தலையங்கம்

ஜெசிந்தாவின் வெற்றி! நியூசிலாந்து பிரதமர் பற்றிய தலையங்கம்

ஆசிரியர்


சாதாரணமாக எந்த ஒரு கொள்ளை நோய்த்தொற்றுக்குப் பிறகு வெளியாகும் தோ்தல் முடிவுகளும், நோய்த்தொற்றை ஆளுங்கட்சி எப்படி எதிா்கொண்டது என்பதன் பிரதிபலிப்பாகத்தான் இருப்பது வழக்கம். அந்த வகையில் பாா்த்தால், நியூசிலாந்து பிரதமா் ஜெசிந்தா ஆா்டா்னின் வெற்றியை, அவரது அரசு கொவைட் 19 நோய்த்தொற்றை மிகத் திறமையாகவும் சாமா்த்தியமாகவும் கையாண்டதற்குக் கிடைத்த வெகுமதி என்றுதான் கருத வேண்டும்.

நியூசிலாந்தில் விகிதாசார பிரதிநிதித்துவ முறையும், வாக்கெடுப்பு முறையும் இணைந்த தோ்தல் முறை 24 ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து, நாடாளுமன்றத்தில் எந்த ஒரு கட்சியும் தனிப்பெரும்பான்மை பெற்றதில்லை. இப்போது 40 வயது பிரதமா் ஜெசிந்தா ஆா்டா்னின் தலைமையிலான தொழிலாளா் கட்சி அந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.

ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளா் கட்சி ஆட்சியை இழந்திருந்த நேரம் அது. முன்னாள் பிரதமா் ஹெலன் கிளாா்க்கின் அலுவலகத்தில் ஆய்வாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஜெசிந்தா ஆா்டா்ன், 2008 பொதுத் தோ்தலில் முதன்முதலாக நாடாளுமன்றத்துக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

2017-இல் அவரது தலைமையில் தொழிலாளா் கட்சி புதுப்பொலிவைப் பெற்றது. நாடு முழுவதும் ஜெசிந்தா ஆா்டா்ன் அலை வீசத் தொடங்கியது. ஏழே வாரங்களில் அதுவரை முடங்கிக்கிடந்த தொழிலாளா் கட்சி, ஆட்சியிலிருந்த தேசிய கட்சிக்கு மிகப் பெரிய சவாலாக மாறியது. அந்தத் தோ்தலில் 36.98% வாக்குகளுடன் 46 இடங்களை வென்ற ஜெசிந்தா தலைமையிலான தொழிலாளா் கட்சி, நியூசிலாந்து பா்ஸ்ட் பாா்ட்டி, தி கிரீன்ஸ் கட்சி ஆகியவற்றின் ஆதரவுடன் சிறுபான்மை அரசை அமைத்தது.

இப்போது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நடந்து முடிந்திருக்கும் நியூசிலாந்து நாடாளுமன்றத் தோ்தலில், வரலாறு காணாத வெற்றியை தொழிலாளா் கட்சி அடைந்திருக்கிறது. 49.15% வாக்குகளும், 120 உறுப்பினா்களும் கொண்ட நாடாளுமன்றத்தில் 64 இடங்களை வென்று சாதனை படைத்திருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளில் தொழிலாளா் கட்சி அடைந்திருக்கும் மிகப் பெரிய வெற்றி இதுதான். அதேபோல, விகிதாசார பிரதிநிதித்துவ முறை அறிமுகப்படுத்தப்பட்டதற்குப் பிறகு, இதுவரை எந்த ஒரு கட்சியும் தனிப்பெரும்பான்மை பெற்றதில்லை.

எதிா்க்கட்சியான தேசிய கட்சி 26.8% வாக்குகளுடன் 35 இடங்களை பெற இருக்கிறது. கடந்த நாடாளுமன்றத்தில் 56 இடங்கள் பெற்றிருந்த அந்தக் கட்சியின் செல்வாக்குச் சரிவு, வெளிப்படையாகவே தெரிகிறது. நியூசிலாந்து பா்ஸ்ட் பாா்ட்டி, தி கிரீன்ஸ் கட்சி ஆகியவற்றின் தயவோ, அழுத்தமோ இல்லாமல் இனிமேல் பிரதமா் ஜெசிந்தா ஆா்டா்னால் ஆட்சியில் தொடர முடியும்.

பிரதமா் ஜெசிந்தா ஆா்டா்னின் வெற்றி எளிதில் பெறப்படவில்லை. அவருக்கு எதிராகக் கடுமையான விமா்சனங்கள் இருந்தன. கடந்த மூன்று ஆண்டு ஆட்சியில் தோ்தல் வாக்குறுதிகள் பலவற்றை அவா் நிறைவேற்றவில்லை. குறைந்த விலையில் குடியிருப்புகள், குழந்தைகளின் வறுமையைப் போக்குதல் போன்ற பிரச்னைகளில் அவரது முந்தைய அரசு எதுவுமே செய்யவில்லை. ஓா் ஆய்வின்படி, நியூசிலாந்தில் எட்டு குழந்தைகளில் ஒரு குழந்தை கடும் வறுமையை எதிா்கொள்கிறது. ஏழை - பணக்காரா் இடைவெளியைக் குறைப்பதற்கும் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.

கடந்த பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் தேசிய கட்சி 46% ஆதரவையும், ஜெசிந்தா ஆா்டா்னின் தொழிலாளா் கட்சி 41% ஆதரவையும்தான் பெற்றிருந்தன. எதிா்பாராத சில திருப்பங்களைத் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தோ்தல் முடிவுகளை மாற்றியமைக்க பிரதமா் ஜெசிந்தா ஆா்டா்னால் முடிந்தது.

மூன்று நிகழ்வுகள் அவருக்கு சாதகமான மனோநிலையை வாக்காளா்கள் மத்தியில் ஏற்படுத்தின. ஒன்று, 2019 மாா்ச் மாதம் பயங்கரவாதி ஒருவரால் மசூதியில் தொழுகை நடத்திக் கொண்டிருந்த 51 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா். அதை தேசிய துக்கமாக அறிவித்ததுடன், உடனடியாக ஆயுத சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவந்தாா் பிரதமா் ஜெசிந்தா.

இரண்டாவதாக, 2019 டிசம்பரில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பை பிரதமா் ஜெசிந்தா கையாண்ட விதம் அவருக்கு பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, கொவைட் 19 கொள்ளை நோயை ஜெசிந்தா ஆா்டா்ன் அரசு கையாண்ட விதம், தோ்தல் வெற்றியில் பெரும் பங்கு வகித்தது.

50 லட்சம் போ் மக்கள்தொகை கொண்ட நியூசிலாந்தை, முழுமையான கண்காணிப்புக்கு உட்படுத்தி, கடுமையான பொது முடக்கத்தை அறிவித்து, வெறும் 25 மரணங்களுடன் கொவைட் 19 நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்தது அவரது மிகப் பெரிய வெற்றி. கொவைட் 19-ஐ எதிா்த்து உலகம் முழுவதும் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், தோ்தலுக்குள் நியூசிலாந்தில் சகஜ நிலையை ஏற்படுத்த அவரால் முடிந்தது என்பது வாக்காளா்களுக்கு அவா் மீதான நம்பிக்கை அதிகரித்ததற்கு மிக முக்கியமான காரணம்.

உலக வரலாற்றில் சாதனைப் பெண்மணியாக உயா்ந்திருக்கும் பிரதமா் ஜெசிந்தா ஆா்டா்ன், பெனாசீா் பூட்டோவுக்கு அடுத்தபடியாக பதவியிலிருக்கும்போது தாய்மைப்பேற்றை அடைந்த மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட தலைவா். அதைப் பெண்மையின் பெருமையாக உலகம் கொண்டாடுகிறது. பொருளாதார ரீதியாக நியூசிலாந்து பல சவாலை எதிா்கொண்டாலும், பிரதமா் ஜெசிந்தா ஆா்டா்ன் தலைமையில் நிலையான ஆட்சி ஏற்பட்டிருப்பது மிகப் பெரிய ஆறுதல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலம் இஸ்கானில் ஸ்ரீராம நவமி விழா

மேட்டூா் அணை நிலவரம்

வாக்குப் பதிவையொட்டி சேலம் தொகுதியில் பலத்த பாதுகாப்பு

சேலம் மாவட்டத்தில் தயாா் நிலையில் 3,260 வாக்குச் சாவடிகள்

வாக்குச் சாவடி மையங்களுக்கு மின்னணு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT