தலையங்கம்

மாற்றத்துக்கான தீர்ப்பு! | காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் கட்டாயம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறித்த தலையங்கம்

7th Dec 2020 08:02 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

 குற்றவாளிகளை வரம்பு மீறித் தாக்குவதும் சித்ரவதை செய்வதும் புதிதொன்றும் அல்ல. கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் நகரில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்கிற கருப்பினத்தைச் சேர்ந்தவரை காவல்துறை அதிகாரி ஒருவர் பொது இடத்தில் அனைவரும் பார்க்க கதறக் கதற கழுத்தை அழுத்தி கொலை செய்த கொடூரம் அத்துமீறலின் உச்சகட்டம். இந்தியாவில் அந்த அளவுக்கு காவல்துறையினர் துணியவில்லை என்றாலும், காவல் நிலையங்களில் கைதிகளைத் துன்புறுத்தும் நடவடிக்கைகள் தொடரவே செய்கின்றன. இந்தப் பின்னணியில்தான் காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவது கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
 2018-இல் உச்சநீதிமன்றம் அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டுமென்று உத்தரவிட்டிருந்தது. இரண்டரை ஆண்டுகளாகியும் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படாத நிலையில், காவல்துறையின் கேமரா பொருத்தும் செயல்பாட்டை ஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாலி நாரிமன், கே.எம்.ஜோசப், அனிருத்தா போஸ் ஆகியோர் கடந்த வாரம் பிறப்பித்த உத்தரவு முக்கியத்துவம் பெறுகிறது.
 இந்தியாவிலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கட்டாயமாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டுமென்று மத்திய, மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. காவல் நிலையங்களில் மட்டுமல்லாமல் நடுவண் அரசின் கட்டுப்பாட்டிலுள்ள மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ), தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), போதைப் பொருள்கள் கட்டுப்பாட்டு அமைப்பு (என்சிபி) உள்ளிட்ட விசாரணை அமைப்புகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கிறது.
 அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்க வேண்டும்; கேமராக்கள் பொருத்தப்படுவதை உறுதிப்படுத்தும் பொறுப்பு காவல் நிலையத்தின் தலைமை அதிகாரிக்கு வழங்கப்பட்டிருக்கிறது; விசாரணை நடத்தப்படும் பகுதி எதுவும் கேமராவின் கண்காணிப்பு வளையத்திலிருந்து தப்பக்கூடாது என்றும் கட்டளை பிறப்பித்திருக்கிறது.
 அத்துடன் நின்றுவிடாமல், உச்சநீதிமன்ற அமர்வு ஒருபடி மேலே போய், காவல்துறையின் அத்துமீறல்களைக் கண்காணித்து விசாரிப்பதற்கும் வழிகோலியிருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மனித உரிமைப் பாதுகாப்பு சட்டத்தின்கீழ், மனித உரிமை வழக்குகளுக்கான நீதிமன்றங்கள் நிறுவப்பட வேண்டுமென்று அந்த உத்தரவில் நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள். காவல் நிலையங்களில் சித்ரவதை செய்யப்பட்டாலோ, காவல்துறையினர் அத்துமீறலில் ஈடுபட்டாலோ அந்த நீதிமன்றங்களில் உடனடியாகப் புகாரளிக்க முடியும். கண்காணிப்பு கேமராவின் பதிவுகள் குறைந்தது ஆறு மாதங்களுக்காவது பாதுகாக்கப்பட வேண்டும். மனித உரிமை மீறல் நடந்திருந்தால், பாதிக்கப்பட்டவர்கள் கேமரா பதிவுகளைக் கோரிப் பெறும் உரிமையை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது. நீதிமன்றத் தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்திய காவல்துறையின் செயல்பாடுகளில் வரலாற்றுத் திருப்பம் ஏற்படக்கூடும்.
 இந்தியாவைப் பொருத்தவரை, காவல்துறை அத்துமீறல், சித்ரவதை போன்றவை முந்தைய பிரிட்டிஷ் காலனி ஆட்சியின் கொடைகள். விடுதலைப் போராட்டத்தை அடக்குவதற்கு பிரிட்டிஷார் மிருகத்தனமான தாக்குதல் முறைகளைக் கையாண்டனர். காலனிய ஆட்சிமுறை முடிவுக்கு வந்து 73 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், காவல் நிலைய அத்துமீறலும், மரணங்களும் முடிவுக்கு வருவதற்குப் பதிலாக வழக்கமாகிவிட்டிருப்பது வேதனையிலும் வேதனை.
 நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியிருக்கும் புள்ளிவிவரப்படி 2019-20 இல், ஒவ்வொரு நாளும் 5 கைதிகள் உயிரிழக்கிறார்கள். 2019 ஏப்ரல் 1 முதல் இந்த ஆண்டு மார்ச் 31 வரை 1,697 கைதிகள் உயிரிழந்திருக்கிறார்கள். அவர்களில் 1,584 பேர் சிறைச்சாலைகளிலும், 113 பேர் காவல் நிலையங்களிலும் இறந்திருப்பதாக அந்தப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
 காவல்துறையினருக்கு நவீன விசாரணை முறைகள் குறித்துப் போதுமான பயிற்சிகள் தரப்படுவதில்லை. விசாரணையின்போது குற்றத்தை நிரூபிப்பதற்கான சாட்சியங்களைப் பெறுவதற்கு நவீன தடயவியல் முறைகள் குறித்த பயிற்சிகளும் இல்லை. கைதிகளை அடித்துத் துன்புறுத்தி அவர்களிடமிருந்து பெறும் வாக்குமூலங்கள் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்றாலும்கூட, காவல்துறையினர் வாக்குமூலத்தை பெறுவதற்கு சித்ரவதை முறைகளையே இப்போதும் கடைப்பிடிக்கிறார்கள். அடித்துத் துன்புறுத்தினாலொழிய பழக்கப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து உண்மையை வரவழைக்க முடியாது என்கிற மனோபாவம் அவர்களுக்கு உயரதிகாரிகளால் ஏற்படுத்தப்படுவதுதான் காவல்துறை அத்துமீறல்களுக்கான முக்கியக் காரணம்.
 காவல்துறை சீர்த்திருத்த ஆணையங்களின் அறிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. ஆட்சியிலிருக்கும் அரசியல்வாதிகளின் கைப்பாவையாக காவல்துறை செயல்படுவதால்தான், சீர்திருத்தங்களில் யாரும் அக்கறை செலுத்துவதில்லை. காவல் நிலையங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டாலும் அத்துமீறலின்போது அவை செயல்படுவதில்லை. தவறு செய்யும் காவல் துறை அதிகாரிகள் கடுமையான தண்டனைக்கு ஆளாகாத வரை உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளும் மனித உரிமை ஆணையங்களின் தீர்ப்புகளும் பயனளிக்காது.

ADVERTISEMENT
ADVERTISEMENT