தலையங்கம்

தவறு தவறுதான்! | தலைமைக் கணக்குத் தணிக்கை ஆணையம் குறித்த தலையங்கம்

ஆசிரியர்

 தலைமைக் கணக்குத் தணிக்கை ஆணையம் என்பது, அரசின் வரவு - செலவுகள் அமைச்சகங்களால் முறையாகக் கையாளப்படுகின்றனவா என்பதை சரிபார்க்கும் அரசியல் சாசன அமைப்பு. கணக்குத் தணிக்கை ஆணையத்தின் அறிக்கைகளைப் புறந்தள்ளிவிட முடியாது. கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையின் விளைவாகத்தான் 2ஜி உள்ளிட்ட பல முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன.
 இந்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் சமீபத்திய அறிக்கை மத்திய நிதியமைச்சகத்தின் சில செயல்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. அரசின் வருவாயை வழக்கமான வழியில் அதிகரிக்காமல், கூட்டு வரிகள் மூலம் வருவாய் ஈட்டுவதும் அப்படி ஈட்டப்பட்ட வருவாயை, தவறான வழியில் ஒதுக்கீடு செய்வதும் கணக்குத் தணிக்கை அறிக்கையின் மூலம் வெளிப்பட்டிருக்கின்றன. இதனால் மாநில அரசுகளின் நிதியாதாரம் பாதிக்கப்படும் என்பது தெரிந்தும் நிதியமைச்சர் இந்த வழிமுறையைக் கையாண்டிருப்பது கணக்குத் தணிக்கை அறிக்கையின் கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
 ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, மாநிலங்களின் நேரடி வரி வருவாய் கடுமையாகக் குறைந்து விட்டது. ஜிஎஸ்டி மூலம் கிடைக்கும் ஒதுக்கீட்டை நம்பித்தான் மாநிலங்கள் தங்கள் வரவு - செலவையும், புதிய திட்டங்களையும் நடத்த வேண்டும். ஜிஎஸ்டி மூலம் நேரடியாகக் கிடைக்கும் வரி வருவாயில் 41%-ஐ மாநிலங்களுடன் மத்திய அரசு பகிர்ந்துகொள்ள கடமைப்பட்டிருக்கிறது. ஆனால், கூடுதல் வரிகள் மூலம் கிடைக்கும் வரி வருவாயைப் பகிர்ந்து கொள்ளத் தேவையில்லை. அதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, மத்திய அரசு தன்னுடைய நிதியாதாரத்தை அதிகரிப்பதற்கு கூடுதல் வரி வழிமுறையைப் பயன்படுத்துவதை அதிகரித்திருக்கிறது. இரண்டாண்டுகள் முன்பு வரை ஜிஎஸ்டி அல்லாத மத்திய அரசின் வரி வருவாய் 14% என்றால், இந்த நிதியாண்டில் அதுவே 18% ஆக அதிகரிக்க இருக்கிறது.
 வெறும் 4% தானே அதிகரிக்கிறது என்று எண்ணிவிட முடியாது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் மத்திய அரசு விதித்திருக்கும் கூடுதல் வரியால் மாநிலங்கள் எதிர்கொள்ள இருக்கும் இழப்பின் அளவு ரூ.1.25 லட்சம் கோடி. அதனால்தான் எதிர்க்கட்சி ஆட்சியிலிருக்கும் பல மாநிலங்கள் இதைச் சுட்டிக்காட்டி, இது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என்று குரலெழுப்புகின்றன. ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தும்போது, மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே நியாயமான முறையில் வருவாய்ப் பங்கீடு உறுதிப்படுத்தப்படும் என்கிற வாக்குறுதி இதன் மூலம் மீறப்படுகிறது.
 மத்திய நிதியமைச்சகத்துக்கும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசுக்கும் எதிராக கணக்குத் தணிக்கை ஆணையம் செயல்படுகிறது என்றோ மத்திய அரசுக்கு எதிரான குற்றச்சாட்டு என்றோ குரலெழுப்புகிறவர்கள் தெளிவாக ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். பாஜக எதிர்க்கட்சியிலும், காங்கிரஸ் ஆளும் கட்சியிலும் இருந்தால் கணக்குத் தணிக்கை அதிகாரி சுட்டிக்காட்டியிருக்கும் இந்த செயல்பாடு குறித்து அவர்கள் என்ன நிலைப்பாட்டை எடுத்திருப்பார்கள் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
 எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் எதிர்ப்புகளைத் தொடர்ந்து மத்திய அரசு, தான் தெரிந்தே செய்த தவற்றுக்குப் பிராயச்சித்தம் தேட முற்பட்டிருக்கிறது. மாநிலங்களுக்கான சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீடாக ரூ.20,000 கோடியை வழங்கவுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார். நடப்பு (2020-21) நிதியாண்டில் ஜிஎஸ்டி மீது விதிக்கப்பட்டு வரும் கூடுதல் வரி(செஸ்) வாயிலாக வசூலான ரூ.20,000 கோடி, மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடாக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
 2018-19-இல் பல்வேறு கூடுதல் வரிகள் மூலம் மத்திய அரசு ரூ.2.75 லட்சம் கோடி வசூலித்திருக்கிறது. அதில் ரூ.1.15 லட்சம் கோடியை இந்திய தொகுப்பு நிதியாக (கன்சாலிடேட்டட் ஃபண்ட் ஆஃப் இந்தியா) வைத்துக்கொண்டிருக்கிறது என்பதை அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இதுபோன்ற கூடுதல் வரிகளை, குறிப்பிட்ட பாதுகாப்பு நிதியாக வைத்திருப்பதற்கு நாடாளுமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறதே தவிர, தொகுப்பு நிதியாக வைத்திருப்பதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. அதை அறிக்கை மறைமுகமாகச் சுட்டிக் காட்டுகிறது.
 கூடுதல் வரி என்பது ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காக வசூலிக்கப்படுவது. அதை வேறு காரணங்களுக்கு பயன்படுத்துவது என்பது தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும். நிதியை முறைகேடாகக் கையாண்டதாகவும் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, சமூக நலத்துக்காக கூடுதல் வரியாக வசூலிக்கப்பட்ட ரூ.8,871 கோடி, அந்த நோக்கத்துக்காகப் பயன்படுத்தப்படவில்லை. சாலைகள், போக்குவரத்து கட்டமைப்புக்கான கூடுதல் வரியாகக் கிடைத்த ரூ.10,157 கோடி, அந்தத் துறைக்கு வழங்கப்படவில்லை. இதேபோல இன்னும் பல கூடுதல் வரிகள் எதற்காக வசூலிக்கப்பட்டனவோ அந்தத் துறைக்கு வழங்கப்படாமல் இருக்கிறது. ஜிஎஸ்டி இழப்பீடு கூடுதல் வரியான (ஜிஎஸ்டி காம்பன்சேஷன் செஸ்) ரூ.40,806 கோடி, முழுவதுமாக அந்தக் கணக்கில் சேர்க்கப்படவில்லை.
 கூடுதல் வரி என்பது மிக மிக அவசியமானால் மட்டுமே பயன்படுத்த வேண்டிய குறுக்கு வழி. அதன்மூலம் பெறப்படும் வருவாயை முறையாகக் குறிப்பிட்ட காரணத்துக்காகப் பயன்படுத்தாமல் நிதியமைச்சகம் வைத்துக்கொள்வது ஆரோக்கியமான நிதி நிர்வாகம் அல்ல. சமீப காலமாக நிதியமைச்சகம் இதுபோன்ற பல வழிமுறைகளைக் கையாள்கிறது. இதை அரசியலைக் கடந்த பிரச்னையாகப் பார்க்க வேண்டும்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

SCROLL FOR NEXT