தவறான சிகிச்சை!

தரமான கல்வியைப் போலவே, தரமான மருத்துவ சிகிச்சை என்பதும் நடுத்தர

தரமான கல்வியைப் போலவே, தரமான மருத்துவ சிகிச்சை என்பதும் நடுத்தர வர்க்கத்தினருக்கும், கீழ்த்தட்டு மக்களுக்கும் எட்டாக்கனியாகி வருகிறது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்தியர்களில் பெரும்பான்மை மக்கள் கடனாளிகளாவதும், வறுமையில் தள்ளப்படுவதும் மருத்துவச் செலவுகளால்தான் என்று பல்வேறு ஆய்வுகள் புள்ளிவிவரங்களுடன் உறுதிப்படுத்துகின்றன.  

கடந்த ஆண்டு சுதந்திர தின விழா உரையில் பிரதமர் நரேந்திர மோடி "ஆயுஷ்மான் பாரத்' என்கிற தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டத்தை அறிவித்தபோது அதை மிகுந்த ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் ஒட்டுமொத்த இந்தியாவே போற்றி வரவேற்றது. வறுமைக் கோட்டுக்குக் கீழேயுள்ள நகர்ப்புறத் தொழிலாளர்கள், கிராமப்புற மக்கள் ஆகியோரில் 10 கோடி குடும்பங்களை சமூக, பொருளாதார, ஜாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கின் அடிப்படையில் அடையாளம் கண்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டொன்றுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு வழங்குவது என்பதுதான் "ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தின் நோக்கம். வேறு எந்த நாட்டிலும் இந்த அளவிலான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிவிக்கப்படவில்லை என்று உலகமே வியந்து பாராட்டியது. 

நரேந்திர மோடி அரசின் "எண்ம இந்தியா' திட்டம் காரணமாக தகவல் தொழில்நுட்பப் பயன்பாடு "ஆயுஷ்மான் பாரத்' திட்டச் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியாவுக்கு அத்தியாவசியமான நல்லதொரு திட்டம் அறிவிக்கப்பட்டது என்றாலும்கூட, அந்தத் திட்டம் எதிர்பார்த்ததுபோல செயல்படவில்லை என்பதற்கு மிக முக்கியமான காரணம், வெளிப்படைத்தன்மையுள்ள கலந்தாலோசனையின் அடிப்படையில் மருத்துவ சிகிச்சைக்கான கட்டணம் நிர்ணயிக்கப்படாததும், அரசு பொது மருத்துவமனைகளின் கட்டமைப்பு வசதிகளும், தரமும், பொறுப்புணர்வும் உறுதிப்படுத்தப்படாததும் என்பது வெளிப்படை. இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் இடையே பனிப்போர் நடந்து கொண்டிருக்கிறது என்பது பூதாகரமாக வெடிக்கக் காத்திருக்கும் மிகப் பெரிய பிரச்னை. அதன் தொடக்கம்தான் மகாராஷ்டிர மாநிலத்தில் வெளிப்பட்டிருக்கும் அதிருப்தி. 

மகாராஷ்டிர அரசின், "மகாத்மா ஜோதிபா பூலே ஜன ஆரோக்கிய யோஜனா' என்பது, தமிழகத்தின் முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் போன்றது. இந்தத் திட்டத்தின் மூலம், 2.25 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு மகாராஷ்டிர அரசால் மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது. பல தனியார் மருத்துவமனைகள் புற்றுநோய் சிகிச்சையில் இந்தத் திட்டத்தை தவறாகப் பயன்படுத்துகின்றன என்று கூறி நூற்றுக்கும் அதிகமான கட்டணக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. 

இந்தப் பிரச்னையில் அரசையோ, தனியார் மருத்துவமனைகளையோ குறிப்பிட்டு குற்றஞ்சாட்டிவிட முடியவில்லை. புற்றுநோய் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் கதிரியக்க சிகிச்சை என்கிற பெயரில் அவர்களது காப்பீட்டுத் தொகை முழுவதையும் தனியார் மருத்துவமனைகள் வசூலித்து விடுகின்றன என்பது அரசுத் தரப்பு குற்றச்சாட்டு. தங்களைக் குறைந்த கட்டணத்திலான, காலாவாதியான மருத்துவ சிகிச்சை முறையைக் கையாள அரசு வற்புறுத்துவதாக மருத்துவமனைகள் குற்றம்சாட்டுகின்றன. 

அரசின் காப்பீட்டுத் திட்டத்தைப் பயன்படுத்தி பல தனியார் மருத்துவமனைகள் தங்களது முதலீட்டை மீட்டெடுக்க முயற்சிக்கின்றன என்றும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் கோரப்படும் பெரும்பாலான இழப்பீடுகள் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள புற்றுநோய்க்கான கதிரியக்க சிகிச்சையாகவே இருக்கின்றன என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.  

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், தனியார் மருத்துவமனைகளுக்கும்-காப்பீட்டு நிறுவனங்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பாளர்கள் (டிபிஏ) செயல்படுகிறார்கள். தேர்ந்தெடுக்கும் சிகிச்சை முறை குறித்துத் தெளிவுபடுத்தும்படி வற்புறுத்துவதுடன், புற்று நோயாளிகளுக்கு எந்தவித சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது வரை காப்பீட்டுத் தொகையை அனுமதிப்பதற்கு முன்னால் ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை வழங்க முற்படுகிறார்கள் என்பது தனியார் மருத்துவமனைகளின் குற்றச்சாட்டு. தேவையில்லாமல் கதிரியக்க சிகிச்சை வழங்கி மொத்த காப்பீட்டுத் தொகையையும் மருத்துவமனைகள் பெற்றுவிட முயற்சிக்கின்றன என்பதால் 
நோயாளிகளின் நலன் கருதியும், அரசின் திட்டம் தவறாகப் பயன்படுத்துவது தடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் தாங்கள் தலையிட வேண்டியிருக்கிறது என்பது காப்பீட்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர்களின் விளக்கம். 

தனியார் மருத்துவமனைகளுக்கும் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் இடையே நடக்கும் பனிப்போரால் பல நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவிக்கிறார்கள். அதிகக் கட்டணத்துடனான நவீன சிகிச்சை முறைகளைக் கையாளத் தாங்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதால் நோயாளிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்கின்றன தனியார் மருத்துவமனைகள். 

இந்தியா முழுவதும் பஞ்சாயத்துகளிலிருந்து வட்ட, மாவட்ட, மாநில, தேசிய அளவிலான அரசு மருத்துவமனைகளில் மக்களின் வரிப்பணம் கடந்த 70 ஆண்டுகளாக கோடிக்கணக்கில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. காப்பீடு வழங்க அரசு பொதுத் துறை  நிறுவனங்கள் செயல்படுகின்றன. அரசின் காப்பீட்டுத் திட்டங்களை, பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களின் மூலம் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே செயல்படுத்துவது என்று முடிவெடுத்தால் என்ன? இதன் மூலம் அரசு மருத்துவமனைகளின் தரமும் உயரும், காப்பீட்டுத் திட்டமும் வெற்றி பெறும், காப்பீட்டுத் திட்டத்தின் நோக்கமும் நிறைவேறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com