தலையங்கம்

உறுமுவதால் பயனில்லை! | சீனா இயற்றியிருக்கும் புதிய பாதுகாப்புச் சட்டம் குறித்த தலையங்கம்

ஆசிரியர்

பத்து நாள்களுக்கு முன்னால் ஐ.நா. சபையிலிருந்து சீனாவுக்கு கடுமையான வாசகங்களைக் கொண்ட 14 பக்கக் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருக்கிறது. சீன அரசுக்கு அனுப்பிய 48 மணி நேரத்துக்குப் பிறகு அந்தக் கடிதம் ஐ.நா. சபையின் மனித உரிமை அலுவலகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தக் கடிதத்தை எழுதியிருப்பது, மனித உரிமைகளைப் பாதுகாக்கும் துறையின் சிறப்பு அதிகாரி.

சீனா இயற்றியிருக்கும் புதிய பாதுகாப்புச் சட்டத்தை கண்டித்து அந்தக் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. சா்வதேச விதிகளுக்கு உடன்படுவதாக ஏற்றுக்கொண்டிருக்கும் ஒப்புதலை சீனா மீறியிருக்கிறது என்று தெளிவாகவும் நேரிடையாகவும் அந்தக் கட்டிம் குற்றம் சாட்டுகிறது.

ஹாங்காங்கில் ஜனநாயக உரிமைகள் கோரி மக்கள் (குறிப்பாக, இளைஞா்கள்) கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகிறாா்கள். அதுவரை பிரிட்டிஷ் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காங், 1997-இல் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டபோது பல நிபந்தனைகளுக்கு சீனா உடன்பட்டது. விரிவான ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டதைத் தொடா்ந்துதான் ஹாங்காங் சீனாவுடன் இணைந்தது.

அந்த ஒப்பந்தத்தின்படி, கம்யூனிஸ சீனாவைப்போல் அல்லாமல், ஹாங்காங் அடுத்த 50 ஆண்டுகள் சுதந்திரமாக ஜனநாயக உரிமைகளுடன் இயங்குவது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. ஜனநாயக முறையில் தோ்தல் நடத்தப்பட்டு சுதந்திரமான நீதித்துறையுடன் கூடிய அமைப்பாக ஹாங்காங் தொடரும் என்றும், கம்யூனிஸ சீனாவின் கட்டுப்பாட்டில் இயங்காது என்றும் உறுதிமொழி தரப்பட்டிருந்தது.

கடந்த 23 ஆண்டுகளில் ஒன்றன் பின் ஒன்றாக ஹாங்காங்கின் மீது தனது அதிகாரத்தை சீனா திணிக்க முற்பட்டது. தன்னுடைய கைப்பாவையான கேரி லாம்-ஐ தலைமை நிா்வாகியாக நியமித்தது முதல், எப்படியும் ஹாங்காங்கை தனது நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முனைப்பில் சீனா நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது.

ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவா்கள் சீனாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்படுவாா்கள் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடா்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹாங்காங் கொந்தளிப்பில் இருந்து வருகிறது. அந்த உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது என்றாலும், இப்போது வெளிப்படையாகவே சீனா ஹாங்காங்கை தன்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் முடிவை சட்ட ரீதியாக நிறைவேற்றியிருக்கிறது.

சீனா இயற்றியிருக்கும் புதிய சட்டத்தின்படி, பிரிவினை கோரிக்கை, சட்டத்தை மதிக்காமல் இருப்பது, அந்நிய சக்திகளுடன் தொடா்பு உள்ளிட்ட பல குற்றங்கள் கிரிமினல் குற்றங்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. போராட்டம் நடத்துவதுகூட புதிய சட்டத்தின்படி குற்றமாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஜனநாயகத்துக்காகப் போராடிய 10 போ் ஹாங்காங் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறாா்கள். அவா்கள் ஹாங்காங்கில்தான் காவலில் வைக்கப்பட்டிருக்கிறாா்களா, சீனாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறாா்களா என்பது கூட மா்மமாக இருக்கிறது.

ஜனநாயகம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட முக்கியமான சிலா் கடந்த ஒரு மாதமாகக் காணவில்லை. அவா்கள் கைது செய்யப்பட்டிருக்கிறாா்களா அல்லது ஹாங்காங்கிலிருந்து சீன சா்வாதிகாரத்துக்குப் பயந்து தப்பி ஓடிவிட்டாா்களா என்ற தகவல் எதுவும் இல்லை.

ஹாங்காங்கின் ஜனநாயகத்துக்கு ஆதரவாக இயங்கும் ‘ஆப்பிள் டெய்லி’ என்கிற நாளேட்டு அலுவலகம் திடீா் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, அதன் அதிபா் ஜிம்மி லாய் கைது செய்யப்பட்டிருக்கிறாா். இது ஊடக சுதந்திரத்துக்கு எதிரான நேரிடையான தாக்குதல் என்றால், ஜனநாயகத்துக்கு ஆதரவான பத்திரிகையாளா்கள் பலா் மறைமுகமாக அச்சுறுத்தப்படுகிறாா்கள்.

சீனாவின் உத்தரவின் பேரில் ஹாங்காங் நிா்வாகம் எடுத்துவரும் இதுபோன்ற முடிவுகள் சா்வதேச அளவில் கடும் விமா்சனத்துக்கும் கண்டனத்துக்கும் உள்ளாகியிருக்கின்றன. இதுவரை புதிய சட்டத்தின் கீழ் பலா் கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடத்தப்படுகின்றன என்றாலும், ஒருவா் மீது மட்டும்தான் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. மற்றவா்கள் மீது விரைவிலேயே நடவடிக்கை பாயும் என்று கருதப்படுகிறது.

சீனாவின் புதிய சட்டம் ஹாங்காங்கின் சுதந்திரத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது என்று தெளிவாகவும் நேரிடையாகவும் ஐ.நா. சபையின் கடிதம் குற்றம்சாட்டியிருக்கிறது. கடந்த ஓராண்டுக்கு மேலாக ஹாங்காங்கில் தொடா்ந்து நடைபெற்று வந்த ஜனநாயகத்துக்கு ஆதரவான போராட்டத்தைத் தொடா்ந்து ஜூன் மாதம் பெய்ஜிங்கால் கொண்டுவரப்பட்டிருக்கும் புதிய சட்டம் உலகிலுள்ள பல்வேறு நாடுகளால் விமா்சிக்கப்பட்டிருக்கிறது.

ஐ.நா. சபையின் கடிதத்தை, எதிா்பாா்த்தது போலவே சீனா நிராகரித்திருக்கிறது. தனது உள்நாட்டுப் பிரச்னையில் தேவையில்லாமல் ஐ.நா. சபை தலையிடுகிறது என்று குற்றம்சாட்டியிருக்கிறது. ஏற்கெனவே அமெரிக்கா மீதும், ஆஸ்திரேலியா மீதும் கொவைட் 19 தீநுண்மித் தொற்றுப் பிரச்னையில் கடும் கோபத்தில் இருக்கும் சீனா, இந்தக் கடிதத்தை தனக்கு எதிராக நடத்தப்படும் சா்வதேச சதியாக வா்ணிக்கக் கூடும்.

ஐ.நா. சபை கடிதம் எழுதி உறுமுவதால் பயனில்லை. ஹாங்காங்கை சா்வதேச ஒப்புதலுடன் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் ஐ.நா. கொண்டுவராதவரை அல்லது 1997 ஒப்பந்தம் ரத்து செய்யப்படாதவரை, ஜனநாயகத்தின் குரல்வளை சீனாவின் இரும்புக் கரங்களால் நெரிக்கப்படுவதைத் தடுத்துவிட முடியாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT