தலையங்கம்

சட்டம் தீர்வல்ல!

7th Sep 2019 02:06 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

அஸ்ஸாம் தேயிலைத் தோட்டத்திலுள்ள மருத்துவமனை ஒன்றில் ஆத்திரம் கொண்ட கூட்டம், மருத்துவர் ஒருவரைத் தாக்கியதில் அவர் மரணமடைந்திருக்கிறார். ஒட்டுமொத்த இந்தியாவையும் அந்தச் சம்பவம் உலுக்கியது. குறிப்பாக, மருத்துவர்கள் மத்தியிலும்,  மருத்துவ சேவையில் ஈடுபட்டிருப்பவர்கள் மத்தியிலும் அந்தச் சம்பவம் அச்சத்தையும் ஆத்திரத்தையும் ஒருசேர எழுப்பியதில் வியப்படைய ஒன்றுமில்லை. தி லான்செட் மருத்துவ இதழின் ஆய்வின்படி, 75% இந்திய மருத்துவர்கள் தங்களது மருத்துவப் பணியில் ஏதாவது ஒருவகையிலான எதிர்ப்பையோ, பாதிப்பையோ எதிர்கொள்கிறார்கள். 
பொது மக்களின் கருத்துக்காக மாதிரி மசோதா ஒன்றை தனது இணையதளத்தில் மத்திய சுகாதாரம்  மற்றும் குடும்பநல அமைச்சகம்  கடந்த திங்கள்கிழமை பதிவிட்டிருக்கிறது. கருத்துக்கேட்புக்கு முன்பு வைக்கப்பட்டிருக்கும் மாதிரி மசோதாதான் இது என்பதால், இது குறித்த கருத்துகளை மருத்துவத் துறையினரும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் தெரிவிப்பார்கள். அதன் அடிப்படையில்தான் சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்படும்.
சுகாதார அமைச்சகம் முன்மொழிந்திருக்கும் மாதிரி மசோதாவின்படி, மருத்துவர்களையோ, மருத்துவமனைகளையோ கவனக் குறைபாடுகளுக்காகத் தாக்க முற்பட்டால், 10 ஆண்டு சிறைத் தண்டனை முன்மொழியப்பட்டிருக்கிறது. அப்படி தாக்குபவர்களுக்கு சிறைத் தண்டனை மட்டுமல்லாமல், அபராதமும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதிகரித்து வரும் மருத்துவர்கள், மருத்துவமனைகள் மீதான தாக்குதல்களிலிருந்து இந்தச் சட்டம் பாதுகாக்கும் என்று உறுதிபடச் சொல்ல முடியாவிட்டாலும், ஓரளவுக்கு கட்டுப்படுத்தும் என்று கருதலாம். 
அரசு மருத்துவமனைகளாக இருந்தாலும், தனியார் மருத்துவமனைகளாக இருந்தாலும் அவை நிரம்பி வழிகின்றன. எல்லா நோயாளிகளையும் பொறுமையாகப் பரிசோதிப்பதற்கான அவ
காசம் மருத்துவர்களுக்கு இல்லை. அதிகமான நோயாளிகளை எதிர்கொள்ள முடியாத பணிச்சுமை காணப்படும் நிலையில், கவனக்குறைவு ஏற்படுவதைத் தடுக்க முடியாது. நோயாளிகள் பொறுமை இழக்கும்போது வன்முறையில் முடிகிறது. 
நேசிக்கும் நபர்களின் மறைவு என்கிற தாளாத் துயரில் ஆழ்ந்திருப்பவர்கள் தங்களது ஆத்திரத்தை வெளிப்படுத்துவது இயல்பு. அவர்களைக் கையாளும் பொறுமையும், சாதுர்யமும் மருத்துவர்களுக்கும், மருத்துவமனை ஊழியர்களுக்கும் இல்லாமல் இருப்பதும்கூட தாக்குதல்களுக்குக் காரணம்.
மருத்துவத் துறையில் கார்ப்பரேட் கலாசாரம் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அரை நூற்றாண்டு காலத்துக்கு முன்பு இருந்த குடும்ப மருத்துவர் முறை அருகி வருகிறது. குடும்ப மருத்துவர்களுக்கு தங்களது ஒவ்வொரு நோயாளியையும், அவர்களது குடும்பத்தினரையும் நன்றாகத் தெரிந்திருந்தது போய், இப்போது இயந்திரகதியில் சிகிச்சைகளை மேற்கொள்ளும் மருத்துவர்களின் காலம் வந்துவிட்டது. அதனால், நோயாளிகளுக்கு மருத்துவர்களின் திறமை மீதோ, அவர்களது செயல்பாடுகளின் மீதோ நம்பிக்கையற்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இளைய தலைமுறை மருத்துவர்களும், மருத்துவ ஊழியர்களும், தொழில் ரீதியாக நோயாளிகளை அணுகுவதால் இரு தரப்பினருக்கும் இடையில் மருத்துவம் வியாபாரமாகத் தோற்றமளிக்கிறதே தவிர, அதன் அடிப்படையான சேவை என்பது இல்லாமல் போய்விட்டது. 
மருத்துவப் படிப்பு சாமானியர்களுக்கு எட்டாக்கனியாகிவிட்டிருக்கிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நன்கொடைகள் கொடுத்து அதிக அளவில் கல்விக் கட்டணம் கொடுத்து தேர்ச்சி பெறும் மருத்துவர்களின் மனநிலை, சேவையின் அடிப்படையில் இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்க முடியாது. அதனால், சாமானிய நோயாளிகள் அவர்கள் மீது நம்பிக்கை இழப்பதும், கோபப்படுவதும், தாங்கள் ஏமாற்றப்படுவதாகக் கருதுவதும் அதிகரித்து வருகிறது என்கிற உண்மையை ஏற்றுக்கொள்ள மருத்துவத் துறையினர் தயங்குகிறார்கள். 
இந்தியாவில் 10,000 பேருக்கு ஓர் அரசு மருத்துவர் என்கிற விகிதம் காணப்படுகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி குறைந்தது 1,472 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும். இதனால், மருத்துவமனைகளில் அதிலும் குறிப்பாக அரசு மருத்துவமனைகளில், அதிக அளவில்  நோயாளிகள் குவியும்போது, மருத்துவர்களால் தங்களது கடமையைத் திறம்படச் செய்ய முடிவதில்லை. மருத்துவமனைகளில் நோயாளிகளின் பிரச்னைகளை தீர்த்து வைக்கும் குறைதீர்ப்பு அமைப்பு முறையாகச் செயல்படாமல் இருப்பது, நோயாளிகள் தங்கள் கோபத்தை மருத்துவத் துறையினர் மீது காட்டுவதற்கு முக்கியமான காரணம்.
மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையேயான உறவு சரியாக இருக்க வேண்டுமென்றால், இரு தரப்பினருக்கும் இடையே புரிதல் வேண்டும். நோயாளிகளிடமோ, அவர்களது உறவினர்களிடமோ குடும்ப மருத்துவர்களைப்போல நயமாகவும், ஆதரவுடனும் பேசி அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த இளைய தலைமுறை மருத்துவர்கள் தவறிவிடுகிறார்கள். 
எல்லா நோய்களையும்  குணப்படுத்திவிட மருத்துவர்கள் மந்திரவாதிகளல்ல. மருத்துவர் - நோயாளிகள் விகிதாசாரத்தை முறைப்படுத்துவது, சமூக சேவகர்களின் உதவியுடன் நோயாளிகளையும் அவர்களது உறவினர்களையும் ஆற்றுப்படுத்துவது, மருத்துவக் கட்டணத்தை முடிந்தவரையில் கட்டுப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் நோயாளிகள் மருத்துவர்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்த உதவும். 
சட்டம் மூலம் தாக்குதல்களைக் குறைக்க முடியுமே தவிர, முற்றிலுமாகத் தடுத்துவிட முடியாது. நோயாளிகளின் நம்பிக்கையைப் பெறுவதன் மூலம்தான் தாக்குதல்களைத் தடுக்க முடியும்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT