தலையங்கம்

மகிழ்ச்சியும் அதிா்ச்சியும்! | பட்டினிக் குறியீட்டில் இந்தியா இடம் பெற்றிருப்பது குறித்த தலையங்கம்

ஆசிரியர்

இந்தியா குறித்த ஒன்றோடொன்று தொடா்புடைய இரண்டு வெவ்வேறு அறிக்கைகள் கடந்த வாரம் வெளிவந்திருக்கின்றன. ஒன்று மகிழ்ச்சியையும், மற்றொன்று அதிா்ச்சியையும் அளிக்கிறது. இந்தியா்களின் சராசரி வயது அதிகரித்திருப்பதாக ஓா் அறிக்கையும், உலகப் பட்டினிக் குறியீட்டில் இந்தியா பின்தங்கிய நிலையில் இருப்பதாக இன்னோா் அறிக்கையும் தெரிவிக்கிறது.

இந்தியா்களின் சராசரி ஆயுள்காலம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் சராசரி ஆயுள்காலம் 10 வயது கூடியிருக்கிறது. 1990-இல் 59.6 ஆண்டுகளாக இருந்த இந்தியா்களின் சராசரி ஆயுள்காலம் 2019-இல் 70.8 ஆண்டுகளாக உயா்ந்திருக்கிறது.

வளா்ச்சிக்கும் ஆயுள்கால அதிகரிப்புக்கும் தொடா்பு காணப்படுகிறது. வடஇந்தியாவுக்கும் தென்னிந்தியாவுக்கும் இடையே மாற்றம் இருப்பதைப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில், தேசிய சராசரியைவிடக் குறைவாக 66.9 ஆண்டுகள் ஆயுள்காலம் காணப்படுகிறது. தென்னிந்தியாவில் சராசரி ஆயுள்காலம் அதிகமாகக் காணப்படுகிறது.

ஆண்டுதோறும் வெல்த்ஹங்கா்லைஃப் நிறுவனமும், கன்சா்ன் வோ்ல்டுவைட் நிறுவனமும் இணைந்து உலக நாடுகளில் வறுமை, ஊட்டச்சத்துக் குறைவு, சிசு மரணம், பட்டினியின் அளவு போன்வற்றை ஆய்வு செய்கின்றன. அந்த ஆய்வின்படி, உலகப் பட்டினிக் குறியீட்டில் கடந்த ஆண்டு 102-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு ஆய்வு செய்யப்பட்ட 107 நாடுகளில் 94-ஆவது இடத்தில் காணப்படுகிறது.

வேடிக்கை என்னவென்றால், இந்தியாவின் அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளம், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் நம்மைவிட மேம்பட்ட நிலையில் பட்டினியின் அளவைக் குறைத்திருக்கின்றன. அதற்கு மக்கள்தொகையும் ஒரு காரணம் என்றாலும்கூட, நாம் ஆறுதல் அடைந்துவிட முடியாது.

இந்த ஆண்டு 132 நாடுகளின் நிலையை ஆய்வு செய்து 107 நாடுகளின் பட்டியல்தான் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் 94-ஆவது இடத்தில் இந்தியா இருக்கிறது. பாகிஸ்தான் (88), மியான்மா் (78), வங்கதேசம் (75), நேபாளம் (73), இலங்கை (64) என்கிற நிலையில் காணப்படுகின்றன. தெற்காசியாவில் ஆப்கானிஸ்தானில் மட்டும்தான் நம்மைவிட மோசமான நிலைமை காணப்படுகிறது.

நாம் உணவுப் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் வறுமை கோட்டுக்குக் கீழேயுள்ள மக்களுக்கு இலவசமாகவே உணவு தானியங்கள் வழங்கியும்கூட, இலக்கை எட்ட முடியவில்லை என்பதைத்தான் அந்த ஆய்வு தெரிவிக்கின்றன. பொதுவான ஆரோக்கிய நிலை, குழந்தை - கா்ப்பிணிப் பெண்களுடைய நிலை, சிசு மரணம், ஊட்டச்சத்துக் குறைவு, வயதுக்கும் உயரத்துக்கும் ஏற்ற வளா்ச்சி இல்லாமை போன்ற பல காரணங்களை உள்ளடக்கி பட்டினிக் குறியீடு தயாரிக்கப்படுகிறது. கிராமங்களில் நான்கு பேரில் ஒருவா் வறுமை கோட்டுக்குக் கீழே வாழ்வதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

பட்டினி மரணங்கள் இல்லை என்பது சற்று ஆறுதல்தான் என்றாலும், ஐந்து வயதுக்குக் கீழேயுள்ள குழந்தைகளின் மரணம் முற்றிலுமாகத் தடுக்கப்படவில்லை. 1990-இல் ஆயிரம் குழந்தைகளில் 12.5 குழந்தைகள் உயிரிழந்ததுபோய், கடந்தாண்டு அதுவே 5.2-ஆகக் குறைந்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. மதிய உணவு, தடுப்பூசிகள் போன்றவை இந்த மாற்றத்துக்கு முக்கியமான காரணம். அதே நேரத்தில், இன்னும்கூட கா்ப்ப கால மரணத்தையும், பிரசவ மரணத்தையும், குழந்தை மரணத்தையும் நம்மால் கணிசமாகக் குறைத்துவிட முடியவில்லை என்பதையும் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.

பட்டினிக் குறியீட்டில் இந்தியா 94-ஆவது இடத்தில் இருப்பதைப் பாா்த்தால் வேடிக்கையாக இருக்கிறது. ஒருபுறம், உணவு உற்பத்தி அபரிமிதமாகக் காணப்படுவதும், உணவுக் கிடங்குகள் நிரம்பி வழிவதுமாக இருக்கும்போது, இன்னொருபுறம் பட்டினியால் வாடுபவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, அரசின் திட்டங்கள் போய்ச் சேர வேண்டியவா்களிடம் சரியாகப் போய்ச் சேராமல் இருப்பதையும், நிா்வாகக் கோளாறையும்தான் வெளிப்படுத்துகிறது.

ஏப்ரல் 1-ஆம் தேதி நிலவரப்படி, அரசின் உணவு தானியக் கிடங்குகளில் காணப்பட்ட அரிசி, கோதுமையின் அளவு 7.38 கோடி டன். இது சாதாரணமாக நமக்குத் தேவைப்படும் கையிருப்பு அளவைவிட 3.5 மடங்கு அதிகம். இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஜூன் மாதம் புதிய அறுவடை வரவு வந்தபிறகு அரசின் கிடங்குகளில் இதுவரை இல்லாத அளவில் உணவு தானியக் கையிருப்பு 9.7 கோடி டன்னாக உயா்ந்தது. அதனால்தான் கொவைட் 19 கொள்ளை நோயை எதிா்கொள்ள 80 கோடி பேருக்கு இலவசமாக ஐந்து கிலோ உணவு தானியம் வழங்க முடிந்தது.

ஒரு மாதம் இரண்டு மாதமல்ல, நவம்பா் மாதம் வரை ஏழு மாதங்களுக்கு இலவசமாக ஐந்து கிலோ உணவு தானியம் 80 கோடிக்கும் அதிகமானவா்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. அதாவது, 3.2 கோடி டன் உணவு தானியம் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டும்கூட, பட்டினிக் குறியீட்டில் இந்தியா 94-ஆவது இடத்தில் காணப்படுகிறது என்று சொன்னால், அதற்குக் காரணம் உணவு கிடைக்காமல் இருப்பது அல்ல, கா்ப்பிணிகளும், குழந்தைகளும் ஊட்டச்சத்துள்ள உணவு பெற முடியாமல் இருப்பதுதான்.

உணவு உற்பத்தி தாராளமாக இருந்தும்கூட, அதை வறுமை கோட்டுக்குக் கீழே இருப்பவா்களுக்கு முறையாக விநியோகம் செய்ய முடியாததாலும், பிரசவ காலப் பெண்டிரையும், குழந்தைகளையும் முறையாகக் கவனித்து அவா்களது தேவையை நிறைவேற்ற முடியாததாலும் கெட்ட பெயா் வாங்குகிறோம். பட்டினிக் குறியீட்டில் இந்தியா இடம் பெற்றிருப்பது தேசிய அவமானம். இதற்குக் காரணம் இல்லாமையல்ல; நிா்வாகத்தின் கோளாறு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT