தலையங்கம்

தடுப்பூசி அரசியல்! l அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி விவகாரம் குறித்த தலையங்கம்

ஆசிரியர்

தேவையற்ற ஒரு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசும்போது, பிகாரிலுள்ள அனைவருக்கும் இலவசமாக கொவைட் 19 கொள்ளை நோய்க்கான தடுப்பூசி வழங்கப்படும் என்று அவர் அறிவித்திருப்பது விவாதப் பொருளாகி இருப்பதில் வியப்பொன்றுமில்லை. 

தேர்தல் அறிக்கையில் இந்த வாக்குறுதி இணைக்கப்பட்டிருந்தாலோ, பாஜக-வின் மாநிலத் தலைமை அறிவித்திருந்தாலோ விவாதம் எழுந்திருக்காது. இந்தியாவின் நிதியமைச்சர் அறிவித்திருப்பதால், குறிப்பிட்ட ஒரு மாநிலத்துக்கு தனிச்சலுகை வழங்கும் முயற்சியாகவும், மத்திய அரசின் அதிகாரத்தை சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுப்பப்படுவதில் நியாயம் இருக்கிறது.

நிதியமைச்சரின் பிகாருக்கான அறிவிப்பைத் தொடர்ந்து தமிழக, கர்நாடக, மத்திய பிரதேச மாநில முதல்வர்களும் கொவைட் 19-க்கான இலவச தடுப்பூசி வாக்குறுதியை வழங்க முற்பட்டிருக்கின்றனர். ஏனைய மாநிலங்களும், அரசியல் கட்சிகளும் பின்தங்கிவிடாமல் தங்கள் பங்குக்கு இலவச தடுப்பூசி வாக்குறுதியை வழங்கக் கூடும். எப்படியிருந்தாலும் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டாக வேண்டும் என்கிற நிலையில், அதை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அரசியலாக்க முற்பட்டிருப்பது தவறு.

நிதியமைச்சரின் பொறுப்பின்மைக்கு மாறாக, பிரதமர் நரேந்திர மோடி மிகவும் தெளிவாக கொவைட் 19 தடுப்பூசித் திட்டம் குறித்த தனது தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்தியிருக்கிறார். தேசிய அளவிலான திட்டம் வகுக்கப்பட்டு தடுப்பூசியை முறையாகவும், அனைவருக்கும் கிடைக்கும் விதத்திலும் வழங்கும் செயல்திட்டத்துக்கான ஆலோசனையை முன்மொழிந்திருக்கிறார் அவர். மக்களவைத் தேர்தலின்போதும், தேசியப் பேரிடர்களின் போதும் செயல்படுவதுபோல தடுப்பூசித் திட்டமும் செயல்படுத்தப்பட வேண்டும் என்பது பிரதமர் மோடியின் கருத்து.

மக்களவைத் தேர்தலின்போது நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, ஒரு சில வார இடைவெளியில் வாக்காளர்கள் தங்களது வாக்கைப் பதிவு செய்ய வழிகோலும் தேர்தல் வழிமுறையைப் பின்பற்றி கொவைட் 19-க்கான தடுப்பூசி திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து இப்போதே திட்டமிட வேண்டும் என்பது பிரதமர் முன்மொழிந்திருக்கும் ஆலோசனை. மக்களவைத் தேர்தலில் 90 கோடி வாக்காளர்கள் ஒருசில வாரங்களில் வாக்களிக்க முடியுமானால், அனைவருக்கும் தடுப்பூசி என்பதும் சாத்தியம்தான் என்கிற பிரதமரின் ஆக்கபூர்வமான பார்வையையும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் தேர்தல் கண்ணோட்ட அரசியல் பார்வையையும் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

இப்போதைய நிலையில் சோதனைகள் முடிந்து தடுப்பூசி எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. எப்போது தடுப்பூசி தயாரிப்பு நிலைக்கு வரும் என்பதோ, உற்பத்தி தொடங்கும் என்பதோ தெரியாது. அப்படியே உற்பத்தி தொடங்கினாலும் பல நூறு கோடி தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு, உலகம் முழுவதும் எல்லா பகுதிகளுக்கும் சென்றடைவது எப்போது என்பதும் யாருக்கும் தெரியாது. 

தடுப்பூசி சந்தைப்படுத்தப்பட்டாலும், அதன் விலை என்னவாக இருக்கும் என்பது தெரியாது. கொவைட் 19 போன்ற கொள்ளை நோய்க்கான தடுப்பூசி தேசிய அளவில் வழங்கப்படுமா அல்லது சுகாதாரம் மாநிலப் பட்டியலில் இருப்பதால் தடுப்பூசி போடும் திட்டம் மாநில அரசுகளிடம் விடப்படுமா என்பதிலும் தெளிவில்லை. அப்படி மாநிலங்கள் பொறுப்பில் விடப்பட்டால், இன்றைய பொருளாதார நிலையில் எத்தனை மாநிலங்களால் இலவசமாக அனைவருக்கும் தடுப்பூசி வழங்கிவிட முடியும் என்கிற கேள்வியும் எழுகிறது.

மிகக் குறைந்த கால அவகாசத்தில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டால்தான் கொள்ளை நோய்ப் பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பதுதான் தடுப்பூசித் திட்டத்தின் நோக்கமாக இருக்க முடியும். குறைந்தது 65% முதல் 70% மக்கள்தொகையினருக்கு தடுப்பூசி போடப்பட்டால் மட்டுமே, கொள்ளை நோய்த்தொற்றின் பரவல் தடுக்கப்படும். 

குறைந்த அளவு மக்களுக்கு தடுப்பூசி போடுவது மிகப் பெரிய ஆபத்தில் முடியும். அப்படி தடுப்பூசி போடப்பட்டவர்கள், தடுப்பூசி போடப்படாதவர்களின் நோய்த்தொற்றை எதிர்கொள்ளும்போது, தடுப்பூசியின் வீரியம் குறைந்து, அந்தத் தீநுண்மி தடுப்பூசிக்கான எதிர்ப்பு சக்தியை பெற்றுவிடும் அபாயம் இருக்கிறது. 

தடுப்பூசித் திட்டம் என்பது தனிநபர் பாதுகாப்பாக அல்லாமல் சமுகத்தைப் பாதுகாப்பதாக அமைந்தால்தான் அதன் வீரியம் பாதுகாக்கப்படும். கடந்த ஓர் ஆண்டில் 300 தடவைக்கு மேல் கொவைட் 19 தீநுண்மி பல வடிவங்களை எடுத்திருக்கிறது. அதனால் தீநுண்மி முற்றிலுமாக அழிக்கப்பட்டால் மட்டுமே, ஓர் ஆண்டாக பல விஞ்ஞானிகள் பசி, உறக்கம் இல்லாமல் கண்டுபிடித்த தடுப்பூசிக்கு பயன் இருக்கும்.

தேர்தலில் இலவச வாக்குறுதிகளை வழங்குவது புதிதொன்றுமல்ல. தொலைக்காட்சிப் பெட்டியை இலவசமாக வழங்கித் தவறான முன்னுதாரணத்தை தமிழகத்தில் திமுக உருவாக்கியது முதல், இலவச வாக்குறுதிகள் இன்றியமையாதவையாகி விட்டன. பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் "சிறப்பு அந்தஸ்து' வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படாமல் இருப்பதுபோல, எத்தனையோ வாக்குறுதிகள் தேர்தலுக்குப் பிறகு மறக்கப்படுகின்றன. வாக்குறுதி அளித்தாலும் அளிக்காமல் போனாலும், அனைவருக்கும் கொவைட் 19 தடுப்பூசி என்பது தவிர்க்க இயலாத நிர்பந்தம்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT