தலையங்கம்

சீனாவுக்கு விடுக்கும் எச்சரிக்கை! | கூட்டு கடற்படைப் பயிற்சி பற்றிய தலையங்கம்

ஆசிரியர்

அடுத்த மாதம் நடக்கவிருக்கும் மலபார் கூட்டு கடற்படைப் பயிற்சிகளில் பங்குபெற ஆஸ்திரேலியாவையும் அழைத்திருப்பது மிகவும் புத்திசாலித்தனமான ராஜதந்திர முடிவு. வலிமையான ராணுவ பலத்தை காட்டுவதன் மூலம்தான் சீனாவின் அத்துமீறல்களையும் அதிகாரப் போக்கையும் கட்டுக்குள் கொண்டுவர முடியும். அதை நன்றாக உணர்ந்த இந்தியா, "க்வாட்' அணிக்கு வலுசேர்க்கும் விதத்தில் மலபார் கூட்டு கடற்படைப் பயிற்சிகளை நடத்த முற்பட்டிருக்கிறது. 

"க்வாட்' என்கிற அமைப்பின் கீழ் இயங்கும் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளும் இணைந்து வங்கக் கடலிலும், அரபிக் கடலிலும் கூட்டு கடற்படைப் பயிற்சிகளை அடுத்த மாதம் நடத்த இருக்கின்றன. இந்தப் பயிற்சியில்  கடற்படைத் தாக்குதல்களை மேற்கொள்வது, எதிர்கொள்வது மட்டுமல்லாமல், நீர்மூழ்கிக் கப்பல்களை எதிர்கொள்ளும் போர் முறைகளையும் நான்கு நாடுகளின் கடற்படைகளும் இணைந்து அவரவருக்குத் தெரிந்த உத்திகளை பரிமாறிக்கொண்டு பயிற்சிகளை நடத்தும். போர்ச் சூழல் ஏற்படும்போது நான்கு நாடுகளின் கடற்படைகளும் இணைந்து செயல்படுவதற்கான முன்னோட்டமாகவும், பயிற்சியாகவும் அது அமையும். 

மலபார் கூட்டு கடற்படைப் பயிற்சி என்பது இந்திய - அமெரிக்கக் கடற்படைகளுக்கு இடையே 1992 முதல் நடந்து வருகிறது. சீனாவின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தியா ஏனைய நாடுகளை இந்தப் பயிற்சியில் இணைத்துக் கொள்வதில் தயக்கம் காட்டி வந்தது. தற்போது இந்தியாவின் உணர்வுகளையும் இறையாண்மையையும் மதிக்காமல் லடாக் பகுதியில் ஏப்ரல் மாதம் சீனா எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை மீறியதைத் தொடர்ந்து, தனது தயக்கத்தைக் கைவிட்டு கடற்படையை பலப்படுத்திக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கிறது.

கடந்த முறை மலபார் கூட்டு கடற்படைப் பயிற்சிகள் 2007-இல் நடந்தபோது இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூருடன் ஆஸ்திரேலியாவும் கலந்து கொண்டது. அப்போது அது மிகப் பெரிய விமர்சனத்துக்கு உள்ளாகி சர்ச்சையைக் கிளப்பியது. சீனா அதைக் கடுமையாகக் கண்டித்து "ஆசியாவின் நாட்டோ' என்று வர்ணித்தது.

சீனாவின் எதிர்ப்பும், கண்டனமும் இந்தியாவிலும் எதிரொலித்தன. அப்போது ஆட்சியில் இருந்த டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி, இடதுசாரி கட்சிகளின் தயவில் இருந்தது. இந்தியாவை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிமையாக்கும் முயற்சி என்று வர்ணித்த கம்யூனிஸ்ட் கட்சிகள், அமெரிக்காவுடனான கூட்டு கடற்படைப் பயிற்சியை நிறுத்தும்படி வற்புறுத்தின. வேறு வழியில்லாமல் காங்கிரஸ் தலைமையும் அதற்கு உடன்பட்டு, பல நாடுகள் இணைந்து நடத்தும் கூட்டு கடற்படைப் பயிற்சிக்கு விடை கொடுத்தது. 

இந்தக் கொள்கை முடிவு நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்த  2014 வரை தொடர்ந்தது. 2015-இல் மோடி அரசு, மலபார் கூட்டு கடற்படைப் பயிற்சியில் ஜப்பானை இணைத்துக் கொண்டது. இப்போது அடுத்த கட்டமாக ஆஸ்திரேலியாவையும் இணைத்துக் கொள்கிறது.
"க்வாட்' கூட்டமைப்பிலுள்ள நான்கு நாடுகளும் ராணுவ ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சீனாவின் ஆக்கிரமிப்பு மனோபாவத்திற்கு எதிராகக் கூட்டணி அமைத்திருக்கின்றன. இந்த மாதக் கடைசியில் தில்லியில் நடக்க இருக்கும் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான இரு நாட்டுப் பாதுகாப்பு, வெளியுறவுத் துறை அமைச்சர்களின் கூட்டத்தில் அடிப்படை பரிமாற்றமும் கூட்டுறவு ஒப்பந்தமும் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பேயோவும் பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்தரும் வர இருக்கிறார்கள். அந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவின் கண்காணிப்பு நுண்ணறிவு மட்டுமல்லாமல், ஏவுகணைகள், டிரோன்கள் போன்றவற்றை இயக்கும் திறனையும் இந்தியா பெற இருக்கிறது.

ஆஸ்திரேலியாவை அழைப்பது என்கிற இந்தியாவின் முடிவுக்கு எதிர்பார்த்தது போலவே சீனா அதிருப்தியை  வெளிப்படுத்தியிருக்கிறது. 2018-இல் கூட்டு கடற்படைப் பயிற்சியின்போதே அதை கேலி செய்த சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் லீ, இப்போதைய "க்வாட்' கூட்டமைப்பின் முடிவை, வெறும் "கடல் நுரை' என்று வர்ணித்து கேலி பேசி இருக்கிறார். வெளிப்படையாக கூட்டு கடற்படைப் பயிற்சியை எள்ளி நகையாடினாலும், இந்த முயற்சி மிகப் பெரிய அச்சுறுத்தல் என்பதை சீனா உணராமல் இருக்காது. 

சீனாவின் கடற்கரை எல்லைகளில் பல நாடுகள் இருக்கின்றன. அவை சீனாவுடன் சுமுகமான உறவில் இல்லை. அது மட்டுமல்லாமல், மலபார் கடல் எல்லை என்பது அந்தமான் -நிகோபார் தீவுகளையும் உள்ளடக்கியது. சீனாவுக்கு மேற்கிலிருந்து வரும் கப்பல்கள், அந்தமானைக் கடந்து மலேசியாவுக்கும் இந்தோனேஷியாவுக்கும் இடையேயான மலக்கா நீரிணை வழியாகத்தான் சென்றாக வேண்டும். மலக்கா நீரிணை முடக்கப்பட்டால், சீனாவின் ஏற்றுமதி - இறக்குமதி மட்டுமல்ல எரிசக்தித் தேவையும் கடுமையாக பாதிக்கப்படும். அதனால், "க்வாட்' நாடுகளின் கூட்டு கடற்படைப் பயிற்சி சீனாவுக்கு இந்தியாவால் விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை.

பேச்சுவார்த்தைகளையும், சமாதான சமிக்ஞைகளையும், நல்லுணர்வுகளையும் சீனா புரிந்து கொள்ளாது; ஆனால், படை பலத்துக்கு பயப்படும் என்பதை உணர்ந்து இந்திய அரசு எடுத்திருக்கும் ராஜதந்திர முடிவு மலபார் கூட்டு கடற்படைப் பயிற்சியில் ஆஸ்திரேலியாவையும் இணைத்துக் கொண்டிருப்பது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக கூட்டணி ஆட்சியில் புதுவையை வளமாக்கும் திட்டங்கள் -ஜி.கே.வாசன்

தோ்தல் பாா்வையாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

வாகன சோதனையில் ரூ.1.10 லட்சம் பறிமுதல்

கள்ளக்குறிச்சி தொகுதியில் 21 வேட்பு மனுக்கள் ஏற்பு -16 மனுக்கள் தள்ளுபடி

100% வாக்களிப்பு: மாற்றுத்திறனாளிகள் விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT