திங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019

வெளியேறுகிறார் மே!

By ஆசிரியர்| Published: 31st May 2019 02:53 AM

பிரிட்டன் பிரதமர் தெரசா மே பதவி விலகுவதாக அறிவித்திருக்கிறார். ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து விலகுவதற்கான அவரது அரசின் நிபந்தனைகளை மூன்று முறை பிரிட்டன் நாடாளுமன்றம் நிராகரித்த நிலையில், பதவியில் தொடர்வதற்கு அவருக்கு  வழியில்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. ஜூன் 7-இல்  அவர் பதவி விலகும்போது, அதனால் பிரிட்டன் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு முடிவு ஏற்படுமா என்றால், அதற்கான சாத்தியமே இல்லை. 
வெளியேற்ற ஒப்பந்தத்துக்கு மே 22-ஆம் தேதி நான்காவது முறையாக பிரிட்டன் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற பிரதமர் மே திட்டமிட்டிருந்த முயற்சி அரைகுறையாக நின்று போனது. ஐரோப்பியக் கூட்டமைப்புக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் பிரதமர் தெரசா மேயின் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வி அடைந்தது. நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற முடியாது என்பதை அவர் புரிந்துகொண்டார். ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் விலக வேண்டும் என்கிற பிரெக்ஸிட் முடிவை வலியுறுத்தும் நைஜல் ஃபராஜ் தலைமையிலான பிரெக்ஸிட் ஆதரவு கட்சிக்குக் கிடைத்த எதிர்பாராத பெரும் வெற்றி, பிரதமர் மேயின் எல்லா திட்டங்களையும் தகர்த்தது.
ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து விலகுவது குறித்து பிரதமர் மே நடத்திய பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வெளியேற்ற ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் குறித்து அவரது கன்சர்வேட்டிவ் கட்சியிலேயே பரவலான கருத்து வேறுபாடு இருக்கிறது. அதனால்தான் மூன்று முறையும் நாடாளுமன்றத்தில் வெளியேற்ற ஒப்பந்தத்துக்கான அங்கீகாரத்தைப் பிரதமர் மேயால் பெற முடியவில்லை. 
ஐரோப்பியக் கூட்டமைப்பு என்கிற ஒருங்கிணைந்த சந்தையிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது என்கிற அடிப்படையில் வெளியேற்ற ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. அதனால் ஐரோப்பியக் கூட்டமைப்பின் சுங்கக் கட்டணம், ஐரோப்பியக் கூட்டமைப்பு உறுப்பினர் நாடுகளின் குடியுரிமை பெற்றவர்கள் பிரிட்டனில் வேலை பார்க்கும் உரிமை, ஐரோப்பியக் கூட்டமைப்பின் பிரதிநிதி ஒருவர் பிரிட்டனில் இருப்பது உள்ளிட்ட நிபந்தனைகளை கன்சர்வேட்டிவ் கட்சியில் மட்டுமல்ல, பிரிட்டனிலுள்ள அனைத்துக் கட்சிகளிலும் விமர்சிப்பவர்கள் இருக்கிறார்கள். பிரதமர் மே முன்மொழிந்திருக்கும் வெளியேற்ற ஒப்பந்தம், ஐரோப்பியக் கூட்டமைப்புக்குச் சாதகமாகவும் பிரிட்டனுக்கு எதிராகவும் இருக்கிறது என்பதுதான் அவர்களது பரவலான குற்றச்சாட்டு. 
அதே நேரத்தில், ஐரோப்பியக் கூட்டமைப்பில் தொடர்வதற்குச் சாதகமாக இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் இல்லை. பிரிட்டன் வெளியேறும் நிலைமையாக இருந்தாலும், நிபந்தனைகளே இல்லாத வெளியேற்றமாக இருந்தாலும், ஐரோப்பியக் கூட்டமைப்புடன் உள்ள உறவையும், பொருளாதாரத் தொடர்பையும் பிரிட்டன் துண்டித்துக் கொள்ளக் கூடாது என்பது அவர்களது வாதம். 
ஐரோப்பியக் கூட்டமைப்பும், 1973-இல் பிரிட்டனுடன் ஏற்படுத்திக் கொண்ட உறவு முறிவதை விரும்பவில்லை. இதனால் பலவீனப்படுவதுடன், கூட்டமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் வேறுசில நாடுகளும் பிரிட்டனைத் தொடர்ந்து வெளியேற முற்படக் கூடும் என்று ஐரோப்பியக் கூட்டமைப்பு அச்சப்படுகிறது.
தனது அரசியல் முடிவை பிரதமர் மே தானே எழுதிக் கொண்டார் என்றுதான் கூற வேண்டும். 2017-இல் தனது தலைமையை வலுப்படுத்திக்கொள்ள அவர் எடுத்த திடீர் முடிவுதான் இடைக்காலத் தேர்தல். அவர் எதிர்பார்த்ததுபோல், கன்சர்வேட்டிவ் கட்சி பெரும்பான்மை பலம் பெறாததால் அவரது அரசியல் ராஜதந்திரம் தோல்வியடைந்தது.
பதவி விலகும் பிரதமர் தெரசா மேயின் இடத்தை நிரப்பப் போவது யார் என்கிற கேள்வி பிரிட்டனில் மட்டுமல்ல, உலக நாடுகளிளெல்லாம் விவாதிக்கப்படுகிறது. அது அவ்வளவு எளிதாக இருக்கப் போவதில்லை. பிரதமர் பதவிப் போட்டியில் முன்னணியில் இருப்பவர் பிரிட்டனின் முன்னாள் வெளியுறவுச் செயலராக இருந்த போரீஸ் ஜான்சன். வெளியேற்ற ஒப்பந்தம் ஏற்கப்பட்டாலும், ஏற்கப்படாவிட்டாலும், திட்டமிட்டபடி அக்டோபர் 31-ஆம் தேதி ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்பதில் தீர்மானமாக இருப்பவர் அவர். 
சமீபத்தில் நடந்த ஐரோப்பியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் பிரிட்டனின் ஆளுங்கட்சியான பிரதமர் தெரசா மேயின் கன்சர்வேட்டிவ் கட்சி நான்காவது இடத்தைத்தான் பெற முடிந்தது. கன்சர்வேட்டிவ் கட்சியைப் போலவே, பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியும் பிரெக்ஸிட்டைப் பொருத்தவரை பிளவுபட்டிருக்கிறது. ஐரோப்பியக் கூட்டமைப்புத் தேர்தலில் மூன்றாவது இடத்துக்குத் தொழிலாளர் கட்சி தள்ளப்பட்டது. 
புதிதாகத் தொடங்கப்பட்டிருக்கும் நைஜல் ஃபராஜின் (யுனைடெட் கிங்டம் இன்டிபென்டட் கட்சி) வெளியேற்றத்தை வலியுறுத்தும் பிரெக்ஸிட் ஆதரவு கட்சி. அது பிரிட்டனிலுள்ள பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. நைஜல் ஃபராஜின் யுனைடெட் கிங்டம் இன்டிபென்டட் கட்சி, குடியேற்றத்துக்கு எதிரான, இன உணர்வுக்கு ஆதரவான கட்சி என்பதால், 
மக்கள் மத்தியில் அதற்குப் பெருகி வரும் ஆதரவு ஏனைய கட்சிகளை அச்சுறுத்துகிறது. 
பிரதமர் தெரசா மேயின் பதவி விலகலால் பிரிட்டன் எதிர்கொள்ளும் பிரச்னைகள் மேலும் அதிகரிக்குமே தவிர, குறைய வாய்ப்பில்லை. தேர்தல் நடத்தப்பட்டாலும் தீர்வு கிடைக்குமா என்பது சந்தேகம்தான். உலகமே அண்ணாந்து பார்த்து வியந்த பிரிட்டனின் இன்றைய நிலை, ஆச்சரியப்படுத்தவில்லை, அனுதாபப்பட வைக்கிறது!
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

கலாசாரக் கோளாறு! | அதிகரித்துவிட்டிருக்கும் 'கட்அவுட்' - பேனர்' கலாசாரம் குறித்த தலையங்கம்
ஆட்டம் காணும் அஸ்திவாரம்! | உயர் கல்விச் சாலைகளின் கற்பித்தல் தரமும், அதிலிருந்து வெளிவரும் மாணவர்களின் தரமும் குறித்த தலையங்கம்
பாலையாக மாறும் பூமி!
விரயமல்ல, வளர்ச்சிக்கான முதலீடு!
காஷ்மீரின் மறுபக்கம்!