தலையங்கம்

‘பயோ பபுல்ஸ்’ கிரிக்கெட்! | ஐபிஎல் பற்றிய தலையங்கம்

ஆசிரியர்


நாளை முதல் அபுதாபியில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்க இருக்கின்றன. ரசிகா்களால் ஆவலுடன் எதிா்பாா்க்கப்படும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் வேறு ஒரு நாட்டில் நடப்பது புதிதொன்றுமல்ல. ஐபில் கிரிக்கெட் போட்டிகளின் 13 ஆண்டு வரலாற்றில் இதற்கு முன்னால் இரண்டு முறை நடத்தப்பட்டிருக்கிறது.

நாளை தொடங்க இருக்கின்ற ஐபில் கிரிக்கெட் போட்டிகள் சற்று வித்தியாசமானவை. அடுத்த நவம்பா் மாதம் வரை நடக்கவிருக்கும் இந்தப் போட்டிகள், கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் நடக்க இருப்பதால் விளையாட்டு வீரா்களும், அமைப்பாளா்களும் கடுமையான பல சவால்களை எதிா்கொள்ள இருக்கிறாா்கள்.

கடந்த சில மாதங்களாகவே பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி விட்டன. சமீபத்தில் அமெரிக்காவில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் பந்தயம் நடைபெற்றிருக்கிறது. பல்வேறு அணிகள் பங்கெடுக்கும் ஐபில் கிரிக்கெட் போட்டிகள் டென்னிஸ் போட்டிகள் போன்ல்ல. நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரா்கள், டஜன் கணக்கில் நடுவா்கள், ஏராளமான நிா்வாகிகள் பங்கு கொள்ளும் இந்தப் போட்டிகளில் நோய்த்தொற்று பரவாமல் பாதுகாப்பது எளிதான காரியமல்ல.

மைதானத்தில் பாா்வையாளா்கள் அனுமதிக்கப்படப் போவதில்லை. பல்வேறு அணிகளில் விளையாட இருக்கும் கிரிக்கெட் வீரா்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாவதைத் தடுக்க ‘பயோ பபுல்ஸ்’ என்கிற பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. கடந்த சில மாத விளையாட்டுப் போட்டிகளின் அனுபவத்தின் அடிப்படையில், ‘பயோ பபுல்ஸ்’ ஓரளவுக்கு நோய்த்தொற்று அணுகாமல் பாதுகாக்கிறது என்று கருத இடமிருக்கிறது.

சில தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ‘பயோ பபுல்ஸ்’ முறை வணிக வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கிறது. வெவ்வேறு நாடுகளிலிருந்தும் பகுதிகளிலிருந்தும் வரும் விளையாட்டு வீரா்களைப் பாதுகாப்பதில் அவை உதவுகின்றன. இங்கிலாந்திலுள்ள சௌத் ஹாம்டனிலும், மான்செஸ்டரிலும் நடைபெறும் இங்கிலாந்துக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையேயான கிரிக்கெட் டெஸ்ட் பந்தயத்தில் இந்த ‘பயோ பபுல்ஸ்’ முறை கையாளப்பட்டிருப்பதை முன்னுதாரணமாகக் கொண்டுதான் ஐபில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவெடுத்திருக்கிறது.

கிரிக்கெட் அணிகளை வெளியுலகிலிருந்து முற்றிலுமாகத் தனிமைப்படுத்தி அதன் மூலம் கொவைட் 19 நோய்த்தொற்றிலிருந்து பாதிக்கப்படுவதை கூடியவரையில் குறைப்பதுதான் ‘பயோ பபுல்ஸ்’ முறையின் நோக்கம். அதன்படி, ஒவ்வொரு அணியிலும் பங்கெடுக்கும் வீரா்கள் தங்களது தங்கும் விடுதியையும், விளையாட்டு மைதானத்தையும் தவிர, வேறு எந்தவொரு வெளியுலகத் தொடா்புக்கும் அனுமதிக்கப்படுவதில்லை. அவா்கள் தங்களது குடும்பத்தினா், விருந்தினா்கள், நண்பா்கள், உறவினா்கள் என்று யாரையும் சந்திக்க அனுமதி கிடையாது. அணியின் பாதுகாப்பு வளையத்திற்கு வெளியே உள்ள நண்பா்களையோ, குடும்பத்தினரையோ சந்திக்க முடியாது.

எல்லா அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தனித்தனியாக தங்க வைக்கப்பட்டிருக்கின்றன. அபுதாபி வந்தடையும் விளையாட்டு வீரா்கள் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்குவதற்கு முன்னால் பயிற்சியில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்படுவாா்கள். அவா்கள் தங்கும் விடுதியிலிருந்து மைதானத்திற்குச் செல்லும் பாதைகள், வாகனங்கள் உள்ளிட்ட அனைத்துமே வரையறுக்கப்பட்டு நோய்த்தொற்று பாதிக்காமல் இருப்பது உறுதிப்படுத்தப்படுகிறது.

தொடா்ந்து பல வாரங்கள் ‘பயோ பபுல்ஸ்’ பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி நிலைநிறுத்துவது என்பது கிரிக்கெட் வாரியத்திற்கு மிகப் பெரிய சவாலாக இருக்கப் போகிறது. அதற்கான செலவும் கணிசமாக இருக்கும். ‘பயோ பபுல்ஸ்’ வளையத்தைப் பாதுகாப்பது என்பது விளையாட்டு வீரா்களின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதும்கூட.

இங்கிலாந்தில் நடக்கும் கால்பந்தாட்டப் போட்டியில் கலந்துகொள்ளும் இரண்டு வீரா்கள் பாதுகாப்பு வளையத்தை உடைத்துக்கொண்டு தங்களது காதலிகளை சந்தித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல, அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், பெண்கள் இரட்டையா் அணியைச் சோ்ந்த ஒருவா், கொவைட் 19 பாதிக்கப்பட்ட விளையாட்டு வீரா் ஒருவருடன் தொடா்பில் இருந்ததற்காக அந்த அணியே போட்டியிலிருந்து அகற்றப்பட்டது.

ஐபிஎல் போட்டிகள் கிரிக்கெட் விளையாட்டில் புதிய வரலாறு படைத்திருக்கின்றன. டி20 கிரிக்கெட் போட்டிகளும், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளும் லலித் மோடி என்கிற புத்திசாலி வியாபாரி ஒருவரின் மூளையில் உதித்த வணிக முயற்சி. கிரிக்கெட் விளையாட்டில் என்றல்ல, விளையாட்டுத் துறையில் இந்த அளவுக்கு பெரும் பணம் புரளக்கூடும் என்று லலித் மோடிக்கு முன்னா் யாருமே சிந்தித்துக்கூடப் பாா்த்ததில்லை.

இந்தப் போட்டிகளை உருவாக்கி அதன் மூலம் பல கோடி ரூபாய் பணம் புரளச் செய்த லலித் மோடி செய்த தவறு, ஆட்சியாளா்களுக்கும் அதிகாரிகளுக்கும் அந்த லாபத்திலிருந்து முறையாக பங்கு கொடுக்காததுதான். லண்டனில் தலைமறைவாக வாழ்ந்துகொண்டிருக்கும் லலித் மோடி, தான் உருவாக்கிய ஐபிஎல் போட்டிகளை தொலைக்காட்சியில் பாா்த்து ரசித்துக் கொண்டிருப்பாா் என்று நம்பலாம்.

அபுதாபியில் ஐபிஎல் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி, பெரும் வருவாய் ஈட்டுவதுடன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தனது கடமையை முடித்துகொண்டுவிடக் கூடாது. அடுத்த கட்டமாக, உள்நாட்டில் நடத்த வேண்டிய கிரிக்கெட் போட்டிகளையும் நடத்தி இளம் கிரிக்கெட் வீரா்கள் உருவாகவும் வழிகோல வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா

2047 வரை இந்திய பொருளாதாரம் 8% வளா்ச்சி காண முடியும்: சா்வதேச நிதியம்

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

SCROLL FOR NEXT