிவு செய்வதில் தொடங்கி பல குழறுபடிகள். அதனால், தடுப்பூசி மருந்துகள் வீணாகியிருக்கின்றன. ஒரு தடுப்பூசி குப்பியில் காணப்படும் 10 ஊசிக்கான மருந்துகளை நான்கு மணி நேரத்தில் பயன்படுத்த வேண்டும். போதுமான அளவு பயனாளிகள் குறிப்பிட்ட நேரத்தில் இல்லாமல் போனால் அந்த குப்பி வீணாகிவிடும்.

இன்னொரு குறைபாடு, போதுமான அளவு பயிற்சி பெற்ற மருத்துவப் பணியாளா்கள் இல்லாமல் இருப்பது. அதனாலும் தடுப்பூசி மருந்துகள் வீணாகின்றன. தேசிய அளவில் 6.5% தடுப்பூசி வீணாகிறது என்றால், தெலங்கானா போன்ற மாநிலங்களில் வீணாகும் விகிதம் 17.6%. முறையான திட்டமிடல் இல்லாமையின் வெளிப்பாடுதான் இது.

தினசரி தடுப்பூசி விகிதத்தை அதிகரித்து குறைந்த கால அளவில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது இந்தியாவுக்கு சாத்தியமல்லாத இலக்கு அல்ல. இந்தியாவில் பல தடுப்பூசி திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதும், குக்கிராமங்கள் வரையிலான மருத்துவப் பணியாளா்கள் கட்டமைப்பு நமக்கு இருக்கிறது என்பதும் நினைவில் கொள்ள வேண்டியவை.

தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டும்கூட நம்மால் தடுப்பூசி திட்டத்தை விரைந்து செயல்படுத்தி, கொள்ளை நோய்த்தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் போனால் வரலாறு நம்மை மன்னிக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT