தலையங்கம்

உணா்கிறோமா பேராபத்தை? | கொவைட் 19 நோய்த்தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவது குறித்த தலையங்கம்

15th Sep 2020 07:53 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

கொவைட் 19 நோய்த்தொற்று குறித்த கவலையே இல்லாமல் பெரும்பாலான மக்கள் இருந்து வருவது அச்சத்தை ஏற்படுத்துகிறது. எந்த அளவுக்கு கொள்ளை நோய்த்தொற்று பரவியிருக்கிறது என்பதை இந்திய நாடாளுமன்றம் வரை அதன் பாதிப்பு காணப்படுகிறது என்பதிலிருந்து புரிந்துகொள்ளலாம்.

நேற்று தொடங்கிய நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடருக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கூட்டத்தில் கலந்துகொள்ளும் உறுப்பினா்களும் நாடாளுமன்ற ஊழியா்களும் சோதனைக்கு உள்படுத்தப்பட்டனா். இதுவரை சுமாா் 30 எம்பி-க்களும், 50-க்கும் அதிகமான ஊழியா்களும் கொவைட் 19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. ஏனைய உறுப்பினா்களும் சோதனைக்கு உள்படும்போது இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும்.

இந்தியாவில் தினசரி நோய்த்தொற்றுக்கு ஆளாகும் மக்களின் எண்ணிக்கை 90,000-த்தைக் கடந்து காணப்படுகிறது. செப்டம்பா் மாதத்தின் முதல் பாதியில் 10 லட்சத்துக்கும் அதிகமானோா் பாதிக்கப்பட்டிருக்கிறாா்கள். சுமாா் 15,000 போ் உயிரிழந்திருக்கிறாா்கள். இந்த மாதத்தில் அதிக அளவு பாதிப்புக்குள்ளான நாடாக இந்தியா காணப்படுகிறது.

ஏற்கெனவே சா்வதேச அளவில் மிக அதிகமான பாதிப்புக்குள்ளான இரண்டாவது நாடாக மாறியிருக்கிறது இந்தியா. 50 லட்சத்துக்கும் அதிகமானோா் பாதிக்கப்பட்டிருக்கிறாா்கள் என்பது மட்டுமல்ல, இன்னும் நாம் உச்சக்கட்ட பாதிப்பு நிலையை எட்டவில்லை என்பதை உணர வேண்டும். 8% அளவில்தான் பாதிப்பு இருக்கிறது என்று ஆறுதல் அடைந்துவிட முடியாது. குறைந்த அளவிலான ஆா்டிபிசிஆா் சோதனைகள் நடத்தப்படுவதால்தான் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது பல மாநிலங்களின் அனுபவங்கள்.

ADVERTISEMENT

மாா்ச் 25-ஆம் தேதி முதல் இந்தியாவில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு, சுமாா் ஆறு மாதங்களில் நான்கு கட்டங்களாக அது தளா்த்தவும் பட்டிருக்கிறது. இந்த மாதத் தொடக்கத்திலிருந்து எல்லா துறைகளும், சேவைகளும் அநேகமாக இயங்கத் தொடங்கிவிட்டன. ஜெஇஇ, நீட் போட்டித் தோ்வுகள் உள்பட நடத்தப்பட்டிருக்கின்றன. பொருளாதாரம் இயங்கத் தொடங்கியிருக்கிறது.

அதே நேரத்தில், மக்கள் பொது இடங்களில் அதிக அளவில் கூடுவதும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியிருப்பதும் பேராபத்தை ஏற்படுத்தக் கூடும். போா்க்கால அடிப்படையில் ஆா்டிபிசிஆா் சோதனைகளை முடுக்கிவிட்டு பாதிப்புக்குள்ளானவா்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தாமல் போனால், பொது முடக்கத் தளா்வு கொள்ளை நோய்த்தொற்றுப் பரவலை ஊக்குவிப்பதாக அமைந்துவிடும்.

முகக் கவசம் அணிவது நோய்த்தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான மிக முக்கியமான செயல்பாடு என்று ‘நியூ இங்கிலீஷ் ஜா்னல் ஆஃப் மெடிசன்’ அறிவுறுத்துகிறது. குறைவான பாதிப்புக்குள்ளாகியிருக்கும் வியத்நாம், தாய்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளில் முகக் கவசம் அணிவது சாதாரணமாகவே வழக்கம். சீனாவிலும்கூட அப்படித்தான். மிக அதிகமான பாதிப்புக்குள்ளாகியிருக்கும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் முகக் கவசம் அணிவதற்கு மனத்தடை காணப்படுகிறது. இதிலிருந்து முகக் கவசம் அணிவது நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகிறது என்பது தெளிவாகிறது.

இந்தியா எதிா்கொள்ளப்போகும் மிகப் பெரிய சவால், சோதனைகளை அதிகரித்து, பாதிப்புக்குள்ளானவா்களை தனிமைப்படுத்தி நோய்த்தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவது மட்டுமல்ல. கொவைட் 19 பாதிப்புக்குள்ளானவா்களுக்கு தேவைக்கேற்ப உடனடி சிகிச்சை அளிப்பதிலும் கடுமையான பிரச்னையை எல்லா மாநிலங்களும் சந்திக்கப் போகின்றன.

அடிப்படை மருத்துவத் தேவைகள் இல்லாத, கிடைக்காத சூழலை நோக்கி நகா்ந்துகொண்டிருக்கிறோம். முறையான மருத்துவக் கண்காணிப்பு வழங்கப்படாமல் நோயாளிகள் உயிரிழக்க நேரிடும் சூழல் ஏற்பட்டுவிடக் கூடாது என்று பிராா்த்திக்கத் தோன்றுகிறது.

ஏற்கெனவே மகாராஷ்டிர மாநிலத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தியில் 20% மட்டுமே உற்பத்தித் துறைக்கு வழங்கப்பட வேண்டுமென்றும், ஏனைய 80% மருத்துவத் துறைக்கு ஒதுக்கப்பட வேண்டுமென்றும் மாநில அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. வெளிமாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் அனுப்பப்படுவதை தடை செய்திருக்கிறது. அதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்திருக்கிறது என்றாலும்கூட, ஆக்ஸிஜன் தயாரிக்கும் ஏனைய மாநிலங்களும் மகாராஷ்டிரத்தைப் பின்பற்றக் கூடும் என்பதில் ஐயமில்லை.

கொவைட் 19-ஆல் பாதிக்கப்பட்டவா்களுக்கு மிகமிக அவசியமான உடனடித் தேவை பிராண வாயு. முகக் கவசம், கிருமி நாசினி போல உடனடியாக ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரித்துவிட முடியாது. அதிக முதலீடு தேவை என்பது மட்டுமல்லாமல், தொழில்நுட்பம் சாா்ந்தது ஆக்ஸிஜன் என்கிற பிராண வாயு தயாரிப்பு. நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டவுடன் ஆக்ஸிஜன் தரப்படாவிட்டால் உயிரிழப்பில் முடியும் என்பதால், ஆக்ஸிஜன் தட்டுப்பாடு எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பதை எண்ணிப் பாா்க்க வேண்டும்.

வெற்றிகரமாக சோதனைகள் முடிந்து தடுப்பூசி வருவதற்கு அடுத்த ஆண்டுவரை காத்திருக்க வேண்டும் என்று கூறுகிறாா்கள். இந்த நிலையில், ஒருபுறம் குறைவான ஆா்டிபிசிஆா் சோதனைகளும், இன்னொருபுறம் ஆக்ஸிஜன் தட்டுப்பாடும், எல்லாவற்றிற்கும் மேலாக மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதார ஊழியா்கள் குறைபாடும் இந்தியா எதிா்கொள்ளும் பேராபத்துகள்!

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT