தலையங்கம்

தேர்தலுக்குத் தயாராகும் பிகார்! | பிகார் தேர்தல் களம் குறித்த தலையங்கம்

ஆசிரியர்

 பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. கொள்ளை நோய்ப் பரவல் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அக்டோபர் 28 முதல் நவம்பர் 7 வரை மூன்று கட்டங்களாக நடக்கவிருக்கும் பிகார் சட்டப்பேரவைத் தேர்தல், சர்வதேச அளவிலும் முக்கியத்துவம் பெறுகிறது. கொவைட் 19 பரவலுக்குப் பிறகு நடைபெறவிருக்கும் மிகப் பெரிய ஜனநாயக வாக்கெடுப்பு இதுவாகத்தான் இருக்கும்.
 பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக விரிவான முறையில் பல முன்னேற்பாடுகளைச் செய்திருக்கிறது தேர்தல் ஆணையம். வாக்குப் பதிவின்போது மட்டுமல்லாமல், வேட்புமனு தாக்கலில் தொடங்கி பிரசாரம் உள்பட எல்லா செயல்பாடுகளிலும் முடிந்தவரை மனிதர்களுக்கு இடையேயான நேரடித் தொடர்பை குறைப்பதற்கு எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. அதேபோல, வாக்குப்பதிவின்போதும் சமூக இடைவெளி பேணப்படுவதை உறுதி செய்வதில் முனைப்பாக இருக்கிறது ஆணையம்.
 பிரசாரம் தொடங்கிவிட்டது. ஆனால், வழக்கமான பரபரப்பு எதுவும் இல்லை. பிகார் சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டுமொத்த இந்தியாவும் கூர்ந்து கவனித்து வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பல மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு இந்தத் தேர்தல் முன்னோடியாக இருக்கப் போகிறது என்பதால், தேர்தல் ஆணையம் மிகவும் கவனமாகத் திட்டமிட்டு, வெற்றிகரமாகத் தேர்தலை நடத்தி முடிப்பதில் முனைப்பாக இருக்கிறது.
 முதல்வர் நிதீஷ் குமார், கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து பதவியில் இருந்து வருகிறார். ஆட்சிக்கு எதிரான மனநிலை உருவாகியிருந்தால் அதையும் மீறி நான்காவது முறையாகவும் மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் அவரிடம் காணப்படுவதில் வியப்பில்லை. 2005-இல் முதல்வரான நிதீஷ் குமார், 2013-இல் பாஜகவிடமிருந்து விலகி ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியுடன் கூட்டணி அமைத்து 2015 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றார். அடுத்த சில ஆண்டுகளில் மீண்டும் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் திரும்பிய முதல்வர் நிதீஷ் குமாரின் தனிப்பட்ட செல்வாக்கு மங்கியிருக்கிறதா, இல்லையா என்பதைத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும்.
 கடந்த 30 ஆண்டுகளாக பிகார் அரசியலின் மையப்புள்ளியாக இருந்த லாலு பிரசாத் யாதவ் களத்தில் இல்லாமல் நடைபெறவிருக்கும் பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் இது. மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறையில் இருக்கும் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவின் தலைமையில், நடைபெறவிருக்கும் தேர்தலை ஆர்ஜேடி எதிர்கொள்ள இருக்கிறது. ஆர்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணி நிதீஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குக் கடுமையான சவாலை ஏற்படுத்தும் என்றாலும், கூட்டணி அமைவது அவ்வளவு எளிதாக இருக்கப் போவதில்லை.
 நிதீஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் பல பிரச்னைகளை எதிர்கொள்ளாமல் இல்லை. நிதீஷ் குமாரை முதல்வர் வேட்பாளராக பாஜக ஏற்றுக்கொண்டிருப்பதும், அவரது தலைமையில் கூட்டணியை அமைத்திருப்பதும் மட்டுமே ஒற்றுமையின் அடையாளமாகக் கருதிவிட முடியாது.
 நிதீஷ் குமாரிடமிருந்து பிரிந்து சென்ற ஜிதன்ராம் மாஞ்சியை மீண்டும் கூட்டணியில் சேர்த்துக் கொண்டிருப்பது இன்னொரு ஹரிஜனத் தலைவரான மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானுக்கும் அவரது லோக் ஜனசக்தி கட்சியினருக்கும் (எல்ஜேபி) கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ராம்விலாஸ் பாஸ்வானின் மகனும், எல்ஜேபி கட்சியின் பிகார் முகமுமான சிராக் பாஸ்வான், முதல்வர் நிதீஷ் குமாரையும் அவரது ஐக்கிய ஜனதா தளக் கட்சியையும் கடுமையாக விமர்சித்து வருவதன் பின்னணியில் தங்களது கட்சிக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை காணப்படுகிறது.
 பிகார் தேர்தல் பல முக்கியமான பிரச்னைகளின் அடிப்படையில் நடைபெறக் கூடும். நிதீஷ் குமார் அரசின் செயல்பாடுகள், குறிப்பாக கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றை எதிர்கொண்டவிதம், பிற மாநிலங்களிலிருந்து சொந்த ஊர் திரும்பிய 25 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பிரச்னை, வேலையில்லா திண்டாட்டம், சிதைந்து போயிருக்கும் மாநிலப் பொருளாதாரம், வெள்ளப்பெருக்கால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு, விவசாயிகள் பிரச்னை ஆகியவை எதிர்க்கட்சிகளால் முன்னிலைப்படுத்தப்படும். இந்த எல்லா பிரச்னைகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி எப்படி தாக்குதலை சமாளிக்கப் போகிறது என்பது வெற்றி - தோல்வியை நிர்ணயிக்கும்.
 பிகாரின் மக்கள்தொகையில் 17% காணப்படும் முஸ்லிம் வாக்காளர்கள் தேர்தல் முடிவை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறார்கள். 40 ஆண்டுகளுக்கு முன்பு லாலு பிரசாத் யாதவ் உருவாக்கிய "ஹைம்' (ஹரிஜன் - யாதவ் - முஸ்லிம்) கூட்டணி இப்போது சிதைந்துவிட்டது. மண்டல் அரசியலால் உருவான லாலு பிரசாத் யாதவ், நிதீஷ் குமார், ராம்விலாஸ் பாஸ்வான் ஆகிய மூவரும் தனித்தனிக் கட்சிகளாகப் பிரிந்துவிட்டனர். பிகார் அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்துக் கொண்டிருக்கும் அகில இந்திய மஜ்லீஸ் கட்சி, முஸ்லிம்கள் அதிகமாகக் காணப்படும் மாநிலத்தின் வடகிழக்குப் பகுதியில் சிறுபான்மை வாக்குகளைப் பிரிக்கக் கூடும். கொள்ளை நோய்த்தொற்று நிச்சயம் வாக்குப்பதிவை பாதிக்கும்.
 மத்திய - மாநில அரசுகளின் செயல்பாடுகளின் மீதான விமர்சனங்களுக்கு இடையிலும் நிதீஷ் குமாரும் அவர் தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் தேர்தல் களத்தில் பலமாகக் காட்சி அளிப்பதற்கு ஒரேயொரு காரணம்தான் - பலவீனமான எதிர்க்கட்சிக் கூட்டணி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT