தலையங்கம்

புதிய பாதை அமைத்தவர்! ஜஸ்வந்த் சிங் அரசியல் பங்களிப்பு குறித்த தலையங்கம்

ஆசிரியர்


ஞாயிறன்று தில்லியில் காலமான முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கின் அரசியல் பங்களிப்பை குறைத்து மதிப்பிட முடியாது. பாரதிய ஜனதா கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங், அடல் பிகாரி வாஜ்பாய் ஆட்சியின்போது பாதுகாப்பு, நிதி, வெளியுறவு ஆகிய துறைகளில் செய்திருக்கும் பங்களிப்பு அளப்பரியது. 

இந்திய ராணுவத்தில் அதிகாரியாக இருந்த ஜஸ்வந்த் சிங், 1965-இல் பதவி விலகி ஜன சங்கத்தில் இணைந்து அரசியலில் நுழைந்தபோது பலரும் அவரை வியப்புடன் பார்த்தனர். அவரது ஆங்கிலப் புலமை மட்டுமல்லாமல், பல்துறை வித்தகமும் கட்சியின் மூத்தத் தலைவர்களை வியப்பில் ஆழ்த்தின. அடல் பிகாரி வாஜ்பாயியின் நம்பிக்கைக்குரியவராகவும், தனிப்பட்ட ஆலோசகராகவும் ஜஸ்வந்த் சிங் உயர்ந்தபோது, கட்சியின் வழிகாட்டிகளில் முக்கியமான ஒருவராக அவர் அங்கீகரிக்கப்பட்டார்.

ஜனதா கட்சியிலிருந்து பாரதிய ஜனதா கட்சி உருவானதில் ஜஸ்வந்த் சிங்கின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. 1980 முதல் 2014 வரை நாடாளுமன்றத்தின் ஏதாவது ஒரு அவையில் 34 ஆண்டுகள் தொடர்ந்து அங்கம் வகித்த ஜஸ்வந்த் சிங்கின் நாடாளுமன்ற உரைகள் அனைத்துக் கட்சியினராலும் கூர்ந்து கவனிக்கப்படும் உரையாக இருந்து வந்தன. 

2001-இல் அவருக்கு "தலைசிறந்த நாடாளுமன்றவாதி' விருது வழங்கப்பட்டபோது அதை கரகோஷத்துடன் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் வரவேற்ற காட்சி ஜஸ்வந்த் சிங்கின் தலைமைப் பண்புக்கு எடுத்துக்காட்டு.

1996-இல் பாரதிய ஜனதா கட்சி அமைத்த 13 நாள் அரசில் நிதியமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங்குக்கு, 1998-இல் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைத்து ஆட்சியை பாஜக கைப்பற்றியபோது நிதித்துறை வழங்கப்படாததன் பின்னணியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் எதிர்ப்பு இருந்தது என்கிற விமர்சனம் குறித்த சர்ச்சை இன்று வரை தொடர்கிறது. 

1998 முதல் 2004 வரை ஆட்சியில் இருந்த வாஜ்பாய் தலைமையிலான அரசில் வெளியுறவுத் துறை அமைச்சராகவும், பாதுகாப்பு அமைச்சராகவும், நிதித்துறை அமைச்சராகவும், திட்ட கமிஷனின் துணைத் தலைவராகவும் ஜஸ்வந்த் சிங் ஆற்றிய பங்களிப்பை நினைவுகூராமல் இருக்க முடியாது. வெளியுறவுத் துறை அமைச்சராக இந்தியாவின் 21-ஆம் நூற்றாண்டு வெளியுறவுக் கொள்கையை வடிவமைத்துத் தந்தவர் அவர்.

சுதந்திர இந்திய வரலாற்றில் மிகப் பெரிய சாதனையாக கருதப்படும் பொக்ரான் அணு ஆயுத சோதனை, ஒட்டுமொத்த உலகத்தையும் இந்தியாவுக்கு எதிராக மாற்றியது. 1998 மே மாதம் இந்தியா தன்னை அணு ஆயுத வல்லரசாக அறிவித்துக் கொண்டதைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடை பெரும்
பாலான வல்லரசு நாடுகளால் விதிக்கப்பட்டது. இந்தியாவுடன் நல்லுறவு பேணாத அண்டை நாடுகளான பாகிஸ்தானுடனும், சீனாவுடனுமான உறவு கடும் அழுத்தத்துக்கு உள்ளாகி, தெற்காசியாவின் ஸ்திரத்தன்மையே கேள்விக்குறியானது. 

அந்த காலகட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங்கின் திறமையான செயல்பாடு, இந்தியாவை மிகப் பெரிய சிக்கல்களிலிருந்து காப்பாற்றியது என்பது பலருக்கும் இப்போது நினைவில் இருக்காது. இந்தியாவின் மீது சர்வதேசத் தீண்டாமையின் நிழல்கூட விழுந்துவிடாமல் பாதுகாத்தது மட்டுமல்லாமல், அணு ஆயுத வல்லரசாக மாறிவிட்ட இந்தியாவுக்கு சர்வதேச மரியாதையைத் தேடித் தந்ததும் அவருடைய தனித்துவமான செயல்பாடுகள் என்பதைக் குறிப்பிட வேண்டும்.

அதுவரை இந்தியாவை சந்தேகத்துடன் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்கா உள்ளிட்ட வளர்ச்சி அடைந்த நாடுகளின் பார்வையில் அவர் ஏற்படுத்திய மாற்றம்தான் இப்போதைய இந்திய - அமெரிக்க நெருக்கத்துக்குக் காரணம். 1998 அணு ஆயுத சோதனைக்குப் பிறகு அன்றைய அமெரிக்க துணை வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்ட்ரோப் தால்போட்டுடன் தொடர்ந்து ஜஸ்வந்த் சிங் நடத்திய பேச்சுவார்த்தையும், அமெரிக்காவுக்கும் ஏனைய நாடுகளுக்கும் அணு ஆயுத பாதுகாப்பு இந்தியாவின் தேவை என்பதை அவர் உணர்த்திய விதமும்தான் இந்தியப் பொருளாதாரம் விழுந்துவிடாமல் அப்போது காப்பாற்றின.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ராஜீவ் காந்தி அரசும், நரசிம்ம ராவ் அரசும் மாற்றங்களை ஏற்படுத்தின என்றாலும்கூட, வாஜ்பாய் அரசில் ஜஸ்வந்த் சிங் அமைச்சராக இருந்து அவர் போட்ட பாதையில்தான் இன்று இந்தியா பயணித்துக் கொண்டிருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளுடனான உறவிலும் சரி, இஸ்ரேலுடனான நெருக்கத்திலும் சரி, சவூதி அரேபியா, ஈரான் போன்ற நாடுகளுடனான இந்தியாவின் கூட்டுறவிலும் சரி "ஜஸ்வந்த் சிங் முத்திரை' அழுத்தமாக பதிவாகியிருக்கிறது. 

காந்தகார் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானக் கடத்தல் தனது பொது வாழ்வில் ஒரு பின்னடைவு என்று அவரேகூட ஒப்புக்கொண்டிருக்கிறார். விமானத்தைக் கடத்திய தலிபான் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ ஆதரவளிக்காமல் இருந்திருந்தால், ஜஸ்வந்த் சிங் அந்தச் சிக்கலையும் சாமர்த்தியமாகக் கையாண்டிருக்க முடியும். ஏழு நாள்களுக்குப் பிறகு மசூத் அஸார் உள்ளிட்ட மூன்று பயங்கரவாதிகளை விடுவித்து, பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானப் பயணிகளை மீட்டெடுத்ததை சாதனை அல்ல என்று மறுத்துவிடவும் முடியாது. 

ஜஸ்வந்த் சிங்கின் ஆங்கில உச்சரிப்பும், நாகரிகமான அணுகுமுறையும், எந்த ஒரு பிரச்னை குறித்தும் அவருக்கு இருந்த ஆழமான புரிதலும் அவரது தனிச்சிறப்புகள். சர்வதேச அளவில் இந்தியாவுக்கு மரியாதை தேடித் தந்த வெளியுறவுத் துறை அமைச்சர் என்று ஜஸ்வந்த் சிங் வரலாற்றில் நினைவுகூரப்படுவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

SCROLL FOR NEXT