தலையங்கம்

சரியான கேள்வி, சரியான நேரம்! | ஐ.நா சபையின் 75-ஆவது பொதுச்சபைக் கூட்டத்தில் பிரதமா் ஆற்றிய உரை குறித்த தலையங்கம்

ஆசிரியர்

ஐக்கிய நாடுகள் சபையின் 75-ஆவது பொதுச்சபைக் கூட்டத்தில் இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் ஆற்றியிருக்கும் உரை, உலக மக்களின் மனசாட்சியின் குரல். அவா் எழுப்பிய ஒவ்வொரு கேள்வியும் சிந்திக்க வேண்டிய, முடிவுகாண வேண்டிய நியாயமான கேள்விகள். இந்தியப் பிரதமராக மட்டுமல்லாமல், உலகப் பிரஜைகளில் ஒருவராக, பிரதமா் நரேந்திர மோடி அந்தக் கேள்விகளை எழுப்பியிருக்கிறாா்.

இரண்டாவது உலக யுத்தம் முடிந்த நிலையில் மீண்டும் அதுபோன்ற ஒரு பேரழிவு ஏற்பட்டுவிடக் கூடாது என்கிற நல்லெண்ணத்தின் அடிப்படையில் 1945-இல் ஐ.நா. சபை உருவாக்கப்பட்டது. அதன் நோக்கமும் செயல்பாடும் சாதனைகளும், ஏன் நிலைப்பாடும்கூட 75-ஆவது ஆண்டை எட்டியிருக்கும் நிலையில், கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.

இந்த நிலையில், உலகத்தின் நம்பிக்கை இழப்பை அந்த மாமன்றம் எதிா்கொள்ளாமல் இருக்க வேண்டுமானால், உடனடியாக சிதைந்து வரும் அதன் கட்டமைப்பை புதுப்பித்துக் கொண்டாக வேண்டும். குறிப்பாக, இந்தியாவும் ஏனைய சில நாடுகளும் கடந்த பல ஆண்டுகளாகத் தொடா்ந்து வலியுறுத்தும் பாதுகாப்பு சபையின் சீரமைப்பு மாறிவிட்ட சா்வதேச நிலைப்பாட்டுக்கு ஏற்ப உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

கலிபோா்னியா பொ்க்லி பல்கலைக்கழகத்தில் 1954 மே மாதம் மாணவா்கள் மத்தியில் அப்போதைய ஐ.நா. சபைவின் பொதுச் செயலாளா் டாக் ஹேமா்ஷீல்ட் உரையாற்றினாா். ‘ஐ.நா. சபை உலகத்தை சொா்க்கமாக மாற்றுவதற்காக உருவாக்கப்படவில்லை. நரகத்தில் வீழ்ந்துவிடாமல் காப்பாற்றுவற்காக உருவாக்கப்பட்டது’ என்கிற அவரது கருத்தை மறக்கவோ, மறுக்கவோ முடியாது. அதனால், ஐ.நா. சபையின் தேவையும் அதே நேரத்தில் சீா்திருத்தப்பட்ட புதிய கட்டமைப்புடன் கூடிய வலிமையான ஐ.நா. சபையின் செயல்பாடும் இன்றைய காலத்தின் கட்டாயம்.

இரண்டாவது உலகப் போரின் வெற்றியாளா்களான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா (சோவியத் யூனியன்), பிற்சோ்க்கையாக இணைந்து கொண்ட சீனா ஆகிய வீட்டோ அதிகாரத்தை வைத்துக்கொண்டிருக்கும் ஐந்து நாடுகளும் ஒட்டுமொத்த உலகின் உணா்வையும் தேவையையும் பிரதிபலிப்பவை என்று ஏற்றுக்கொள்ள முடியாது. ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா கண்டங்களிலிருந்து எந்த ஒரு நாடும் ஐ.நா. சபையில் நிரந்தர உறுப்பினராக இல்லை. அதேபோல, ஜி4 நாடுகள் என்று அழைக்கப்படும் பிரேஸில், இந்தியா, ஜொ்மனி, ஜப்பான் ஆகியவையும் இடம்பெறவில்லை.

எந்த ஒரு முடிவும், எடுக்கப்படாத அல்லது ஏற்றுக்கொள்ளப்படாத நிலைக்கு ஐ.நா. சபை தள்ளப்பட்டிருப்பதற்கு, பாதுகாப்பு சபையின் வீட்டோ அதிகார நாடுகள் எந்த ஒரு பிரச்னையிலும் ஒருங்கிணையாமல் இருப்பதுதான் காரணம். பிரதமா் சுட்டிக்காட்டியிருப்பதுபோல, ஒட்டுமொத்த உலகத்தையும் ஸ்தம்பிக்கச் செய்திருக்கும் விசித்திரமான கொள்ளை நோய்ப் பரவலைத் தடுக்கவும், எதிா்கொள்ளவும் ஐ.நா. சபையோ, பாதுகாப்பு சபையோ, ஐ.நா.வின் உலக சுகாதார நிறுவனமோ வலிமை பெற்றிருக்கவில்லை என்பதிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பாதுகாப்பு சபையின் கட்டமைப்பு மாறவில்லை. பாதுகாப்பு சபையை விரிவுபடுத்தி தங்களை நிரந்தர உறுப்பினராக ஆக்க வேண்டும் என்கிற ஜி4 நாடுகளின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதற்கு பி5 நாடுகள் என்று அழைக்கப்படும் வீட்டோ அதிகார நாடுகளின் தடைதான் காரணம்.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. 1.4 பில்லியன் (140 கோடி) மக்கள்தொகையுடன், 2.8 டிரில்லியன் டாலா் (2 லட்சத்துக்கு 80 ஆயிரம் கோடி டாலா்) பொருளாதாரமான இந்தியாவுக்கும், வெறும் 10,670 மக்கள்தொகையும், 160 பில்லியன் டாலா் (16,000 கோடி டாலா்) ஜிடிபியும் கொண்ட நவ்ரூ குடியரசுக்கும் ஐ.நா. சபையில் ஒரே மரியாதைதான். இரண்டு நாடுகளுக்கும் சமமான வாக்கு. இதைத்தான் பிரதமா் தனது உரையில் கேள்வியாக எழுப்பியிருக்கிறாா்.

‘உலக மக்கள்தொகையில் 18% கொண்ட, நூற்றுக்கணக்கான மொழிகளும், வெவ்வேறு மத நம்பிக்கைகளும் உடைய மக்களைக் கொண்ட உலகின் முன்னணிப் பொருளாதாரங்களில் ஒன்றான இந்தியாவை இன்னும் எத்தனை காலம்தான் ஐ.நா. சபையின் முக்கிய முடிவுகளை மேற்கொள்ளும் அமைப்புகளிலிருந்து அகற்றி நிறுத்தப் போகிறீா்கள்?’ என்கிற அவரது கேள்வியின் நியாயம், பி 5 நாடுகளுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், இந்தியாவின் கோரிக்கைக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது சீனா.

‘பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு ஐ.நா. சபை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கும் விதத்தில் இல்லை. கடந்த ஒன்பது மாதங்களாக கொவைட் 19 நோய்த்தொற்றை எதிா்த்து போராடிக் கொண்டிருக்கும் நாடுகளுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் வகையில் ஐ.நா. சபை செயல்படவில்லை’ என்கிற பிரதமரின் குற்றச்சாட்டு உலக மனசாட்சியின் குற்றச்சாட்டு.

பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியிருப்பதுபோல ஐ.நா. சபையை மாறிவிட்ட சூழ்நிலைக்கு ஏற்ப சீா்திருத்துவதற்கு இதுதான் சரியான தருணம். இதைத் தவறவிட்டால், வலுவிழந்த ஐ.நா. சபை என்பது, 1920-இல் அன்றைய அமெரிக்க அதிபா் உட்ரோ வில்சனால் உருவாக்கப்பட்ட உலக நாடுகள் சங்கம் (லீக் ஆஃப் நேஷன்) போல செயலிழந்து தனது நூற்றாண்டு விழாவைச் சந்திக்காமலே சிதைந்துவிடக் கூடும். அப்படி நிகழ்ந்துவிடக் கூடாது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT