தலையங்கம்

அகன்றுவிடவில்லை ஆபத்து! | நோய்த்தொற்று பரவல் குறித்த தலையங்கம்

10th Nov 2020 07:17 AM | ஆசிரியர்

ADVERTISEMENT


தமிழகத்தில் கொவைட்-19 நோய்த்தொற்றுப் பரவல் 3%-க்கும் கீழாகக் குறைந்துள்ளது என்று தலைமைச் செயலர் க.சண்முகம் தெரிவித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. சென்னை, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் நோய்த்தொற்று 5%-க்கும் அதிக மாகக் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

தற்போதைய நிலையில் நோய்த்தொற்றுப் பகுதிகளைக் கண்டறிந்து தனிமைப்படுத்தி அப்பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தைக் குறைப்பதன் மூலம் நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தலாம் என்பது அவரது கருத்து. பொதுமுடக்கத்துக்குப் பதில், கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தினால் போதும் என்றும், தீபாவளி பண்டிகைக்குப்பின் நோய்த்தொற்றுப் பரவல் அதிகரிக்கவில்லை எனில் அடுத்தகட்டத் தளர்வுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

தேசிய அளவில் கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி ஒரே நாளில் 97,650 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டதுதான் உச்சகட்டத் தாக்கம். அதன்பிறகு, தொடர்ந்து பாதிப்புகள் குறைந்து வருகின்றன. அக்டோபர் 25-ஆம் தேதிக்குப் பிறகு ஒன்றிரண்டு நாள்களைத் தவிர ஏனைய நாள்களில் புதிய பாதிப்புகள் 50,000-க்கும் குறைவாகவே இருந்து வருகின்றன. 

நோய்த்தொற்று குறைந்து வருவதுபோலத் தெரிந்தாலும், திடீரென்று இரண்டாவது அலை தோன்றும் அபாயம் இருக்கிறது.  பண்டிகைக் காலங்களுக்கும் நோய்த்தொற்றுப் பரவலுக்குமான தொடர்பு 1861-லேயே பிரிட்டிஷ் ராயல் கமிஷனால் உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று. விநாயகர் சதுர்த்தியைத் தொடர்ந்து மும்பையிலும், ஜகந்நாதர் ரத யாத்திரையைத் தொடர்ந்து ஒடிஸாவிலும், ஓணம் பண்டிகைக்குப் பிறகு கேரளத்திலும், நவராத்திரிக்குப் பிறகு தில்லியிலும் நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்திருக்கும் நிலையில் நாம் மெத்தனமாக இருப்பது தவறு. 

ADVERTISEMENT

தில்லி அரசின் சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், தலைநகரில் கொவைட்-19 நோய்த்தொற்றின் கடுமையான மூன்றாவது அலை தொடங்கியிருப்பதாக அறிவித்திருக்கிறார். 

ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் 7,745 நோய்த்தொற்றுப் பாதிப்புகள் பதிவாகியிருக்கின்றன. மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. அவசர சிகிச்சைப் பிரிவில் படுக்கைகளின் தேவை அதிகரித்திருக்கிறது. இரண்டாவது, மூன்றாவது அலை நோய்த்தொற்று முதலாவது அலையின் பரவலைவிடக் கடுமையாக இருக்கும் என்பதை மேலை நாடுகள் உணர்த்துகின்றன.

அதிபர் தேர்தல் கவனத்தை திசை திருப்பியதால், கடந்த 10 நாள்களில் அமெரிக்காவில் மட்டும் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் புதிதாகப் பாதிக்கப்பட்டிருப்பது வெளியில் தெரியவில்லை. ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் மீண்டும் நிலைமை மோசமாகி வருகிறது. அதிகரித்த நோய்த்தொற்றின் காரணமாக மிகப் பெரிய பொருளாதார நாடுகளான பிரிட்டனும் ஜெர்மனியும் பிரான்ஸூம் மீண்டும் பல பகுதிகளில் பொது முடக்கத்தை அறிவித்திருக்கின்றன. செக் குடியரசில், இரவு நேரத்தில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இத்தாலியில் மீண்டும் திரையரங்கங்களும், உடற்பயிற்சி நிலையங்களும் மூடப்பட்டிருக்கின்றன. உணவு விடுதிகள் இரவில் இயங்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. 

ஆகவே, நோய்த்தொற்றுப் பரவல் குறைந்திருக்கிறது என்பதால் அபாயம் அகன்றுவிட்டது என்று கருதிவிட முடியாது. பொது முடக்கம், மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை முன்னெடுப்பதற்கும், மக்கள் மத்தியில் நோய்த்தொற்று அபாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் உதவுகிறது என்பதை மறுக்க முடியாது. பொதுமுடக்கத்தின் மூலம் ஓரளவுக்கு நோய்த்தொற்றுப் பரவல் தவிர்க்கப்படும் என்பதும் உண்மை. 

அதேநேரத்தில், பொது முடக்கம் என்று சொன்னால் அதனால் ஏற்படும் பொருளாதார இழப்பைத் தவிர்க்க முடியாது. வளர்ச்சியடைந்த ஐரோப்பிய நாடுகளைப்போல நீண்ட நாள்களுக்குப் பொருளாதாரத்தை முடக்கி வைக்கும் வசதி வளர்ச்சியடையும் இந்தியா போன்ற நாடுகளுக்கு கிடையாது. 

முகக் கவசம் அணிவதை ராஜஸ்தான் அரசு கட்டாயமாக்கியிருக்கிறது. ராஜஸ்தானில் முகக் கவசம் அணியாவிட்டால் அபராதம் மட்டுமல்லாமல் சிறை தண்டனையும் அறிவிக்கப்பட்டிருப்பது விழிப்புணர்வை அதிகரிக்கக்கூடும் என்று வேண்டுமானால் சொல்லலாம்.  தமிழக அரசு பொது விநியோக அமைப்புகள் மூலம் இலவசமாக முகக் கவசம் வழங்கியும்கூட பலர் அதை பயன்படுத்தாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. சட்டம்போட்டு எந்த அளவுக்கு முகக் கவசம் அணிவதை உறுதிப்படுத்த முடியும் என்று தெரியவில்லை. 

கிழக்காசிய நாடுகளில் முகக் கவசம் அணிவதை அனைவரும் வழக்கமாகக் கொண்டிருப்பதால் கொவைட்-19 நோய்த்தொற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டிருக்கிறார்கள். பொது முடக்கத்துக்கு முன்னுரிமை அளித்த மேலை நாடுகளைவிட முகக் கவசத்தை வழக்கமாக்கிக் கொண்டிருக்கும் கிழக்காசிய நாடுகளில் நோய்த்தொற்றுப் பரவலும் தடுக்கப்பட்டது, உயிரிழப்பும் குறைவு. அதனால் தமிழகத்தில் முகக் கவசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் நாம் முனைப்புக் காட்டியாக வேண்டும். 

தலைமைச் செயலர் கூறுவதுபோல, தொடர்ந்த பொது முடக்கம் தேவையில்லை என்றாலும்கூட நோய்த்தொற்றுப் பரவலுக்கு வழிகோலும் திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், பொழுதுபோக்குத் தலங்கள் போன்றவை திறக்கப்படாமல் இருப்பது அவசியம். அதேபோல, சமூக இடைவெளியை உறுதிப்படுத்த முடியாத மொத்த விற்பனைச் சந்தைகள், சென்னை ரங்கநாதன் தெரு போன்று கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத கடைத் தெருக்கள், வணிக வளாகங்கள் போன்றவை இயல்பு நிலையில் இயங்க அனுமதிப்பது ஆபத்தை வரவேற்பதாக அமையும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT