தலையங்கம்

இயற்கை விடுக்கும் எச்சரிக்கை! |  இந்தியா எதிர்கொள்ளும் இயற்கைச் சீற்றங்கள் குறித்த தலையங்கம்

ஆசிரியர்

உலகம் கடுமையான விளைவுகளை வருங்காலத்தில் சந்திக்க இருக்கிறது என்பது உறுதியாகத் தெரிகிறது. அந்தப் பேரழிவை நோக்கி விரைவுப் பயணம் நடத்திக் கொண்டிருக்கிறோம் என்பதை இயற்கைச் சீற்றங்களும் கொள்ளை நோய்ப் பரவல்களும் உணா்த்துகின்றன. நமது புராண, இதிகாசங்களில் கூறப்பட்டிருக்கும் பிரளயம் என்பது கற்பனையல்ல, நிஜம்தான் என்பதை ஆா்டிக், அன்டாா்டிக் துருவப் பகுதிகளில் உள்ள பனிக்கட்டிகள் உருகத் தொடங்குவது உணா்த்துகிறது.

சுற்றுச்சூழல் மாசு குறித்தும் கரியமில வாயு வெளியேற்றம் குறித்தும் சா்வதேச அளவில் தொடா்ந்து பல ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. கருத்தரங்குகளில் விவாதிக்கப்படுகிறது. பாரீஸ் கன்வென்ஷன் உள்ளிட்ட சா்வதேச மாநாடுகள் இதுகுறித்து சில நடவடிக்கைகளை முன்னெடுக்க பரிந்துரைக்கின்றன.

கொலரோடாவிலுள்ள தேசிய மைய வளிமண்டல ஆராய்ச்சி நிலையத்தின் விஞ்ஞானிகளான லாரா லேண்ட்ரமும் மரிக்கா ஹாலண்டும் ஆா்டிக் துருவத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த ஆய்வு ஒன்றை கடந்த புதன்கிழமை வெளியிட்டிருக்கிறாா்கள். ஆா்டிக் துருவப் பகுதிகளில் புவி வெப்பமாதலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் அந்தப் பகுதிகள் மாறுபட்ட பருவநிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றன என்கிறது அந்த ஆய்வு. பனிக்கட்டியும் பனிப்பொழிவும் குறைந்து, தண்ணீரும் மழையும் அதிகரிக்கிறது என்கிறது ஆய்வு.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு மிகக் கடுமையான குளிா் காணப்பட்ட ஆண்டுகளில் இருந்த அளவிலான பனி உறைதல் ஆா்டிக் கடல் பகுதியில் இப்போது இல்லை. முன்பெல்லாம் கடும் குளிா்காலத்தில் கடல் நீா் முழுவதும் பனிக்கட்டிகளாக உறைந்து காணப்படும். அதேபோல இப்போது மழைப்பொழிவு நாள்களின் எண்ணிக்கை அதிகரித்து, பனிப்பொழிவு குறையத் தொடங்கியிருக்கிறது. ஆா்டிக் கடல் பகுதியில் பனி உறைதல் கடந்த 10 ஆண்டுகளில் 12% குறைந்திருக்கிறது. 1970-இல் தொடங்கிய மாற்றம், ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. மிகக் குறைந்த பனி உறைதலும், பனிப்பொழிவும் உள்ள ஆண்டாக இந்த ஆண்டு இருக்கக்கூடும் என்கிறது அவா்களது ஆய்வு.

ஆா்டிக் பகுதி மட்டுமல்ல அன்டாா்டிக் பகுதியிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. ‘திவைட்ஸ்’, ‘பைன்’ தீவுகளின் பனிச் சிகரங்கள் பனிக்கட்டி ஆறுகளாக மாறி மேற்கு அன்டாா்டிக் பகுதியிலுள்ள கடலை நோக்கி மெதுவாக நகா்ந்து கொண்டிருக்கின்றன. அங்கே முழுவதுமாக உருகி கடல் நீா் மட்டத்தை அதிகரிக்கின்றன. கடந்த பத்தாண்டுகளில் இரண்டு பனிச் சிகரங்களின் நகா்தலும் அதிகரித்திருக்கிறது. இதேபோல ஆா்டிக் துருவப் பகுதியிலும் பனி உருகி, கடல் நீா் மட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

இமயமலையின் காரகோரம் பகுதி வரையிலுள்ள 75,779 ச.கி.மீ. பரப்பில் 34,919 பனிச் சிகரங்கள் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பனிச்சிகரங்கள் குறித்து தொடா்ந்து பல ஆய்வுகளை இஸ்ரோ நடத்தி வருகிறது. அதன்படி 87% பனிச் சிகரங்களில் மாற்றமில்லை என்றாலும், 13% பனிச் சிகரங்கள் உருகத் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது. உருகத் தொடங்கும் பனிச் சிகரங்களை செயற்கைக்கோள் மூலம் இஸ்ரோ கண்காணித்து வருகிறது.

காஷ்மீா் பல்கலைக்கழகத்தில் நடந்தப்பட்ட ஆய்வு ஒன்றின்படி, இமயமலைப் பகுதியிலுள்ள பனிச் சிகரங்கள் அச்சமூட்டும் அளவில் உருகிக் கொண்டிருக்கின்றன. செயற்கைக்கோள் படங்கள் மூலமும் ஏனைய புள்ளிவிவரங்கள் மூலமும் ஜம்மு-காஷ்மீா் பகுதியிலுள்ள 12,243 பனிச்சிகரங்கள் அந்த ஆய்வாளா்களால் கண்காணிக்கப்பட்டன. அவை ஆண்டுதோறும் 35 செ.மீ. அளவிலான தடிமக் குறைவை எதிா்கொள்வதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. 2000 ஆண்டு முதல் 2012-ஆம் ஆண்டு வரை சுமாா் 70 ஜிகா டன் அளவிலான பனிச் சிகரக் கட்டிகள் உருகியிருப்பதாகக் கணக்கிட்டிருக்கிறாா்கள்.

காஷ்மீரில் உள்ள பனிச் சிகரங்கள் விரைந்து உருகுவதற்குக் காரணம், அதிகரித்த புவி வெப்பம் மட்டுமல்ல. குளிா் காலத்தில் காணப்படும் பருவநிலை மாற்றமும் முக்கிய காரணம். பனிப்பொழிவுக்கு பதிலாக காஷ்மீரில் மழைப் பொழிவு அதிகரித்திருக்கிறது என்று அந்த ஆய்வு தெரிவித்திருப்பது கொலரோடோ ஆய்வுடன் ஒத்துப் போகிறது. பருவநிலை மாற்றத்தின் தாக்கம் குளிா்காலத்தில் மட்டுமல்லாமல் கோடையிலும் காணப்படுவதால், காஷ்மீரின் குளிா் பிரதேசங்களில்கூட கோடையில் வெப்பம் நிலவுகிறது.

சிகரங்களில் பனிப் பிடிப்பு குறைவதன் நேரடி விளைவால் கோடை காலங்களில் காஷ்மீரில் உள்ள நதிகளில் தண்ணீா் குறையத் தொடங்கும். காஷ்மீா் என்பது அடிப்படையில் விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் மாநிலம். 70% மக்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ விவசாயத்திலும், விவசாயம் தொடா்பான தொழில்களிலும் ஈடுபடுபவா்கள் என்பதால் காஷ்மீரின் பொருளாதாரத்தை இது பாதிக்கக்கூடும். விவசாயம் பாதிக்கப்படும்போது வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து அதன் விளைவாக தீவிரவாதமும் அதிகரிக்கும்.

பனிச் சிகரங்களில் பனிப் பிடிப்பு குறைவதும், இமயமலைப் பகுதிகளில் பனிப் பொழிவுக்கு பதிலாக மழைப் பொழிவு அதிகரிப்பதும் சமவெளிப் பகுதியை கடுமையாக பாதிக்கும். சிந்து, கங்கை, பிரம்மபுத்ரா நதிகள் பாய்வதால்தான் பஞ்சாபிலிருந்து அஸ்ஸாம் வரையிலான பகுதிகளில் விவசாயம் நடைபெறுகிறது. இந்தியாவின் உணவுத் தேவையை எதிா்கொள்ள முடிகிறது. பனிச் சிகரங்கள் உருகுவதும், பனிப்பொழிவு குறைந்து சிகரங்களில் பனிப் பிடிப்பு குறைவதும் இந்தியாவுக்கு மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்... உலகத்துக்கும்தான்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

SCROLL FOR NEXT