சோனியா எதிர்கொள்ளும் சவால்! | சக்திவாய்ந்த எதிர்க்கட்சியாக காங்கிரஸ் மீண்டும் எழ முடியாதது குறித்த தலையங்கம்

காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை இரண்டாவது முறையாக சோனியா காந்தி ஏற்றுக்கொண்டு ஒரு மாதம் கடந்துவிட்டது.

காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை இரண்டாவது முறையாக சோனியா காந்தி ஏற்றுக்கொண்டு ஒரு மாதம் கடந்துவிட்டது. முன்பு இருபது ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் என்பதால், தொண்டர்கள் மத்தியில் அவருக்கு மரியாதையும் செல்வாக்கும் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால்,  இந்த முறை கட்சியின் தலைமைப் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டதாலேயே பிரச்னைகளுக்குத் தீர்வு ஏற்பட்டு விடவில்லை என்பதைத்தான் கடந்த ஒரு மாத நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன. 

கடந்த முறை சீதாராம் கேசரியை வெளியேற்றிவிட்டு சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றதற்கும், இப்போது மீண்டும் தலைவராகி இருப்பதற்கும் மிகப் பெரிய வேறுபாடு இருக்கிறது. அரசியல் சூழ்நிலையில் ஏற்பட்டிருக்கும் தலைகீழ் மாற்றம் காங்கிரஸ் கட்சியைக் கடுமையாகப் பாதித்திருக்கிறது. வாஜ்பாய் - அத்வானி தலைமையில் இயங்கிய பாரதிய ஜனதா கட்சிக்கும், இப்போது கடந்த ஐந்து ஆண்டுகளாக நரேந்திர மோடி - அமித் ஷா தலைமையில் ஆட்சிப் பொறுப்பிலிருக்கும் பாரதிய ஜனதாவுக்கும் இடையே இருக்கும் மாற்றத்தை எதிர்கொள்வதற்கான வியூகம் எதுவும் காங்கிரஸிடம் இல்லை என்பதுதான் அந்தக் கட்சியின் பலவீனம். 

நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் 12 கோடிக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று இந்தியாவின் முக்கியமான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது. தேசிய அளவில் எல்லா மாநிலங்களிலும் தனக்கென்று செல்வாக்கை தக்க வைத்துக்கொண்டிருக்கும் ஒரே கட்சியாகவும் காங்கிரஸ் தொடர்கிறது. தென்னிந்தியாவைப் பொருத்தவரை, பாரதிய ஜனதா கட்சியைவிடப் பல மடங்கு வலுவாகவும், மக்களின் ஆதரவைப் பெற்றதாகவும் காங்கிரஸ் கட்சி திகழ்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இவையெல்லாம் இருந்தாலும்கூட, தொடர்ந்து எதிர்கொண்ட தேர்தல் தோல்விகளில் இருந்து சக்திவாய்ந்த எதிர்க்கட்சியாக அந்தக் கட்சியால் மீண்டும் எழ முடியவில்லை என்பதுதான் எதார்த்த உண்மை.

மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று ராகுல் காந்தி தனது தலைமைப் பதவியைத் துறந்தது, தார்மிக ரீதியாக வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால், அரசியல் ரீதியாக ஏற்கெனவே தோல்வியைத் தழுவியிருந்த காங்கிரஸ் கட்சியை அவரது முடிவு மேலும் பலவீனமாக்கிவிட்டது. தலைமைப் பதவியில் இருந்து விலகுவதற்கு முன்னால், முறையாக உள்கட்சித் தேர்தலை நடத்தி அடுத்த தலைவரிடம் பொறுப்பை அவர் ஒப்படைத்திருக்க வேண்டும். ராகுல் காந்தி பதவியைத் துறந்ததைத் தொடர்ந்து சுமார் 3 மாத காலம் தலைவரே இல்லாமல்  நடுக் கடலில் திசை தெரியாது தத்தளிக்கும் கப்பலைப்போல காங்கிரஸ் தவித்தது அந்த இயக்கத்தை மேலும் பலவீனப்படுத்தியது.

தலைமைப் பொறுப்பை மீண்டும் ஏற்றுக்கொண்ட சோனியா காந்தி, கடந்த ஒரு மாத காலமாக கோஷ்டிப்பூசல்களால் பிளவுபட்டுக் கிடக்கும் ஹரியாணா, மத்தியப் பிரதேசம், தில்லி மாநில காங்கிரஸ் கட்சியில் ஒற்றுமையை ஏற்படுத்துவதில் முனைப்புக் காட்டி வருகிறார். தனக்குத் தலைமைப் பொறுப்பை வழங்காவிட்டால் கட்சியில் பிளவை ஏற்படுத்தத் தயாராக இருந்த ஹரியாணா முன்னாள் முதல்வர் ஹூடாவை சமாதானப்படுத்தி குமாரி செல்ஜாவை ஹரியாணா மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக நியமித்தது சோனியா காந்தியின் சாமர்த்தியம் என்றுதான் கூற வேண்டும். அதனாலேயே விரைவில் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் ஹரியாணாவில் காங்கிரஸ் வலுவடைந்துவிட்டதாகக் கருதிவிட முடியாது. 

மத்தியப் பிரதேசத்தில் நிலைமை அதைவிட மோசமாக இருக்கிறது. ஜோதிராதித்ய சிந்தியாவை ஏற்றுக்கொள்ள முதல்வர் கமல்நாத்தை சமாதானப்படுத்தினாலும் கூட, முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான திக்விஜய் சிங்கையும் அவரது ஆதரவாளர்களையும் சோனியா காந்தியால் சமாதானப்படுத்த முடியுமா என்பது சந்தேகமே. தில்லியிலும் மறைந்த முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் இடத்துக்கு யாரைக் கொண்டு வருவது என்பதில் குழப்பம் நிலவுகிறது. அஜய் மாக்கனுக்கும் அர்விந்த் சிங் லவ்லிக்கும் இடையே நடக்கும் பதவிப் போட்டிக்கு முடிவு காண முடியாமல் தவிக்கிறார் சோனியா காந்தி.

காங்கிரஸின் மிகப் பெரிய பிரச்னை கோஷ்டிப்பூசல்கூட அல்ல. அந்தக் கட்சி எதிர்கொள்ளும் கொள்கைக் குழப்பம்தான். ராகுல் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் கட்சி தன்னை ஒரு மிதவாத இந்துத்துவா கட்சியாக மாற்றிக்கொள்ளும் முயற்சியில் இறங்கியது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, ராகுல் காந்தி பூணூல் அணிந்துகொண்டு தன்னை ஒரு பிராமணராகக் காட்டிக்கொள்ள முயன்றதும், கோயில் கோயிலாகச் சென்று பூஜைகள் செய்ததும் மிதவாத இந்துத்துவா உத்திகளாகக் கருதப்பட்டன. ஆனால், வாக்காளர்கள் மத்தியில், பாஜகவின் தீவிர இந்துத்துவாவுக்கு முன்னால் ராகுல் காந்தியின் செயல்பாடுகள் எடுபடவில்லை. 

இப்போது சில மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து முக்கியமான தலைவர்கள் பாஜகவில் இணையத் தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பாக, மகாராஷ்டிர மாநிலத்தில் பல தலைவர்கள் பாஜகவில் இணைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அது பாஜகவின் தேர்தல் நேர உத்தி என்றாலும்கூட, அதை காங்கிரஸால் தடுக்க முடியவில்லை என்பது கட்சியின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது. சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் பின்னடைவை எதிர்கொண்டால், கட்சி மேலும் பலவீனப்படும். எப்படி எதிர்கொள்ளப் போகிறார் சோனியா காந்தி என்பதில்தான் இந்திய தேசிய காங்கிரஸின் வருங்காலம் அடங்கியிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com