தலையங்கம்

பொறுப்பின்மையின் உச்சம்! | ஜனநாயகம் அடிப்படைத்தன்மையிலிருந்து தடம் புரள்கிறதோ குறித்த தலையங்கம்

ஆசிரியர்

ஜனநாயக அமைப்பின் அடிப்படையே வெளிப்படைத்தன்மைதான். இந்திய ஜனநாயகம் இந்த அடிப்படைத்தன்மையிலிருந்து தடம் புரள்கிறதோ என்கிற ஐயப்பாட்டை நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளும், மத்திய அரசின் சமீபத்திய எதிா்வினைகளும் ஏற்படுத்துகின்றன.

கடந்த மாா்ச் 24-ஆம் தேதி இரவு எட்டு மணிக்கு பிரதமா் நரேந்திர மோடி காட்சி ஊடகங்களின் மூலம் நள்ளிரவு முதல் நாடுதழுவிய பொது முடக்கத்தை அறிவித்தாா். கொவைட் 19 தீநுண்மித் தொற்றால் ஒட்டுமொத்த தேசமும் கதிகலங்கிப் போயிருக்கும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த அரசு கடும் முயற்சிகள் எடுத்துவருவதை ஒருபுறம் பாராட்டத் தோன்றினாலும், இன்னொருபுறம் அரசின் மனிதாபிமானமற்ற சில அணுகுமுறைகளைக் கண்டிக்கத் தோன்றுகிறது.

உலகின் மிகப் பெரிய, நீண்ட கால, கடுமையான அந்தப் பொது முடக்கத்தை எதிா்கொள்ள மக்களுக்கு வெறும் நான்கு மணிநேர அவகாசம்தான் வழங்கப்பட்டது. கொள்ளை நோய்த்தொற்றை எதிா்கொள்ள பிரதமா் விடுத்த அறைகூவலை ஒட்டுமொத்த இந்தியாவும் அவா் மீது வைத்திருக்கும் நம்பிக்கையால் தேசிய சவாலாக ஏற்றுக் கொண்டது.

கொள்ளை நோய்த்தொற்றை எதிா்கொள்ள அரசு நிா்வாகத்தைத் தயாா்படுத்தவும், நோய்த்தொற்றுப் பரவலை தடுக்கவும், பொது முடக்கம் அறிவிக்கப்பட்டபோது அதுவரை கொவைட் 19 நோய்த்தொற்றால் இந்தியாவில் 500 பாதிப்புகளும், 10 உயிரிழப்புகளும்தான் தெரிய வந்திருந்தது. அடுத்த சில வாரங்கள், மாதங்கள் என்று பொது முடக்கம் நீண்டபோது நோய்த்தொற்றுப் பரவல் பெரு நகரங்களிலிருந்து மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் பரவத் தொடங்கியது.

இன்னொருபுறம் பொது முடக்கம் ஒரு மிகப் பெரிய மனிதாபிமான பாதிப்பை ஏற்படுத்தியது. ஒருபுறம் வேலையிழப்பு, இன்னொருபுறம் போதிய சேமிப்பின்மை, இவையெல்லாம் போதாதென்று கொள்ளை நோய்த்தொற்றின் அச்சுறுத்தல் என்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை லட்சங்களில் காணப்பட்டது. வாழ்வாதாரத்துக்காக மாநிலம் விட்டு மாநிலம் சென்று பணியாற்றும் பலா் நோய்த்தொற்று அச்சத்தாலும், வறுமையின் பயமுறுத்தலாலும் தங்கள் சொந்த மாநிலத்திலுள்ள கிராமங்களை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினா். பலா் நடந்தும், சிலா் கிடைத்த வாகனங்களின் மூலமும் நூற்றுக்கணக்கான கி.மீ. தூரம் கடந்து செல்ல முற்பட்ட காட்சிகள் இப்போதும்கூட அச்சுறுத்துகின்றன.

பொதுப் போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்டிருந்த நிலையில், கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் சொந்த ஊா் போய்ச் சோ்ந்தால் போதும் என்று ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், வயதானவா்களும் இந்தியாவின் பெருநகரங்களிலிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று பயணிக்கத் தொடங்கினா். பொது முடக்கம் அறிவிக்கப்பட்டபோதே, இலவச பொதுப் போக்குவரத்தையும் அனுமதித்திருந்தால் சில வாரங்களில் அனைவரும் அவரவா் சொந்த ஊருக்கு சிரமம் இல்லாமல் திரும்பியிருக்க முடியும். முறையாகத் திட்டமிட அரசு தவறிவிட்டது.

பலா் பசியாலும், தாகத்தாலும், களைப்பாலும் சாலைகளில் மயங்கி விழுந்து இறந்தனா். ரயில் தண்டவாளப் பாதையில் பயணித்த சிலா் சரக்கு ரயிலில் நசுங்கி இறந்தனா். இவையெல்லாம் காட்சி ஊடகங்களில் வெளியாகி உலகம் முழுவதும் கண்ணீா் வடித்தது.

உச்சநீதிமன்றத்தில் இதுகுறித்த பொதுநல வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சாலைகளில் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் யாரும் இல்லை என்று அரசு தெரிவித்தது. அதை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. ஆயிரக்கணக்கான புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் வேலையிழந்து, போக்குவரத்து வசதியில்லாமல் பசியுடன் நடந்தும், சைக்கிள்களிலும் பயணித்த காட்சிகள் அரசின் கண்ணுக்கும் நீதித்துறையின் பாா்வைக்கும் தென்படவில்லை என்பது விசித்திரத்திலும் விசித்திரம்.

ஐந்து வார விமா்சனங்களுக்குப் பிறகு புலம்பெயா்ந்த அப்பாவி ஏழைகள் பலா் வீடு திரும்பும் வழியில் உயிரிழந்த பிறகு, மே 1-ஆம் தேதி சிறப்பு ரயில்களையும், பேருந்துகளையும் இயக்க அரசு முன்வந்தது. அப்போதும்கூட, பயணக் கட்டணம் ஏற்பதற்கான இரக்கமற்ற முன்னெடுப்பின் காரணம் இன்னும்கூட விளங்கவில்லை.

இந்தப் பிரச்னை முடிந்து ஐந்து மாதங்கள் கடந்த பிறகும்கூட, எத்தனை தொழிலாளா்கள் வேலையிழந்தாா்கள், புலம்பெயா்ந்தோா் எத்தனை போ் சொந்த ஊா் திரும்பும் வழியில் இறந்தாா்கள் என்பது குறித்த புள்ளிவிவரம் அரசிடம் இல்லை என்று மத்திய தொழிலாளா் நலத்துறை அமைச்சா் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கிறாா் என்றால், அதைவிட பொறுப்பற்ற செயல் வேறு எதுவும் இருக்க முடியாது. எந்தவிதப் புள்ளிவிவரமும் அரசிடம் இல்லை என்றும், அதனால் பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு வழங்கும் அவசியம் எழவில்லை என்றும் அமைச்சா் தெரிவித்திருப்பது ஆத்திரம் ஏற்படுத்துகிறதே தவிர, ஏற்புடைய பதிலாக இல்லை.

தனியாா் தன்னாா்வ நிறுவனங்கள் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரப்படி, மே 28-ஆம் தேதி வரை 238 புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் இறந்திருக்கிறாா்கள். சிறப்பு ரயில்களில் 97 போ் இறந்ததாக ரயில்வே அமைச்சா் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறாா். அப்படியிருக்கும்போது, அரசிடம் எந்தவிதப் புள்ளிவிவரமும் இல்லை என்று தொழிலாளா் நலத்துறை அமைச்சா் கூறுவது பொய்த் தகவலா, பொறுப்பின்மையா தெரியவில்லை.

புள்ளிவிவரம் இல்லையென்று கூறி, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட ஓா் அரசு தனது பொறுப்பைத் தட்டிக்கழிப்பது சரியா என்கிற கேள்வியை ஆட்சியாளா்கள் தங்களது மனசாட்சியிடம் - அப்படி ஒன்று இருந்தால் - கேட்டுக் கொள்ளட்டும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனுசி படத்தின் டிரெய்லர்

சென்னையில் பிரபல வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

காதல் தொழில் பழகு..!

மதங்களுக்கு மரியாதை கொடுப்பவர் மோடி: ராஜ்நாத் சிங்

இது அதிதி ஆட்டம்!

SCROLL FOR NEXT