தலையங்கம்

தொடங்கியது தேர்தல் பருவம்! | பிகார் தேர்தல் எதிர்பார்ப்பு குறித்த தலையங்கம்

ஆசிரியர்

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மூன்று கட்டத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்திருக்கிறது. பரபரப்பான தேர்தல் என்பதால், விறுவிறுப்பான வாக்குப்பதிவு காணப்படும் என்கிற எதிர்பார்ப்பு பொய்த்திருக்கிறது. 54% அளவில்தான் வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. இது மாற்றத்தின் அறிகுறியாகவும் தெரியவில்லை, ஆதரவு அலை இருப்பதையும் உறுதிப்படுத்தவில்லை. 

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் மீது அனைவரின் கவனமும் குவிந்திருக்கிறது என்றாலும்கூட, பல்வேறு மாநிலங்களில் நடக்கவிருக்கும் இடைத் தேர்தல்களையும் இணைத்துப் பார்க்கும்போது இதை தேசிய அளவிலான கருத்துக் கணிப்பாகக்கூட எடுத்துக்கொள்ளலாம். 11 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தலும், 11 மாநிலங்களில் நடைபெற இருக்கும் 56 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களும் இந்தச் சுற்று தேர்தலின் முக்கியத்துவத்தை அதிகரிக்கின்றன. 

மாநிலங்களவைக்கான தேர்தல் நவம்பர் 9-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. நவம்பர் 3-ஆம் தேதி 54 சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத் தேர்தலும், நவம்பர் 7-ஆம் தேதி மணிப்பூரிலுள்ள இரண்டு சட்டப்பேரவை தொகுதிக்கான தேர்தலும் நடைபெற இருக்கின்றன. 

இந்த இடைத் தேர்தல்கள், ஏனைய கட்சிகளைவிட மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக-வுக்கு மிகவும் முக்கியம் வாய்ந்தவை. இன்னும் பெரும்பான்மை பெறாத மாநிலங்களவையில் பாஜகவின் பலம் அதிகரிப்பதற்கும், மத்திய பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பாஜக அரசுக்கு மேலும் வலு சேர்ப்பதற்கும் இந்தத் தேர்தல்கள் வழிகோலக்கூடும். 

தற்போதைய நிலையில், மாநிலங்களவையின் 245 உறுப்பினர்களில் பாஜக 86 உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருக்கிறது. நடைபெற இருக்கும் 11 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில் உத்தர பிரதேசத்திலிருந்து 10 இடங்களும், உத்தரகண்டிலிருந்து ஒரு இடமும் நிரப்பப்பட இருக்கின்றன. அந்த இரு மாநிலங்களுமே பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள். உத்தர பிரதேசத்திலிருந்து  எட்டு இடங்கள், உத்தரகண்டிலிருந்து ஒரு இடம் என்று பாஜக ஒன்பது இடங்களைக் கைப்பற்றும் என்றாலும்கூட, மாநிலங்களவையில் பெரும்பான்மை பலம் கொண்ட கட்சியாக மாற வாய்ப்பில்லை. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன்தான், கடுமையான எதிர்ப்பை சமாளித்து மாநிலங்களவையில் மசோதாக்களை நிறைவேற்ற வேண்டும் என்கிற நிலைமை தொடரும்.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல், கடந்த 30 ஆண்டுகளில் நடந்த தேர்தல்களிலிருந்து வித்தியாசப்படுகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பிகார் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பை பாஜக எதிர்பார்க்கிறது என்றால், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வாய்ப்பாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையிலான மகா கூட்டணி கருதுகிறது. லாலு பிரசாத் யாதவ் - நிதீஷ் குமார் - ராம்விலாஸ் பாஸ்வான் என்கிற மூவர் அணியின் ஆதிக்கம் முடிந்து  ஒரு மாற்று அரசியலுக்கான காலம் பிகாரில் ஏற்படுவதற்கான வாய்ப்பும் தெரிகிறது.

நிதீஷ் குமார் நான்காவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றுவாரா, மாட்டாரா என்பதல்ல பிகார் தேர்தல் முடிவுகளின் எதிர்பார்ப்பு. லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி பிரசாத் யாதவின் தலைமையும், ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வானின் தலைமையும் எந்த அளவுக்கு வலிமையாக இருக்கப் போகின்றன என்பதை தெளிவுபடுத்துவதாக தேர்தல் முடிவுகள் இருக்கும். 

இரண்டு வாரங்களுக்கு முன்பு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு காணப்பட்ட முன்னணி நிலவரம், இப்போது இல்லை. வருங்கால பிகார் அரசியல் பாஜக-வையும், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தையும் சுற்றி அமைவதற்கான வாய்ப்பு தென்படுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று நிதீஷ் குமாரே முதல்வரானாலும்கூட, அதன் பெருமை பாஜக-வைதான் சேரும். ஒருவேளை ஆளும் கூட்டணி தோல்வியைத் தழுவினால், அதற்கான பழியை நிதீஷ் குமார்தான் சுமக்க நேரிடும். 

இடைத் தேர்தல்கள் நடக்கும் 56 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மிகவும் கூர்ந்து கவனிக்கப்படுவது மத்திய பிரதேசத்தின் 28 இடங்கள். ஜோதிராதித்ய சிந்தியாவுடன் காங்கிரஸில் இருந்து விலகிய காங்கிரஸ் உறுப்பினர்களின் பதவி விலகலால், 22 இடங்களுக்கான இடைத் தேர்தல் நடைபெறுகிறது. 

230 உறுப்பினர்களைக் கொண்ட மத்திய பிரதேச சட்டப்பேரவையில் பாஜக-வுக்கு 107 உறுப்பினர்கள்தான் இருக்கிறார்கள். பெரும்பான்மை பெற மேலும் 9 இடங்கள் தேவைப்படுகின்றன. காங்கிரஸýக்கு 88 இடங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இடைத் தேர்தல் நடைபெறும் அத்தனை இடங்களையும் வென்றால் மட்டுமே பெரும்பான்மை பெற முடியும்.

குஜராத்தில் 2017 தேர்தலில் 182 இடங்களைக் கொண்ட சட்டப்பேரவையில், காங்கிரஸ் 77 இடங்களையும், பாஜக 99 இடங்களையும் வென்றன. 8 காங்கிரஸ் உறுப்பினர்கள் பதவி விலகி இருக்கிறார்கள். இடைத் தேர்தல் வெற்றி பாஜகவுக்கு வலிமையைக் கூட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

உத்தர பிரதேசத்தில் 7; ஜார்க்கண்ட், நாகாலாந்து, ஒடிஸô, மணிப்பூர், கர்நாடக மாநிலங்களில் தலா 2; தெலங்கானா, சத்தீஸ்கர், ஹரியாணா மாநிலங்களில் தலா 1 என்று சட்டப்பேரவைக்கான இடைத் தேர்தல்கள் நடைபெறுகின்றன. சட்டப்பேரவை இடைத் தேர்தல்களும், மாநிலங்களவைக்கான தேர்தலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடாது. அதனால் பிகார் கூர்ந்து கவனிக்கப்படுகிறது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT