தலையங்கம்

வம்சாவளி அரசியல்! | குடும்ப அரசியல் குறித்த தலையங்கம்

13th Nov 2020 12:45 PM | ஆசிரியர்

ADVERTISEMENT


தில்லியிலுள்ள பாஜக தலைமையகத்தில் புதன்கிழமையன்று தொண்டர்கள் மத்தியில் உரையாற்றியபோது, அரசியல் கட்சிகள் வம்சாவளி ரீதியாக நடத்தப்படுவது ஜனநாயகத்துக்கு பேராபத்தாக முடியும் என்கிற பிரதமர் நரேந்திர மோடியின் கருத்தை மறுப்பதற்கில்லை. தனி நபர் செல்வாக்கின் அடிப்படையிலும், குடும்பங்களின் கட்டுப்பாட்டிலும் அரசியல் கட்சிகள் நடத்தப்படும்போது, தகுதி பின்னுக்குத் தள்ளப்படுகிறது. அதனால் ஜனநாயகம் பலவீனமடைகிறது.

இந்தியாவைப் பொருத்தவரை, வம்சாவளி அரசியலுக்கு  வித்திட்டது தேசிய கட்சியான காங்கிரஸ் என்பது உலகறிந்த உண்மை. ஜவாஹர்லால் நேருவுக்குப் பிறகு இந்திரா காந்தியும், இந்திரா காந்திக்குப் பிறகு ராஜீவ் காந்தியும் தலைமையேற்றதன் மூலம், ஏனைய அரசியல் கட்சிகளுக்குத் தவறான வழிகாட்டுதலை உருவாக்கித் தந்தது காங்கிரஸ் கட்சி. அதன் விளைவாக, பெரும்பாலான மாநிலக் கட்சிகள் குடும்பக் கட்சிகளாக மாறி விட்டன. 

பாஜக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், ஜெயலலிதாவுக்குப் பிறகான அதிமுக - இவை தவிர இந்தியாவிலுள்ள ஏனைய அரசியல் கட்சிகள் அனைத்தும் குடும்பக் கட்சியாகவோ அல்லது தனி நபர் கட்சியாகவோ இயங்குகின்றன. 

அதிலும்கூட, ஒடிஸாவின் பிஜு ஜனதா தளம், மேற்கு வங்கத்தின் திரிணமூல் காங்கிரஸ், பிகாரின் ஐக்கிய ஜனதா தளம், உத்தர பிரதேசத்தின் பகுஜன் சமாஜ் கட்சி, தில்லியின் ஆம் ஆத்மி கட்சி என்று தனி நபர் கட்சிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். 

ADVERTISEMENT

பிறவியின் அடிப்படையிலான ஜாதிய முறையை எதிர்க்கும் கட்சிகளில், பிறவியின் அடிப்படையில் தலைமை நிர்ணயிக்கப்படும் விசித்திரத்தை உலகில் வேறெங்கும் காண முடியாது. சோஷலிஸ்ட்டான ராம்விலாஸ் பாஸ்வான், வம்சாவளி அரசியலை மிகக் கடுமையாக எதிர்த்தவர். ஆனால், கடைசியில் தனது 37 வயது மகன் சிராக் பாஸ்வானை தனது அரசியல் வாரிசாக அறிவித்ததன் விளைவாக,  அவரது மரணத்தைத் தொடர்ந்து சிராக் பாஸ்வான் அந்தக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கிறார்.  

தமிழகத்தையே எடுத்துக்கொண்டால், தானோ தனது குடும்பத்தினரோ அரசியலில் எந்தப் பொறுப்பையும் வகிக்க மாட்டோம் என்று உரக்க அறிவித்த மருத்துவர் ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சி, இப்போது குடும்பக் கட்சியாகி விட்டது. வாரிசு அரசியலுக்கு இனிமேல் இடமில்லை என்று பேட்டியளித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இப்போது இளைஞரணி செயலாளராக தனது மகனை அறிவித்திருக்கிறார். தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களிலும் வாரிசு அரசியலும், குடும்பக் கட்சிகளும் செழித்து வளர்கின்றன.

மதச்சார்பற்ற ஜனதா தளம், தெலுங்கு தேசம் கட்சி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலங்கானா ராஷ்ட்ர சமிதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், அகாலி தளம், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் என்று எண்ணிலடங்காத கட்சிகள் வம்சாவளி நியதியின்படி இயங்கும் குடும்பக் கட்சிகளாக வேரூன்றி விட்டன. இந்தியாவில் 30-க்கும் மேற்பட்ட முக்கிய அரசியல் குடும்பங்கள் இருக்கின்றன. அவற்றின் வம்சாவளியினர்தான் 60%-க்கும் அதிகமான தேர்ந்தெடுக்கப்படும் பதவிகளில் செயல்படுகின்றனர்.

திரைத்துறை, விளையாட்டு, கார்ப்பரேட் நிறுவனங்கள், இந்திய ஆட்சிப் பணி, ராணுவம், நீதித்துறை  என்று வம்சாவளியினர் கோலோச்சாத துறைகள் மிக மிகக் குறைவு. இவற்றில் திரைத்துறை, வர்த்தகம், கார்ப்பரேட் நிறுவனம் போன்றவற்றில் வம்சாவளி முறை இருப்பதால் எந்தவித பாதிப்பும் இல்லை. திறமையிருந்தால் வெற்றி பெறுகிறார்கள். ஆனால், இந்திய ஆட்சிப் பணி, ராணுவம், விளையாட்டு, அரசியல், நீதித்துறை ஆகியவற்றில் வம்சாவளி முறை நிலைநாட்டப்படும்போது திறமைசாலிகளுக்கும் சாமானியர்களுக்குமான வாய்ப்பு மறுக்கப்படுவதுடன், திறமையின்மையால் ஒட்டுமொத்த தேசமே பாதிப்பை எதிர்கொள்ள நேர்கிறது.

விளையாட்டுத் துறையை எடுத்துக்கொண்டால், இந்தியாவிலுள்ள 70 %-க்கும் மேற்பட்ட விளையாட்டு அமைப்புகள் அரசியல்வாதிகள், தொழிலதிபர்களின் வாரிசுகளால்தான் நடத்தப்படுகின்றன. கிரிக்கெட், டென்னிஸ், கால்பந்து, பூப்பந்து, செஸ் போன்ற விளையாட்டுகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தொழிலதிபர்களுக்கும் என்னதான் தொடர்பு இருந்துவிட முடியும்? விளையாட்டை வர்த்தகமாக்கி, பெரும் பணம் ஈட்ட அவர்களால் முடிகிறது. அதனால், புதிய திறமைசாலிகளைக் கண்டறிந்து ஊக்குவிப்பதில் அவர்கள் கவனம் செலுத்துவதில்லை.

நீதித்துறையில் பெரும்பாலும் முன்னாள் நீதிபதிகளின் வாரிசுகளும், பிரபல வழக்குரைஞர்களின் வாரிசுகளும் இடம் பெறுவதன் பின்னணியில் திறமை மட்டுமே இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனைய துறைகள் அளவுக்கு மோசமாக இல்லாவிட்டாலும், கொலீஜியம் முறையில் செயல்படும் நீதித்துறையும் வம்சாவளி பாதிப்புக்கு விதிவிலக்கல்ல.

திறமையின் அடிப்படையில் மட்டுமே இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி, அயல் நாட்டுப் பணி, வருவாய் பணி ஆகியவற்றில் இடம் பிடிக்க முடியும் என்பது பொதுவான கருத்து. அதனால்தான் குடிமைப் பணி தேர்வெழுதுவதில் சாமானியர்கள் முனைப்பாக இருக்கிறார்கள். மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், ஐஆர்எஸ் அதிகாரிகளின் வாரிசுகள் பெரும்பாலும் குடிமைப் பணித் தேர்வுகளில்  வெற்றி பெற்று எப்படி தங்கள் வம்சாவளியை நிலைநிறுத்த முடிகிறது என்பது நீண்ட நாள்களாகத் தொடரும் ஆச்சரியம்.

ஜனநாயகத்தின் ஐந்தாவது தூண் வம்சாவளிதான் போலிருக்கிறது; என்ன கொடுமை?

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT