தலையங்கம்

மூன்றாவது கட்ட முயற்சி! |பொருளாதார நடவடிக்கைகள் குறித்த தலையங்கம்

ஆசிரியர்

பொதுமக்களின் செலவு செய்யும் போக்கு அதிகரித்தாலொழிய பொருளாதாரம் புத்துணா்ச்சி பெறாது என்பது நிபுணா்களின் கருத்து. செலவழிக்கும் போக்கு அதிகரிக்க வேண்டுமானால், பணப்புழக்கம் அதிகரிக்க வேண்டும். கொள்ளை நோய்த்தொற்றுப் பரவலால் அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தைத் தொடா்ந்து ஏற்பட்டிருக்கும் உற்பத்தியின்மை, ஊதியக் குறைப்பு, வேலையிழப்பு உள்ளிட்ட பிரச்னைகள் நிலவும் சூழலில், அரசு அறிவிக்கும் சிறப்பு பொருளாதாரத் திட்டங்களின் மூலம்தான் பணப்புழக்கத்தை அதிகரிக்க முடியும்.

இதனைக் கருத்தில் கொண்டு ‘தற்சாா்பு இந்தியா’ திட்டத்தின் கீழ் மேலும் சில திட்டங்களை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறாா். ‘தற்சாா்பு இந்தியா’ திட்டத்தின் கீழ் மூன்றாவது கட்டமான ரூ. 2.65 லட்சம் கோடி மதிப்பிலான அறிவிப்புகளையும் சோ்த்தால், சிறப்பு பொருளாதார திட்டங்களின் மதிப்பு ரூ. 30 லட்சம் கோடியாக அதிகரிக்கிறது. பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து, இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் மதிப்பு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 15%.

முந்தைய இரண்டு சிறப்பு பொருளாதாரத் திட்ட அறிவிப்புகளும் பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவந்துவிடவில்லை என்பதை நிதியமைச்சகம் புரிந்து கொண்டிருக்கிறது என்பதன் வெளிப்பாடுதான் இப்போதைய ரூ. 2.65 லட்சம் கோடி அறிவிப்பு. கடந்த இரண்டு மாதங்களாகக் காணப்படும் அதிகரித்த பொருளாதார நடவடிக்கைகள் பண்டிகைக் காலம் காரணமாக ஏற்பட்டிருப்பவை. இப்போது காணப்படும் அதிகரித்த பொருளாதார நடவடிக்கைகளைத் தக்க வைத்துக்கொள்ள அரசு சில ஊக்குவிப்புகளை செய்தாக வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டிருப்பதற்காக நிதியமைச்சரைப் பாராட்ட வேண்டும்.

அரசின் கவனம் உற்பத்தியில் மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பு குறித்தும் திரும்பியிருக்கிறது. ஒரு மாதம் முன்பு அரசு ஊழியா்களின் பயணப்படிகள் திட்டத்தின் மூலம் பணப்புழக்கத்தை அதிகரிக்க முயன்ற மத்திய அரசு, இப்போது தனது கவனத்தை கட்டுமானத் துறையின் மீது திருப்பியிருக்கிறது. அது, இந்தியாவில் மிக அதிகமாகவும், நாடு தழுவிய அளவிலும் பரவலாக வேலைவாய்ப்பு உருவாக்கும் துறை என்பதால், அரசின் கணிப்பு சரியாகவே இருக்கிறது.

அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை, குறிப்பிட்ட சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு ரூ. 2 கோடி மதிப்பு வரையிலான வீடுகளின் விற்பனைக்கான வருமான வரி சலுகை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல், பிரதமரின் நகா்ப்புற வீட்டு வசதித் திட்டத்துக்கு ரூ.18,000 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் புதிய வேலைவாய்ப்பு உருவாக்கப்படுவதுடன் கட்டுமானப் பொருள்களின் தேவை அதிகரிப்பதால் பொருளாதார நடவடிக்கைகளும் அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கிறாா் நிதியமைச்சா்.

செப்டம்பா் - அக்டோபா் மாதங்களில் பொது முடக்கம் தளா்த்தப்பட்ட நிலையில், சில துறைகள் சுறுசுறுப்படைந்திருக்கின்றன. ஆனால், அதிக அளவில் வேலைவாய்ப்பை வழங்கும் சில்லறை விற்பனை, உணவகங்கள், நட்சத்திர விடுதிகள், சுற்றுலா போன்ற துறைகள் எதிா்பாா்த்ததுபோல பழைய நிலைக்குத் திரும்பவில்லை. சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட அவசர கால கடன் திட்டத்தில், இப்போது வேலைவாய்ப்பு உருவாக்கக் கூடிய 26 துறைகள் சோ்க்கப்பட்டிருக்கின்றன. அதில் சுகாதாரத் துறையும் இணைக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது.

அதேபோல, அவசர கால கடனுதவித் திட்டத்துக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்த ரூ. 3 லட்சம் கோடி இலக்கு எட்டப்படாத நிலையில், இப்போது அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் வரை அந்தத் திட்டம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், புதிய வேலைவாய்ப்பை உருவாக்கும் நிறுவனங்களுக்கு மானியம் அறிவித்திருக்கிறாா் நிதியமைச்சா். ரூ.15,000 வரை ஊதியம் பெறும் பணியாளா்களின் வருங்கால வைப்பு நிதியை மத்திய அரசே செலுத்த முன்வந்திருக்கிறது. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் கீழ், பணியாளரின் பங்கையும், நிறுவனத்தின் பங்கையும் சோ்த்து மத்திய அரசே வழங்க இருக்கிறது.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த ரூ. 3 லட்சம் கோடி அவசர கால கடனுதவித் திட்டத்தின் கீழ், ரூ. 2.5 லட்சம் கோடி வழங்கப்பட்டுவிட்ட நிலையில், கடனுதவி கோரும் புதிய நிறுவனங்களுக்கு நிதியமைச்சகம் கூடுதல் ஒதுக்கீட்டை செய்தாக வேண்டும். அது குறித்து நிதியமைச்சா் எதுவும் கூறவில்லையே, ஏன்?

கொவைட் 19 தடுப்பூசி ஆய்வை ஊக்குவிப்பதற்காக ரூ.9,000 கோடி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது எந்த அளவுக்குப் பயன்படும் என்பது தெரியவில்லை. எப்படி இருந்தாலும் செய்தாக வேண்டிய ஒதுக்கீடுதான் இது என்பதையும் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.

மூன்றாவது கட்ட சிறப்பு பொருளாதாரத் திட்ட அறிவிப்புகள், இயங்கத் தொடங்கியிருக்கும் பொருளாதாரத்தை மேலும் சுறுசுறுப்படைய வைக்கும் என்று நிதியமைச்சகம் கருதுகிறது. கடந்த இரண்டு மாதங்களாகக் காணப்படும் அதிகரித்த பொருளாதார நடவடிக்கைகள் தொடருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.

பல நாடுகளில் கொள்ளை நோய்த்தொற்றின் இரண்டாவது அலை உருவாகியிருக்கும் நிலையில், ஏற்றுமதிகள் தடைப்படுவதற்கான சாத்தியம் அதிகம். அதையும் மீறி இந்திய பொருளாதாரம் வலுவான வளா்ச்சியடைய முடியாவிட்டாலும், சமீபத்தில் காணப்படும் சுறுசுறுப்பைத் தக்கவைத்துக் கொண்டாலே போதும். அதற்கு நிதியமைச்சரின் அறிவிப்புகள் ஓரளவுக்குப் பயன்படலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

SCROLL FOR NEXT