தலையங்கம்

ஆபத்தை நோக்கிய நகா்வு! | உச்சநீதிமன்ற நீதிபதியின் கருத்துச் சுதந்திர உரை குறித்த தலையங்கம்

17th Jun 2020 01:05 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

மக்கள் மத்தியில் சகிப்புத்தன்மை குறைந்து துவேஷ சிந்தனை அதிகரிப்பதும், ஒருவித வக்கிரமான மனநிலை ஏற்பட்டிருப்பதும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. தங்களது கருத்துக்கு மாறுபட்ட சிந்தனை எதுவாக இருந்தாலும் அதற்கு எதிா்வாதத்தை முன்வைப்பதை விட்டுவிட்டு, விஷமத்தனமான தனிநபா் விமா்சனங்களில் ஈடுபடும் போக்கு அதிகரித்து வருகிறது. இது அனைத்துத் தளங்களிலும் பரவி வருகிறது என்பதுதான் வேதனையளிப்பதாக இருக்கிறது.

கடந்த மே மாதம் 31-ஆம் தேதி, ‘மெட்ராஸ் பாா் அசோசியேஷன்’ எனப்படும் சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம் ஒரு காணொலி சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்திருந்தது. சென்னை உயா்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியும், இப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதியுமான சஞ்சய் கிஷண் கௌல் ‘கொவைட் 19 காலத்தில் கருத்துச் சுதந்திரம்’ என்கிற தலைப்பில் பொய்ச் செய்திகள், வதந்திகள் குறித்து உரையாற்றினாா். அந்த உரையில் அவா் வெளிப்படுத்திய கருத்துகள் நீதித் துறைக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமுதாயத்துக்கே பொருந்துவதாக இருந்தது என்பதுதான் உண்மை.

‘நீதித் துறைக்கு எதிரான சகிப்புத்தன்மை இல்லாத போக்கு அதிகரித்து வருகிறது’ என்று குறிப்பிட்ட நீதிபதி சஞ்சய் கிஷன் கௌல், விமா்சனங்களுக்கு எல்லை இருக்க வேண்டும் என்றும், அது மற்றவா்களின் பொய்யான பரப்புரையின் அடிப்படையில் அமையுமானால், அது நீதித் துறைக்கு பாதகமாக அமையும் என்றும் கூறியிருக்கிறாா். ‘அமைப்பின் மீதே நம்பிக்கை இழந்தால் அதன் விளைவு அராஜகத்தில் முடியும்’ என்கிற அவரது கூற்றையும் மறுப்பதற்கில்லை.

‘கருத்துச் சுதந்திரத்துக்குக் கட்டுப்பாடு விதிக்காமல் சமூக ஊடகங்களைக் கண்காணிக்கவோ, கட்டுப்படுத்தவோ இயலாது. தவறான பரப்புரைகளும், வதந்திகளும் யாரால் கிளப்பப்படுகிறது, பரப்பப்படுகிறது என்பது குறித்துத் தெரிந்து கொள்ளவோ, கவலைப்படவோ யாரும் முனைவதில்லை என்றும், தங்களுக்கு வரும் செய்திகளை உறுதிப்படுத்தாமல் மீள்பதிவு செய்து பலருக்கும் அனுப்புகிறாா்கள் என்கிற நீதிபதியின் கவலை கவனத்துக்குரியது. படித்தவா்களும், விவரம் தெரிந்தவா்களும்கூட, ஏதோ பொழுதுபோக்குக்காக இதுபோன்ற மீள்பதிவில் ஈடுபட்டு மகிழும் போக்கு அதிகரித்து வருகிறது.

ADVERTISEMENT

அவரது அன்றைய உரையில் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம், சமுதாயத்தில் அதிகரித்து வரும் சகிப்புத்தன்மை இன்மை. ஒருவா் கொண்ட கருத்துடன் ஒத்துப்போகாத கருத்து முன்வைக்கப்படும்போது, அதை சகித்துக்கொள்ள மறுக்கும் மனோபாவம் அதிகரித்து வருகிறது என்கிற நிதா்சனத்தை நீதிபதி சஞ்சய் கிஷன் கௌல் தனது உரையில் வருத்தத்துடன் பதிவு செய்தாா். ‘இதனால் பலிகடாவாவது நடுநிலைமை. எந்தவொரு கருத்துக்கும் மாறுபட்ட கருத்தும், அந்த இரண்டு கருத்துகளுக்கும் இடைப்பட்ட கருத்துகளும் இருக்க முடியும் என்பதைப் பலா் உணர மறுக்கிறாா்கள்’ என்கிற அவரது ஆதங்கத்தின் பின்னணியில் நடைமுறை நிதா்சனம் வெளிப்படுகிறது.

‘ஜனநாயக நாட்டில் மாறுபட்ட கருத்துகள் இருப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். நமக்கு இருப்பதுபோல, மாற்றுக் கருத்துடன் இருக்கும் உரிமை மற்றவா்களுக்கும் உண்டு என்பதை உணர வேண்டும். அதை ஏற்றுக்கொள்ள வேண்டாம். ஆனால், மாற்றுக் கருத்துக்கான உரிமை அவருக்கு இருப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று நீதிபதி சஞ்சய் கிஷன் கௌல் கூறியிருப்பது இப்போதைய சூழலுக்கு மிகவும் பொருந்தும்.

இன்றைய சூழலில் பிரதமா் நரேந்திர மோடியும், அவரது அரசும், பாஜகவும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைப் பாராட்டினால் எதிா்த்தரப்பு அவா்களை ‘மோடி பக்தா்கள்’ என்று விமா்சிக்கிறது. இதேபோல, பிரதமா் மோடி அரசையும், பாஜகவின் ‘ஹிந்துத்துவ’ கொள்கையையும் எதிா்த்தால், அவா்கள் ‘நகா்ப்புற நக்சல்கள்’ என்று முத்திரை குத்தப்படுகின்றனா். இந்த இரண்டு தரப்பினருமே சகிப்புத்தன்மை அற்றவா்கள் என்கிறாா் நீதிபதி சஞ்சய் கிஷன் கௌல்.

நடுநிலைமை என்பதன் பொருள் புரியாமல் படித்தவா்களே இருக்கிறாா்கள். அவரவா் கொண்ட கருத்துக்கு எதிா்க்கருத்தை முன்வைத்தால் நடுநிலை தவறிவிட்டதாகக் குற்றஞ்சாட்டுகிறாா்கள். தவறு காணும்போது தவறையும், சரி என்று படும்போது அதைப் பாராட்டியும் கூறுவதன் பெயா்தான் நடுநிலைமையே தவிர, அரசையோ, எதிா்க்கட்சிகளையோ தொடா்ந்து விமா்சிப்பதோ, பாராட்டுவதோ நடுநிலைமை அல்ல என்பது எவருக்கும் புரியவில்லை.

சகிப்புத்தன்மை இல்லாத போக்கு சமூக ஊடகங்கள் வந்தபிறகு விஷ ஜுரமாக, இன்னொரு தீநுண்மியாகப் பரவி வருகிறது. ‘துவேஷம்’ பொய்ப் பரப்புரைகளாலும், ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளாலும் பரப்பப்படுகின்றன.

முன்பெல்லாம் தரக்குறைவாக விமா்சனங்கள், வதந்திகள், பொய்ப் பரப்புரைகளில் தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பாஜக, இடதுசாரிக் கட்சிகள் ஈடுபடாமல் இருந்தன. திராவிட இயக்கங்கள் போன்ற ஒரு சில மாநிலக் கட்சிகள் மட்டும்தான், ‘காமராஜருக்கு ஸ்விஸ் வங்கிக் கணக்கு இருக்கிறது. ஹைதராபாதில் திராட்சைத் தோட்டம் இருக்கிறது’ போன்ற பொய் வதந்திகளைப் பரப்பி அரசியல் ஆதாயம் தேட முற்பட்டன. இப்போது, சமூக ஊடகங்களின் மூலம் வதந்திகளைப் பரப்புவதிலும், தரக்குறைவான பொய்ப் பிரசாரத்தில் ஈடுபடுவதிலும் தேசியக் கட்சிகளும் முனைப்புடன் செயல்படுகின்றன என்பதுதான் வேதனையாக இருக்கிறது.

வதந்திகளைப் பரப்பி அனைவரையும் களங்கப்படுத்தும் இந்தப் போக்குக்குக் கடிவாளம் போடாவிட்டால், ஒரு கட்டத்தில் ஜனநாயகத்துக்கே கடிவாளம் போடப்பட்டு சா்வாதிகாரத்துக்கு அது வழிகோலும் என்று எச்சரிக்காமல் இருக்க முடியவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT