இனி மூன்று நாள் காத்திருப்பு...

ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி

ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி 17-ஆவது மக்களவைத் தேர்தலுக்கான ஏழு கட்ட வாக்குப்பதிவு நேற்றுடன் முடிவடைந்திருக்கிறது. கடந்த 2014 தேர்தலில் 9 கட்டங்களாக 10 நாள்கள் மட்டுமே மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இந்த முறை ஏழு கட்டங்களாகக் குறைந்தும்கூட 39 நாள்கள் நீண்டு நின்றது. 
2014-இல் 83.4 கோடி வாக்காளர்கள் வாக்களித்தார்கள் என்றால், இந்த முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 90 கோடியாக அதிகரித்திருக்கிறது. கடந்த முறை 39.7 கோடியாக இருந்த பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 43.2 கோடியாக அதிகரித்திருக்
கிறது. 2014 தேர்தலில் 9.2 லட்சம் வாக்குச்சாவடிகள் இருந்தன என்றால், இந்த முறை 13.35 லட்சம் வாக்குச்சாவடிகள். அதுமட்டுமல்ல, 2014-இல் 17 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்பட்டன என்றால், இப்போது அதுவே 23.3 லட்சமாக உயர்ந்திருக்கிறது. 
மே 23-ஆம் தேதிதான் முடிவுகள் வெளிவர இருக்கின்றன. இந்த 43 நாள்கள் இடைவெளி தேவைதானா என்கிற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை. நிலப்பரப்பு அளவிலும் மக்கள்தொகை அளவிலும், தொகுதிகள் எண்ணிக்கையிலும் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில், பல கட்டங்களாக தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு நடத்த முற்பட்டதைக் குறை காண முடியாது. அதற்காக, ஏழு கட்ட வாக்குப்பதிவா? மேற்கு வங்கத்திலும் பிகாரிலும்கூட உத்தரப் பிரதேசத்தைப்போல பல கட்ட வாக்குப்
பதிவு நடத்த வேண்டிய அவசியம்தான் என்ன? எதிர்க்கட்சிகள் எழுப்பியிருக்கும் கேள்விகளில் நியாயம் இல்லாமல் இல்லை. 
இந்தியாவின் மக்களவைத் தேர்தல் என்பது பிரம்மாண்ட
மானது. உலகின் வேறு எந்த நாடும் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஜனநாயக சாதனை. 10 லட்சத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகளுடன் எந்த ஒரு வாக்காளரும் தனது வாக்கைப் பதிவு செய்ய இரண்டு கி.மீ.க்கும் அதிகமாக பயணிக்க வேண்டியதில்லை என்கிற அளவிலான முன்னேற்பாடு அபார சாதனை. 20,000-க்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் வனப்பகுதிகளில் அமைந்திருக்கின்றன என்பதும், 1.1 கோடி அரசு ஊழியர்கள் நடந்தும், வாகனங்கள் மூலமும், ரயில் மூலம், படகுகள் மூலமும், ஹெலிகாப்டர் மூலமும், சில இடங்களில் யானைகள் மீதேறியும்கூடப் பயணித்து வாக்குப்பதிவை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறார்கள் என்பதையும் பார்த்து உலகமே வியக்கிறது. 
நேற்றைய கடைசிக் கட்ட வாக்குப்பதிவில் 59 மக்களவைத் தொகுதிகள் இடம்பெற்றன. அவற்றில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாராணசி தொகுதியும் அடக்கம். வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், 543 மக்களவைத் தொகுதிகளில் 542 தொகுதிகளில்தான் வாக்குப்பதிவு நடைபெற்றிருக்கிறது. 
ஒருசில இடங்களில் வன்முறையும், கலவரமும், துப்பாக்கிச் சூடும் நடந்தன என்றாலும்கூட, பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் ஏற்பட்டுவிடாமல் 17-ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவை வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்கு தேர்தல் ஆணையத்துக்குப் பாராட்டுகள். ஆளும்கட்சியின் (பிரதமரின்) பிரசாரத்துக்கு உதவும் வகையில் வாக்குப்பதிவை அமைத்துக் கொடுத்தது என்கிற குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது என்றாலும்கூட, இந்தியத் தேர்தல் முறையில் மக்கள் தீர்ப்புக்கு எதிராக எதையும் செய்துவிட முடியாது என்பதுதான் உண்மை. 
கடைசிக் கட்ட வாக்குப்பதிவு முடிந்ததும் பல்வேறு அமைப்புகளின் வாக்குக்கணிப்புகள் ஊடகங்களில் வெளியாகியிருக்கின்றன. இந்தியத் தேர்தலின் சிறப்பே அதன் ரகசியத்தன்மைதான். அது பலமுறை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. வாக்குக்கணிப்புகளையும் கருத்துக்கணிப்புகளையும் மீறி இந்திய வாக்காளர்கள் பல தேர்தல்களில் அதிர்ச்சித் திருப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். வாக்காளர்களின் தீர்ப்பை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வெளிப்படுத்தும் வரை எந்தவொரு கருத்துக்கணிப்பையும் துணிந்து இறுதி  முடிவாக எடுத்துக்கொண்டுவிட முடியாது.
வாக்குக்கணிப்பு முடிவுகள், பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவிக்கின்றன. மே 23-ஆம் தேதி வெளிவர இருக்கும் இறுதி முடிவுகளும், பெரும்பாலான வாக்குக்கணிப்பு முடிவுகளை உறுதிப்படுத்துமேயானால், அந்த வெற்றிக்குக் காரணம், ஆளும் கூட்டணியின் சாதனைகள் என்பதைவிட எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை என்பதைத்தான் குறிப்பிட வேண்டும். "பாஜக மீண்டும் ஆட்சி அமைக்குமானால் அதற்குக் காரணம் காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறைதான்' என்கிற தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கேஜரிவாலின் குற்றச்சாட்டை முற்றிலுமாக புறந்தள்ளிவிட முடியாது. 
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தில்லி, உத்தரப் பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகளுடன்தொகுதி உடன்பாட்டை  காங்கிரஸ் ஏற்படுத்திக் கொண்டிருந்தால், கணிசமான தொகுதிகளில் பாஜக தோல்வியடைந்திருக்கக்கூடும். ஆனால், காங்கிரஸின் கணக்கு வேறாக இருந்தது. கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் வரலாறு காணாத தோல்வியை அந்தக் கட்சி எதிர்கொண்ட நிலையில், இந்தத் தேர்தலில் தனது எண்ணிக்கையை இரு மடங்காக அதிகரித்தாலேகூட அது மிகப்பெரிய வெற்றியாக இருக்கும் என்று காங்கிரஸ் கருதியிருக்கக்கூடும். 
2014 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றபோது தனது முதல் "மனதின் குரல்' நிகழ்ச்சியில், பிரதமராக வேண்டும் என்று ஆசைப்பட்ட  ஒரு சிறுமியின் கேள்விக்கு பிரதமர் நரேந்திர மோடி  அளித்த பதில் - "அதற்கு 2024 வரை காத்திருக்க வேண்டும்'. தெரிந்துதான் சொன்னாரோ?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com