கலாசாரக் கோளாறு! | அதிகரித்துவிட்டிருக்கும் 'கட்அவுட்' - பேனர்' கலாசாரம் குறித்த தலையங்கம்

தமிழகத்தில் எந்த ஒரு


தமிழகத்தில் எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும் அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டுமானால், உயிர்ப்பலி கொடுக்க வேண்டும் போலிருக்கிறது. ஆட்சியில் இருப்பது அதிமுகவாக இருந்தாலும், திமுகவாக இருந்தாலும் பெரிய அளவில் வித்தியாசம் ஒன்றும் இல்லை. விதிமுறை மீறல்களும், ஆட்சி அதிகார முறைகேடுகளும் கட்சிக்காரர்களால் செய்யப்படும்போது இரண்டு கட்சிகளின் தலைமையும் அதை வேடிக்கை பார்க்கின்றனவே தவிர, பொதுமக்களின் நலனைப் பாதுகாப்பதாகத் தெரியவில்லை. ஏனைய கட்சிகளும் இவர்களைப் பின்பற்றும் விபரீதமான போக்கு அதைவிட வேதனையளிக்கிறது.

சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவில் வைத்திருந்த பேனர் ஒன்று கடந்த வியாழக்கிழமை சரிந்து விழுந்ததில் இருசக்கர வாகனத்திலிருந்து நிலை தடுமாறி சாலையில் விழுந்த சுபஸ்ரீ என்கிற பெண் மீது தண்ணீர் லாரி ஏறியதில் அந்த இடத்திலேயே மரணமடைந்திருக்கிறார். 23 வயது சுபஸ்ரீ, கந்தன்சாவடியிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர். அவரது மரணத்துக்குப் பிறகுதான் ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் விழித்துக்கொண்டு அனுமதியில்லாமல் வைக்கப்படும் பதாகைகள் குறித்து கவலைப்படத் தொடங்கியிருக்கிறது. 

சுபஸ்ரீயின் மரணம் வேதனைக்குரியது என்பதிலும், அனுமதியில்லாமல் பதாகை வைத்த ஆளுங்கட்சிப் பிரமுகரின் செயல்பாடு கண்டனத்துக்குரியது என்பதிலும் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இதில் தேவையில்லாமல் அரசியலையும், ஜாதிய கண்ணோட்டத்தையும் கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லை. 

அதே நேரத்தில், அதிகரித்துவிட்டிருக்கும் "கட்அவுட் - பேனர்' கலாசாரம் கவலைப்பட வைக்கிறது. இல்லத் திருமணங்களுக்கு அபிமான திரை நட்சத்திரங்களின் படங்களுடன் பதாகைகள் வைக்கும் வழக்கமும், அவரவர் சார்ந்த அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களுடன் விளம்பரம் செய்யும் பழக்கமும் தமிழகத்தில் கடந்த அரை நூற்றாண்டு காலமாக திராவிட அரசியல்  உருவாக்கிய கலாசாரம். குழந்தை பிறந்தாலும், தவழ்ந்தாலும் அதற்குக்கூட குக்கிராமங்கள் வரை பதாகை வைத்து விளம்பரம் செய்து மகிழ்ச்சி அடைகிறார்கள். புனித நீராட்டு விழாவிலிருந்து புதுமனை புகுவிழா வரை பதாகைகள் வைப்பதன் மூலம் தங்களது செல்வாக்கைப் பறைசாற்ற முற்படுகிறார்கள்.

1967-இல் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்தபோது, அதன் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் பலரும் திரையுலகுடன் தொடர்புடையவர்களாக இருந்தார்கள். அதனால், விளம்பரப்படுத்திக்கொள்வது என்கிற கலாசாரத்தை அரசியலிலும் அவர்கள் புகுத்தியதில் வியப்படைய ஒன்றுமில்லை. அண்ணாவின் ஆட்சிக்காலம் வரையும்கூட, வரைமுறைக்கு உட்பட்டு இருந்ததுபோய், 1969-இல் கருணாநிதி முதல்வரான பிறகு ஆடம்பர விளம்பரங்கள் அரசியல் அத்தியாவசியங்களாக மாற்றப்பட்டன. 

அதற்குப் பிறகு முதல்வராக வந்த எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் திரைப்பட நட்சத்திரங்களாக இருந்ததால், விளம்பர வெளிச்சத்தில் வலம் வருவதில் மகிழ்ந்தார்கள். திமுகவும் அதிமுகவும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது பொதுக்கூட்டங்களையும், மாநாடுகளையும் திரைப்பட பாணியில் பிரம்மாண்டமாக அரங்க அமைப்புகளுடன் நடத்த முற்பட்டன. தொழில்நுட்பம் கணினி யுகத்தை  அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, குறைந்த செலவில் பதாகைகள் வைக்கும் கலாசாரம் புகுத்தப்பட்டது. அதன் விளைவைத்தான் தமிழகம் எதிர்கொள்கிறது. 

ராகுல் காந்தி சென்னைக்கு கடந்த பிப்ரவரி மாதம் வந்தபோது, ஏராளமான கட்அவுட்களும் பேனர்களும் வைக்கப்பட்டன. 

அப்போது நீதிமன்றம் பேனர்கள் வைப்பதற்குத் தடை விதித்தது. அந்தத் தடை இப்போதுவரை நீடிக்கிறது. அப்படியிருந்தும், கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி  முரசொலி அறக்கட்டளையின் சார்பாக சென்னை மாநகரம் முழுவதும் தடையை மீறி பதாகைகள் வைக்கப்பட்டன. 

அப்போது மாநகராட்சி ஆணையரின் வீட்டுக்கு அருகிலேயே விதிகளை மீறி பதாகை வைக்கப்பட்டிருந்தும், அதை அவர் பொருட்படுத்தவில்லை என்கிற உண்மையைக் குறிப்பிட விரும்புகிறோம். மாநகராட்சி அதிகாரிகளும், காவல் துறையினரும் எதிர்க்கட்சியான திமுக விதிகளை மீறி வைத்த பதாகைகளையே அப்புறப்படுத்தாத நிலையில், இப்போது ஆளுங்கட்சிப் பிரமுகரான ஜெயகோபால் என்பவர் வைத்திருந்த பதாகையை அகற்றாததில் வியப்பென்ன இருக்கிறது?

பதாகைகளைப் பொருத்தவரை, விதிமுறை மீறல்கள்தான் வழக்கமாகிவிட்டிருக்கின்றன. இதில் அரசியல் கட்சிகளை மட்டுமே குற்றம் சுமத்துவதில் அர்த்தமில்லை. அதிகாரிகளின் மெத்தனமும் மிக முக்கியமான காரணம். தங்களது கடமையைச் செய்யாமல் பதாகைகளை அனுமதித்ததற்காக இதுவரை எந்தவோர் அரசு அதிகாரியோ, காவல்துறை அதிகாரியோ தண்டிக்கப்படவில்லை என்பது கசப்பான உண்மை. 

உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற விதிமுறை மீறல் பதாகைகளை அகற்ற முற்பட்டால், தாங்கள் ஆட்சியாளர்களால் இடமாற்றம் செய்யப்படுவோம் என்கிற அதிகாரிகளின்  பதில் ஏற்புடையதாக இல்லை. இடமாற்றத்தைத் துணிந்து எதிர்கொள்ள இயலாத, முதுகெலும்பில்லாத நிர்வாக இயந்திரம்தான் பதாகைப் பிரச்னைக்கு அடிப்படைக் காரணம். 

எந்தவிதக் கொள்கையும் இல்லாமல், விளம்பரங்களின் மூலம் மட்டுமே தங்களை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் அரசியல் தலைவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட அரசியலை அனுமதிப்பதும், ஆதரிப்பதும் நமது தவறு. அதற்கான விலையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com