தலையங்கம்

கூடியது... கலைந்தது...| நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகள் குறித்த தலையங்கம்

ஆசிரியர்


ஜனநாயகத்தில் நாடாளுமன்றத்தின் பங்கு என்பது கூடுவதும், சட்டங்களை இயற்றுவதும், கலைவதும் மட்டுமல்ல. இயற்றப்படும் ஒவ்வொரு சட்டமும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் விவாதிக்கப்படவில்லை என்றால் அதற்குப் பெயர் ஜனநாயகம் அல்ல. அதற்கு நாடாளுமன்றத்தின் அவசியமும் தேவையில்லை.

பத்து அமர்வுகளில் மக்களவையும், மாநிலங்களவையும் 25 மசோதாக்களை நிறைவேற்றியிருக்கின்றன. மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன என்பதைத் தவிர பெருமைப்படவும், பெருமிதப்படவும் மழைக்காலக் கூட்டத்தொடரில் வேறு என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. ஆளும் கட்சிக்கு மக்களவையில் பெரும்பான்மை இருக்கும் நிலையில் மசோதாக்கள் நிறைவேறியதில் ஓரளவுக்கு விவாதமும் நடந்ததில் சற்று ஆறுதல். ஆனால், மாநிலங்களவையின் செயல்பாடுதான் மிகவும் வருத்தமளிக்கிறது. நாடாளுமன்ற ஜனநாயகம் எப்படி செயல்படக்கூடாது என்பதற்கு மாநிலங்களவையின் நடந்து முடிந்த மழைக்காலக் கூட்டத் தொடர் முன்னுதாரணம் படைத்திருக்கிறது. 

நாடாளுமன்ற ஜனநாயகத்தில், தேர்தலில் வெற்றிபெறும் கட்சி அவையில் பெரும்பான்மை பலம் கொண்ட கட்சியாக இருப்பதால் ஆட்சியமைக்கிறது. அதேநேரத்தில் அந்தக் கட்சி பெரும்பான்மை மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது என்று கருதிவிட முடியாது. ஏனென்றால், பெரும்பாலான ஆளும் கட்சிகள் சராசரியாக 35% வாக்குகள் பெற்ற கட்சிகளே  தவிர, 50%-க்கும் அதிகமாக பெரும்பான்மை வாக்குகள் பெற்ற கட்சியாக இருப்பதில்லை. 1984-இல் ராஜீவ் காந்தியின் தலைமையில் 8-ஆவது மக்களவையில் அமைந்த ஆட்சி மட்டும்தான் இந்தியக் குடியரசில் இதுவரை 50%-க்கும் அதிகமான வாக்குகள் பெற்றிருந்தது.

நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது தேர்தல் வெற்றியையும், அவைப் பெரும்பான்மையையும் மட்டுமே சார்ந்ததல்ல. நாடாளுமன்ற நடைமுறையின் அடிப்படையாக மூன்று செயல்பாடுகள் கருதப்படுகின்றன. நாடாளுமன்ற நடைமுறையை கேள்வி நேரம், விவாதம், வாக்கெடுப்பு என்று மூன்றாகப் பிரிக்கலாம். பெரும்பான்மை பலம் இருக்கிறது என்பதற்காக இந்த நடைமுறைகள் பின்பற்றப்படாமல் மசோதாக்கள் நிறைவேற்றப்படும்போது அவை சட்டமாகலாம். ஆனால் அது ஜனநாயக நடைமுறை அல்ல. 

கொள்ளை நோய்த்தொற்றைக் காரணம் காட்டி, நடந்து முடிந்த மழைக்காலத் தொடரில் கேள்வி நேரம் தவிர்க்கப்பட்டது. கேள்வி நேரம் வேண்டுமா; வேண்டாமா என்பதை அனைத்துக் கட்சிகளின் ஒப்புதலுடனோ, வாக்கெடுப்பின் மூலமோ தீர்மானிப்பதுதான் முறையாக இருந்திருக்கும். 

இரண்டாவதாக, மிக முக்கியமான 25 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அவை முழுமையாக விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு அதற்குப்பின் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் சில ஆலோசனைகளையும் திருத்தங்களையும் முன்மொழிய வாய்ப்பளித்து அவற்றை ஏற்கவோ நிராகரிக்கவோ ஆளும் கட்சிக்கு உரிமையுண்டு. அதை விடுத்து விவாதமில்லாமல் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால் அது நாடாளுமன்ற ஜனநாயகத்தை அவமதிப்பதாக அர்த்தம். 

மூன்றாவதாக, வாக்கெடுப்பு. அவையின் எந்த உறுப்பினருக்கும் வாக்கெடுப்புக் கோரும் உரிமை உண்டு. அவைத் தலைவர் அதற்கு ஒப்புதல் வழங்குவதுதான் முறை. அந்த கோரிக்கையை நிராகரிப்பதாக இருந்தாலும்கூட, குரல் வாக்கெடுப்பு நடத்தி நிராகரிப்பதுதான் நாடாளுமன்ற நடைமுறை. அதுவும் மழைக்காலக் கூட்டத்தொடரில் மீறப்பட்டிருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு மக்களவையில் பெரும்பான்மை இருக்கிறது. மாநிலங்களவையிலும் ஆதரவுக் கட்சிகளின் துணையோடு மசோதாக்களை நிறைவேற்றிக் கொள்ளும் சாமர்த்தியமும் இருக்கிறது. அப்படியிருக்கும்போது, எதிர்க்கட்சிகளை விமர்சனங்களை முன்வைத்து பேசவிட்டு, தங்களது கருத்துகளைப் பதிவு செய்ய அனுமதிப்பதில் அரசு ஏன் தயங்க வேண்டும்? தர்ம சங்கடமான கேள்விகளை அவர்கள் எழுப்பக்கூடும், அப்படி எழுப்புவதற்காகத்தான் நாடாளுமன்றம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை ஏன் ஆளும் கட்சி மறந்துவிடுகிறது?

அது வேளாண் துறை தொடர்பான மசோதாக்களாக இருந்தாலும், தொழிலாளர் நலத் துறை தொடர்பான மசோதாக்களாக இருந்தாலும் உடனடியாக நிறைவேற்றியாக வேண்டும் என்கிற நிர்ப்பந்தம் ஒன்றும் இல்லை. இவை ஒன்றும் நிதி மசோதாக்கள் அல்ல. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விவாதிக்கப்படும் பிரச்னைகள்தான் இவை. 

சொல்லப்போனால், எதிர்க்கட்சியான காங்கிரஸால் இந்தச் சீர்திருத்தங்கள் முன்பு முன்மொழியப்பட்டிருக்கின்றன. அரசு கொண்டு வரும் மசோதாவை எதிர்ப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் போலித்தனம் வெளிப்படுமே தவிர, ஆளும் கட்சி கொண்டுவரும் மசோதா நிறைவேறுவது தடைப்பட்டுவிடப் போவதில்லை. 

எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன; அவையை நடத்த விடாமல் கூச்சலிட்டன என்பது போன்ற குற்றச்சாட்டுகளில் அர்த்தமில்லை. எதிர்க்கட்சிகளை அரவணைத்துக்கொண்டு, அவர்களின் கருத்துகளுக்கும் ஆலோசனைகளுக்கும் இடமளித்து அவையை முறையாக நடத்தும் பொறுப்பு ஆளும்கட்சிக்கு உண்டு. விவாதமும் விமர்சனங்களும் இல்லாமல் பெரும்பான்மை பலம் இருப்பதால் மசோதாக்களை நிறைவேற்றி ஆளும் கட்சி அடையும் வெற்றி நாடாளுமன்ற ஜனநாயகம் எதிர்கொள்ளும் தோல்வி.

நாடாளுமன்றத்தின் இன்னொரு குளிர்காலக் கூட்டத்தொடர் கூடிக் கலைந்திருக்கிறது, வேறென்ன சொல்ல!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண நாள் கொண்டாட்டத்தில் அஜித் - ஷாலினி!

தெற்கு சீனாவை புரட்டிப்போட்ட பெருமழை: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்

கணவருக்கு எதிராக போட்டியிடும் மனைவி: சுவாரசிய தேர்தல் களம்!

கோட்டக் மஹிந்திரா வங்கியின் முக்கிய சேவைகளுக்கு ஆர்பிஐ தடை!

மக்களே உஷார்! சமூக ஊடகங்களில் எல்ஐசி பெயரில் போலி விளம்பரங்கள்

SCROLL FOR NEXT