தலையங்கம்

சாத்தானா வேதம் ஓதுவது? | பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அரசியல் முதிர்ச்சியின்மை குறித்த தலையங்கம்

ஆசிரியர்

பொறுப்பான பதவியில் அமர்ந்த பிறகு சர்வதேச அமைப்புகளில் எப்படி உரையாற்றுவது என்பதுகூட தெரியாமல் இருப்பது, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அரசியல் முதிர்ச்சியின்மையைத்தான் வெளிப்படுத்துகிறது. கடந்த வாரம் ஐ.நா. சபையில் அவர் ஆற்றிய உரை, அரசியல் பொதுக்கூட்ட மேடையில் மூன்றாம்தர அரசியல்வாதி உரையாற்றுவதுபோல அமைந்திருந்தது.

பிரதமர் இம்ரான் கான் உரையாற்றியதற்கு மறுநாள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஐ.நா. சபையில் உரையாற்றினார். அவரது உரையில் எல்லை கடந்த பயங்கரவாதம் குறித்துக் குறிப்பிட்டாரே தவிர, பாகிஸ்தானை நேரடியாக குற்றம்சாட்டி ஒருவார்த்தைகூட விமர்சிக்காதது, இந்தியாவின் கண்ணியத்தையும் பிரதமரின் முதிர்ச்சியையும் வெளிப்படுத்தியது. பாகிஸ்தான் பிரதமர் தனது உரையில் முன்வைத்த குற்றச்சாட்டுகள் பொய்யும், புனைகதையும், போர் வெறியும் கலந்த வழக்கமான பிதற்றல்கள் என்று இடித்துரைத்து பதிலளிக்கும் பொறுப்பை, ஐ.நா. சபைக்கான இந்தியத் தூதரிடம் பிரதமர் மோடி விட்டுவிட்டார். 

பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில், இந்தியாவை மையப்படுத்தியும், 75-ஆவது ஆண்டைக் கொண்டாடும் ஐ.நா. சபையின் மாமன்றத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்தும் வலியுறுத்தினார். ஐ.நா.வின் பாதுகாப்பு சபை விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றும், அதில் 140 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியா நிரந்தர உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியதை பெரும்பாலான நாடுகளும் சர்வதேச அரசியல் பார்வையாளர்களும் பாராட்டி ஏற்றுக்கொண்டனர். அதற்கு நேர்விரோதமாக அமைந்திருந்தது, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் முந்தைய நாள் உரை.

பிரதமர் இம்ரான் கானின் உரையில், ஏறத்தாழ பாதி அளவு இந்தியா குறித்தும் நரேந்திர மோடி அரசு குறித்துமான குற்றச்சாட்டுகள்தான் முன்வைக்கப்பட்டிருந்தன. நரேந்திர மோடி அரசு இஸ்லாமியர்களுக்கு எதிரான கொள்கைகளைக் கடைப்பிடிப்பதாகவும், அரசே "இஸ்லாமோ ஃபோபியா'வை உருவாக்குவதில் முனைப்பு காட்டுவதாகவும் குற்றம்சாட்டினார். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தீவிரவாதக் கொள்கைகளைப் பின்பற்றும் நரேந்திர மோடி அரசு, ஹிட்லரின் நாஜி ஆட்சியின் கொள்கைகளான இனத்தூய்மையையும், பேரினவாதத்தையும் கடைப்பிடிப்பதாகவும், இந்தியாவிலிருந்து சிறுபான்மையினரை முழுமையாக அழித்துவிடும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் சர்வதேச மாமன்றத்தில் குற்றம்சாட்டியிருப்பது நகைப்பை வரவழைக்கிறது.

இந்தியா ஒரு சுதந்திர ஜனநாயக நாடு என்பதும், இந்தியாவிலுள்ள சிறுபான்மை இனத்தினர் முழுமையான வாக்கு சுதந்திரமும், அடிப்படை உரிமைகளும் பெற்றிருக்கிறார்கள் என்பதும் உலகறிந்த உண்மை. சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் காணப்படுவதுதான் குடியுரிமை சட்டம். நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தை, நாஜி அரசின் நியூரெம்பர்க் சட்டங்களுடன் இணைத்து பாகிஸ்தான் பிரதமர் பேசியது வேடிக்கையாக இருக்கிறது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஜம்மு - காஷ்மீர் பிரச்னையை ஐ.நா. சபையில் எழுப்பி அதை சர்வதேசப் பிரச்னையாக மாற்ற நினைக்கும் பிரதமர் இம்ரான் கானின் முயற்சி தொடர்ந்தது.

அரசியல் சாசன சட்டம் 370-ஐ இந்திய அரசு நீர்த்துப்போக வைத்திருக்கிறது என்றும், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாக மாற்றியமைத்திருப்பது, இந்தியாவின் இன அழிப்புத் திட்டத்தின் ஒரு பகுதி என்றும் குற்றம்சாட்டினார் பிரதமர் இம்ரான் கான். இவையெல்லாம் ஐ.நா. சபையின் சர்வதேச சட்டங்களை மீறிய செயல்பாடுகள் என்கிற இம்ரான் கானின் குற்றச்சாட்டு புதிதொன்றுமல்ல.

பாகிஸ்தான் பிரதமரின் உரையில் அவர் முன்வைத்த ஒவ்வொரு குற்றச்சாட்டையும் எதிர்கொள்ளவும், அவற்றுக்கு பதிலளிக்கவும் முடியும். இந்திய அரசு அதைச் செய்யாமல் இல்லை. ஆனாலும்கூட, மீண்டும் மீண்டும் அதே குற்றச்சாட்டை எழுப்புவதன் மூலம், அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு அங்கீகாரம் தேடித்தரும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டிருக்கிறது. 

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எந்தவித உரிமைகளும் அதிகாரங்களும் இல்லை என்கிற பிரதமர் இம்ரான் கானின் குற்றச்சாட்டுக்கு இந்தியா பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவின் ஆட்சி அமைப்பையும், நிர்வாக அமைப்பையும், நீதித் துறை அமைப்பையும், ஜனநாயக அமைப்பையும் பார்க்கும் எவருக்கும் இந்தியாவில் எந்த அளவுக்கு சிறுபான்மையினர் செல்வாக்குடன் இருக்கிறார்கள் என்பது புரியும். இந்தியாவில் சிறுபான்மையினரின் வாக்குகள்தான் பல தொகுதிகளில் வெற்றி - தோல்வியை  நிர்ணயிக்கிறது என்பது பிரதமர் இம்ரான் கானுக்குத் தெரியாது போலிருக்கிறது.

சிறுபான்மையினர் பிரச்னையில் பாகிஸ்தானின் செயல்பாடு எத்தகையது என்பதும், எந்த ஒரு உயர்ந்த பதவியையும் சிறுபான்மையினர் வகிக்க முடியாத அளவில் பாகிஸ்தானின் சட்டங்கள் இருப்பதும் பிரதமர் இம்ரான் கானின் குற்றச்சாட்டுகளை முனை மழுங்கச் செய்கின்றன. பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் பெருமளவில் ஏனைய பகுதிகளிலிருந்து குடியேற்றத்தை ஊக்குவித்திருப்பது மட்டுமல்லாமல், அதன் பகுதியான கில்ஜித் - பல்டிஸ்தானை தனி மாநிலமாக அறிவித்திருப்பதும் உலகறிந்த உண்மை. 

தனது பலவீனங்களை மறைப்பதற்கு, பாகிஸ்தானின் முந்தைய பிரதமர்களைப் போலவே, இம்ரான் கானும் இந்தியாவைக் குற்றம்சாட்டி கவனத்தை திசைத்திருப்ப முற்பட்டிருக்கிறார், 

வேறென்ன...?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT