தலையங்கம்

நோக்கம் மொழிப்பற்றல்ல!| தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு குறித்த தலையங்கம்

4th Feb 2020 03:41 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

 

தமிழ் உணர்வாளர்கள் என்கிற போர்வையில், இறை மறுப்பாளர்களால் தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு பிரச்னையாக்கப்படுகிறது. ஆண்டாண்டு காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஆகம முறைக்கு மாற்றாக, தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கையின் பின்னணியில் காணப்படுவது மொழியார்வம் அல்ல. ஆலய வழிபாட்டு முறை சம்பிரதாயங்களைச் சிதைப்பதும், ஹிந்து மத நம்பிக்கையாளர்கள் மத்தியில் வழிபாட்டு முறையின் மீதான நம்பிக்கையைக் குலைப்பதும்தான் இவர்களது நோக்கமே தவிர, தமிழ்ப் பற்றல்ல. 
23 ஆண்டுகளுக்குப் பிறகு தஞ்சைப் பெரிய கோயிலுக்கு நாளை குடமுழுக்கு நடக்க இருக்கிறது. "மகுடாகமம்' என்னும் ஆகமத்தின் அடிப்படையில் எழுப்பப்பட்ட தஞ்சைப் பெருவுடையார் கோயிலுக்கு, அந்த ஆகமத்தின் அடிப்படையில்தான் தினசரி வழிபாடுகளும், மாதாந்திர, வருடாந்திரத் திருவிழாக்களும், குடமுழுக்கும் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்திருக்கிறது. 
இறை மறுப்பாளர்களால் தமிழ் வழியில் குடமுழுக்கு இந்த முறை நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கை எழுப்பப்பட்டது. இறைமறுப்புக் கொள்கையின் அடிப்படையிலான திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவும் வலுத்த நிலையில், தமிழக அரசின் அறநிலையத் துறை தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய இரு மொழி வழிகளிலும் தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு நடைபெறும் என்று அறிவித்திருக்கிறது. தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வரும் மரபு, சிலரின் வற்புறுத்தலுக்காக மாற்றப்பட்டிருப்பது  சரியல்ல.
ஆலயங்களில் தமிழ் வழிக் குடமுழுக்கு என்பதற்கு வரலாற்று சான்றுகள் எதுவும் இல்லை. கல்வெட்டோ,  செப்பேடோ, ஓலைச்சுவடியோ, ஆவணங்களோ, திருமுறை பிரபந்த அங்கீகாரமோ 
எதுவுமே இல்லை. அப்படி இருக்கும் நிலையில், இப்போது திடீரென்று எழுப்பப்பட்டிருக்கும் கோரிக்கையில் எந்தவித நியாயமும் இல்லை, அதற்கான தேவையும் இல்லை.
ஆலய வழிபாட்டு முறையையும், தமிழ் உணர்வையும் இணைக்க முற்படுவது அசட்டுத்தனம். "ராஜராஜன் தமிழர், தஞ்சைப் பெருவுடையார் கோயிலைக் கட்டியவர்கள் தமிழர்கள். அதனால், தமிழில் குடமுழுக்கு' என்று குரல் எழுப்புபவர்கள் மத நம்பிக்கையோ, இறையுணர்வோ இல்லாதவர்கள். தமிழின் பெயரால் குரலெழுப்பும் வேறுசிலர் மதம் மாறி வேற்று மதத்தை வரித்துக் கொண்டவர்கள். ஹிந்து ஆலயங்களின் முன்னால் "கடவுள் இல்லை, இல்லவே இல்லை. கடவுளை நம்புகிறவன் முட்டாள்' என்று கல்வெட்டு வைத்துப் பிரகடனப்படுத்துபவர்களுக்கு, கோயிலே கூடாது என்பவர்களுக்கு கோயிலில் எப்படி குடமுழுக்கு நடந்தால் என்ன? என்ன மொழியில் நடந்தால்தான் என்ன? சிலை வழிபாடு மூடநம்பிக்கை என்று கூறிக்கொண்டு, முச்சந்தியிலும் நாற்சந்தியிலும் மனிதர்களுக்கு சிலை வைத்துக் கொண்டாடும் போலித்தனத்தைப் போன்றதுதான், தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு குறித்த இவர்களது திடீர் ஆர்வமும், கவலையும்.
அது திராவிடர் கழகமோ, திராவிட முன்னேற்றக் கழகமோ அல்லது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமோ, வேறு எந்தக்கழகமாகவும் இருக்கட்டும். அவர்களின் கட்சி செயற்குழு, பொதுக்குழுக்களும், மாநாடுகளும் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதை அந்தக் கட்சியைச் சாராதவர்கள், கட்சியை விமர்சிப்பவர்கள் ஆலோசனை கூறினால் அவர்களால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியாதோ, அதேபோல மத நம்பிக்கை உடையவர்களின் வழிபாட்டு முறைகள் குறித்து இறையுணர்வும், நம்பிக்கையும் இல்லாதவர்கள் கருத்துக் கூறுவது அநாவசியம்.
"கடவுள் ஏற்பு, மறுப்புப் பிரச்னையல்ல. மொழிப் பிரச்னை' என்கிறார்கள் ஆகம வழி குடமுழுக்கு எதிர்ப்பாளர்கள். சரி, ஏற்றுக்கொள்வோம். அப்படியானால், தமிழகத்திலுள்ள அனைத்து 
வழிபாட்டுத் தலங்களிலும் தமிழில் மட்டும்தான் வழிபாடு  நடத்தப்பட வேண்டும் என்று தமிழ் உணர்வாளர்களான இவர்கள் வலியுறுத்த முன்வர வேண்டும். ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமே குறி வைத்து நடத்தப்படும் இவர்களது தாக்குதலில் இருக்கும் பின்னணி மொழி உணர்வு அல்ல, ஹிந்து மத எதிர்ப்பு என்பது வெளிப்படுகிறது. 
தமிழில் குடமுழுக்கு என்கிற தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழுவுக்கு ஆதரவுக் கரம் நீட்டும் இஸ்லாமிய அன்பர்கள் தவறிழைக்கிறார்கள். ஏக இறைவனை ஏற்றுத் துதிக்கும் 
இஸ்லாமிய சமுதாயம், இறை மறுப்பாளர்களுடன் கைகோத்து நிற்பது வியப்பாக இருக்கிறது. தஞ்சைப் பெரிய  கோயில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கைக்கு இஸ்லாமியர்கள் ஆதரவு தெரிவிப்பார்களேயானால், ஹிந்து மத அமைப்புகளிலிருந்து பள்ளிவாசல்களில் தமிழில் மட்டும் திருக்குர்ஆன் ஓதப்பட வேண்டும் என்கிற எதிர்வினை எழும் என்பதை அவர்கள் ஏன் உணரவில்லை?
தமிழகக் கோயில்களில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது என்கிற வாதம், திராவிட இயக்கத்தினரின் அப்பட்டமான பொய். 
இறை மறுப்பாளர்களின் புனைச்சுருட்டு. ஓதுவார்களால் பஞ்ச புராணம் (தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம்) ஓதப்படாத சிவாலயங்களும், பிரபந்தமும், திருப்பாவையும் பாடப்படாத வைணவ ஆலயங்களும் கிடையாது என்பது இவர்களுக்கு எப்படித் தெரியும்? 
அந்நிய மொழியின் மீதும், அந்நிய மதத்தின் மீதுமான இவர்களது மோகமும், காதலும் 1947-இல் ஆங்கிலேய ஆட்சி தொடரட்டும் என்றது, இந்தியா சுதந்திரம் பெற்ற நாளை, கருப்பு தினமாகக் கொண்டாடியது. இவர்களது வற்புறுத்தலால் குடமுழுக்கு ஆகம மரபு மாற்றப்பட்டிருக்கிறது. இதை பெரிய கோயில் எழுப்பிய "ஸ்ரீ ராஜராஜ தேவர்' ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்!

ADVERTISEMENT
ADVERTISEMENT